அஸ்தங்கம் என்றால் என்ன?
சூரியன் மிக ஒளிபொருந்திய கிரகம். இதற்கு மிக அருகில் செல்லும் கிரகங்கள் சில குறிப்பிட்ட இடைவெளியில் (டிகிரியில்)தன்னுடைய சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடைகின்றன. தன்னுடைய சுயத்தை சுயத்தன்மையை இழக்கிறது. அப்படி சுயத்தை இழக்கும் கிரகங்கள் அதாவது சுய ஒளியை இழக்கும் கிரகங்கள் தன் ஆதிபத்திய பலத்தையும், காரக பலத்தையும் இழக்கும். அஸ்தங்க கிரகங்கள் கோட்சாரங்களிலும், ஜனன ஜாதகங்களிலும் நன்மைகளை தருவதில்லை. அஸ்தமனம் அடையும் கிரகங்களின் பலாபலன்களை பிடுங்கி சூரியன் தன்திசையில் தானே தருவார்.
உதாரணமாக கன்னி லக்ன ஜாதகருக்கு சுக்கிரன் ரிஷபத்தில் ஒரே பாதத்தில் இணைந்து அம்சத்திலும் ஒரே ராசியில் இருக்க, குருவும் கெட்டு போக இவருக்கு சுக்கிரன் தசையில் தந்தையின் இழப்பு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு, திருமணம் ஆகாத நிலை போன்ற பலன்களை ஏற்படுத்தி பின் சூரியன் திசையில் திருமணம், சொத்து சேர்க்கைகளை தனது திசையில் சூரியன் தருவார். இது உதாரணத்திற்காக சொல்லப்பட்டது.
சில குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் அஸ்தங்கம் அடையும் கிரகங்கள் சூரியனுக்கு பின்னால் இருந்து தன்னுடைய சுய ஒளியை பூமிக்கு அனுப்ப முடியாமல் தடுக்கப்படுவதால் அந்த கிரகங்களின் பலாபலன்கள் ஜாதகர்களுக்கு கிடைப்பதில்லை. சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய் இவர்களெல்லாம் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்கள். இவர்கள் சூரியனுக்கு முன்னால் இருந்து அஸ்தங்கம் அடையும் போது அவ்வளவுக்காக கெடுபலன்கள் செய்வது இல்லை.
மிக மெதுவாக நகரும் கிரகங்களான சனி,குரு இவர்கள் சூரியனுக்கு பின்னால் இருந்து அஸ்தமனம் அடையும் போது அவ்வளவுக்காக கெடுபலன்களை செய்வது இல்லை. இதை நீங்கள் பல ஜாதகங்களை பார்த்து ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
நம்மிடம் வரும் பல ஜாதகங்களில் வக்ரம், அஸ்தமனம், வக்ரா அஸ்தமனம் குறிப்படப்படுவதில்லை.கண்டிப்பாக வக்ரம், அஸ்தங்கம்,ராசிக்கட்டத்தில் குறிக்கவேண்டும்.கம்ப்யூட்டர் ஜாதகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சில கம்ப்யூட்டர் ஜாதகங்களில் பாதசாரத்தில் வக்ரம், அஸ்தங்கம் குறிப்பிட பட்டிருக்கும்.
சில குறிப்பிட்ட நிலைகளில் சனியும், அட்டமாதிபதியும் அஸ்தங்கம் அடையும் நிலையில் தீர்க்காயுளை தருவதில்லை.
லக்னாதிபதி அஸ்தங்கமடையும் போது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்தும். பெயரையும், புகழையும் அடைய முடியாது. சுயபலம், தன்பலம் இருக்காது. சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
குடும்பாதிபதி அஸ்தங்கம் அடைய குடும்பத்தில் பிரச்னைகள், பணத்தட்டுப்பாடு,கடன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சர ராசியாக லக்னம் அமையப்பெற்று அட்டமாதிபதி திசை நடக்கும் காலத்தில் குடும்பத்தை விட்டு தூர தேசத்துக்கு தொழிலுக்காகவோ
கல்விக்காகவோ செல்ல வைக்கும்.
நான்காம் அதிபதி அஸ்தங்கம் அடையும் போது தாயார் , மனை, மாடு, கொடுக்கல், வாங்கல், போக்குவரத்து, செய்தொழில் போன்ற ஆதிபத்திய காரகங்களில் பிரச்னைகளை தருகிறது.
குருவும், பஞ்சமாதிபதியும் அஸ்தங்கம் அடையும் போது குழந்தைகளால் விரையமும், துன்பங்களும், துயரங்களும், குழந்தை யின்மையும், பெண்களானால் கர்ப்பப்பை கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
சுக்கிரனும், சப்தமாதிபதியும் சூரியனுடன் மிக நெருங்கி அஸ்தங்கம் அடையும் போது களத்திரம் தொடர்பான பிரச்சினைகளையும், திருமணம் ஆகாத நிலையையும் , மனைவியை விட்டு பிரிதலையும், தாம்பத்ய சுகத்திற்கு இடைஞ்சலையும் கண்டிப்பாக தருவார்கள்.
