அரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்?

10,694

அரசாங்க வேலை என்றால் ஆணி அடித்தாற்போல் ஒரே வேலை வாழ்க்கை முழுவதும். பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ வேலை பார்த்தே ஆகவேண்டும்.

மாதம் பிறந்தால் மணி அடித்தாற்போல money யும் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

சொந்த தொழில் என்றால் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல. அது ஒருவகையாக வாழ்க்கை ஓடும்.

சுதந்திரமான வாழ்க்கை, யாருக்கும் கை கட்டாமல், பதில் சொல்லாமல் நிம்மதியாக காலம் ஓடும்.

அதே நேரத்தில் சிலருக்கு சொந்தத் தொழில் அமையாமலும், அரசாங்க வேலை கிடைக்காமலும், மற்றொருவரை சார்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படும்.

தனியார் நிறுவனங்களிலும் ஒருசிலர் ஒரே இடத்தில் இருபது வருடம், முப்பது வருடம் வேலை பார்ப்பவர்களும் உண்டு.

ஆனால் சிலர் 500, 1000 சம்பளம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காகவோ, வேலையில் ஏற்படும் சிறு பிரச்சினை காரணமாக வேலையை மாற்றிக்கொண்டே இருப்பர்.

அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

அரசு வேலைக்கான விதிகள்:

ஒரு ஜாதகத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால் லக்ன, ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன், செவ்வாய் போன்ற ராஜகிரகங்கள் தொடர்புகொண்டு, லக்ன சுபர்கள் அல்லது பொது சுபர் குரு, வளர்பிறை சந்திரன் பார்வை பெற்று, பாவ கிரகங்களின் தொடர்பு சூரியனுக்கும் செவ்வாய்க்கும் 10மிடத்திற்கும் கிடைக்காமல், நல்ல தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும்.

சொந்த தொழிலுக்கான விதிகள்:

எந்த லக்னம் ஆனாலும் லக்னத்திற்கு பத்தாம் இடத்து அதிபதி, தொழில் ஸ்தானாதிபதி எனப்படுவார். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி நன்கு வலுப்பெற்று ஆட்சி, உச்சம், திக் பலம் மற்றும் சுப தொடர்புகளில் இருந்து, ஆறாம் அதிபதி வலு குறைந்தால் அவர் நிச்சயமாக சொந்த தொழில் தான் செய்வார்.

சிலருக்கு பத்தாம் அதிபதியாக செவ்வாயும், சூரியனும் அமையப்பெற்று அல்லது பத்தாம் அதிபதி நன்கு வலுப்பெற்று சூரியன், செவ்வாயுடன் தொடர்பு பெற்று, சுப தொடர்பில் இருந்தால் அரசாங்க வேலை செய்துகொண்டே பகுதி நேரமாக சொந்த தொழிலும் செய்வர்.

வேலையில் அடிக்கடி இடமாற்றத்திற்கான அமைப்பு:

ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி பலம் குறைந்து, பத்தாம் அதிபதியை விட ஆறாம் அதிபதி கொஞ்சம் வலு கூடி அதுவும் கெட்டிருந்தால், அவர் மற்றவருக்கு பணிசெய்து அதிலும் திருப்தி இல்லாமல் அடிக்கடி இடமாற்றம் செய்து கொண்டே இருப்பார்.

பத்தாம் அதிபதியை விட, ஆறாம் அதிபதி் வலுவாக இருந்தால் ,தனியார் துறையில் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய அமைப்பு ஏற்படும்.

வேலை செய்யாமல் அடுத்தவர் உழைப்பை அண்டி பிழைக்கும் ஜாதக அமைப்பு:

லக்னத்திற்கு பத்தாம் அதிபதி, 6 ஆம் அதிபதி வலு குறைந்து 1, 5, 9ஆம் அதிபதி ஒரளவு வலு கூடினால் அவர்களுக்கு யாராவது ஒருவரின் மூலம் அடிப்படைத் தேவைகளும், உணவும் கிடைக்கப்பெறும்.

சனியும் வலு குறைந்திருக்கும். (சனி தொழில் காரகன்)

திசா புத்தியும் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு போனா வேர்வை வரும்.வேர்வை வந்தா நம்ம உடம்புக்கு ஒத்துக்காது.

ஒரு செருப்பை வாயில் கவ்வ கொடுத்து கொண்டு, சாணில செருப்பை முக்கி, உச்சந்தலையில நச்சுனு அடிச்சாலும் கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகக்கூடாது என்ற கொள்கையில் இருப்பவர்கள் இவர்களே. இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More