அதேபோல பாக்கியாதிபதி அஸ்தங்கம் அடையும் போது தகப்பனார் வழி தொல்லைகள், பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்களையும்
ஜீவனாதிபதி அஸ்தங்கம் அடையும் போது ஜீவனமே இருக்காது. தொழிலில் இடைஞ்சலையும், சிக்கலையும், தொல்லைகளையும் ஏற்படுத்தும்.
லாபாதிபதி அஸ்தங்கம் அடையும் போது லாபமே இருக்காது. லாபத்தை கொடுக்கற மாதிரி காமிச்சு, லாபத்தை கொடுக்கற மாதிரி கொடுத்து நஷ்டத்தை ஏற்படுத்துவார்.
விரையாதிபதி அஸ்தங்கம் அடையும் போது தூக்கம் கெடும். நைட் ஷிப்ட் வேலை பார்ப்பார். இங்கிருந்து அங்க,அங்கிருந்து இங்க என அழைய வைப்பார்.
நல்ல சாப்பாடு நேரத்திற்கு கிடைக்காது. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டி வரும். தூக்க மாத்திரை போட்டு தூங்குபவர்கள் இந்த அமைப்பில் இருப்பார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தருவார்
செவ்வாய் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடையும் போது பெண்களுக்கு அவர் கணவன் காரகன் என்பதால் கணவன் வலுவோடு இருக்க முடியாது. இதோடு ஏழாம் இடம் பாவிகளால் அதிகம் பாதிக்கப்படும் போது கணவன் மனைவி பிரிவு நிச்சயம் இருக்கும்.
சந்திரன் சூரியனுடன் அஸ்தங்கம் அடையும் போது அவர் மனசுக்காரகன் என்பதால் மனசு பாதிக்கப்படும். சந்திரன் சூரியனுடன் 8 1/2 பாகைக்குள் நெருங்கி இருக்கும் போது அவன் தந்திரசாலியாக இருப்பான். அவனுக்கு எப்படியும் பிழைக்கலாம் என்ற எண்ணம் இருக்கும். சந்திரனுக்கு பட்சபலம் குறைவுபடுவதால் எதிர்மறையான எண்ணங்கள் இருக்கும்.
பஸ்ஸில் செல்லும் போதுகூட இந்த பஸ் எங்கே ஆக்ஸிடென்ட் ஆகிவிடுமோ என்று சதா குழப்பத்திலே இருக்கும் குழப்பவாதிகள் இவர்கள். முடிவெடுக்க தயங்குவார்கள். நாளைக்கு செய்யலாம் நாளைக்கு செய்யலாம் என்று எல்லா விஷயங்களையும் தள்ளி தள்ளி போட்டு நல்ல வாய்ப்புகளையும் கோட்டை விட்டு விடுவார்கள். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுவார்கள். சந்திரன் சூரியனுடன் மிக நெருங்கி, நான்காம் இடமும் ,அதன் அதிபதியும் பாதிக்கப்படும் போது தாயை இளமையிலே பிரிபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூரியனை விட்டு பாகை முறையில் பத்து டிகிரிக்கு மேல் விலக விலக சந்திரனுக்கு பலம் கூட ஆரம்பித்து விடும். அப்போது இந்த பலன்கள் நடக்காது.
சந்திரன் பட்சபலம் இல்லாத அமாவாசை நாட்களில் சுபகாரியங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்கள். அதேபோல செவ்வாய், சனிக்கிழமைகளிலும் சுபகாரியங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்கள். ஏன் என்று சிந்திப்போமானால் அவையெல்லாம் குருட்டு நாட்கள். கண்ணில்லாத நாட்கள்.
- சந்திரன் சூரியனுக்கு 12 டிகிரி இடைவெளியில் அஸ்தங்கம் அடைகிறது.
- செவ்வாய் சூரியனுக்கு 17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
- குரு 11டிகிரி இடைவெளியில் சூரியனுக்கு முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
- சனி 15டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது.
- புதன் நேர்கதியில் 14டிகிரி வித்தியாசத்திலும்,வக்ர கதியில் 12டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் அஸ்தங்கம் அடைவார்.
- சுக்கிரன் நேர்கதியில் 10டிகிரி முன்பின்னும், வக்கிர கதியில் 8 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைவார்.
வலுவான யோகம் பெற்ற கிரகங்கள் அஸ்தங்கம் அடையும் போது யோகங்கள் நசிந்து விடுகின்றன. ஜாதகங்களை பரிசீலிக்கும் போது அஸ்தமனங்களையும் வக்கிரங்களையும் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்
Comments are closed.