ஆறாமிடத்தை கொண்டு

  • கடன்
  • நோய்
  • எதிரி
  • வம்பு
  • வழக்கு
  • துக்கம்
  • துயரம்
  • ஆபத்து
  • அகால போஜனம்
  • திருட்டு
  • சிறைப்படுதல்
  • சக்களத்தி
  • அடிவயறு,
  • தாய் மாமன்
  • சிறை
  • அடிமைத்தொழில் போன்றவற்றை ஆறாமிடத்தை கொண்டு தான் அறிய முடியும்.

ஆறாமிடம் என்பது உபஜெய ஸ்தானங்களிலும் வரும். மறைவு ஸ்தானங்களிலும் வரும். இந்த ஆறாமிடத்தில் நைசிக பாவிகளான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேதுக்கள் அமைய, இயற்கை பாவகிரகங்கள் தாங்கள் இருக்கும் பாவத்தை கெடுப்பார்கள் என்ற விதிப்படி ஆறாமிடத்தை கெடுத்து, எதிரி, கடன், நோய், வம்பு, வழக்கு இல்லாத வாழ்க்கையை தருவார்கள்.

சுபர்களான குரு, புதன், சந்திரன், புதன் போன்ற இயற்கை சுபர்கள் ஆறாமிடத்தில் இருக்கும் போது தங்களது ஸ்தான பலத்தை இழப்பதோடு, இயற்கை சுபக்கிரகங்கள் தாங்கள் இருக்கும் இடத்தை வாழ வைப்பார்கள் என்ற விதிப்படி அங்கிருக்கும் சுபக்கிரகங்களால் ஆறாமிடம் வலுத்து கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு போன்ற காரகங்கள் பெருகும். வளரும்.
இப்ப உதாரணமாக பன்னிரண்டாம் பாவத்தில் சுக்கிரன், புதன் அமர்ந்து ஆறில் இருக்கும் சந்திரனை இவர்கள் இருவரும் பார்த்து, குருவும் இரண்டில் இருந்து ஆறாமிடத்தை பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போ ஆறாமிடம் நான்கு சுபக்கிரகங்கள் சம்பந்தப்படும்போது லக்னாதிபதி, வலுக்குறையும்போது நிச்சயமாக கடன், நோய், எதிரி, வம்பு வழக்கு நிச்சயமாக இருக்கும்.

மாறாக ஆறாமிடம், ஆறாமிடத்ததிபதியோடு, சனி, செவ்வாய், ராகு, கேது என நான்கு பாவக்கிரகங்களும் ஆறாம் இடத்தோடு ஒரு சேர தொடர்பு கொள்ளும் போது ஆறாமிடத்து காரகங்களான கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு இருக்காது. இவர் கடன் வாங்க தேவையில்லை. நோய் வராது. வந்தாலும் சீக்கிரம் ஓடிபோயிடும். எதிரிகள் இருக்க மாட்டார்கள். எதிரிகள் அவர்களாகவே அழிந்து விடுவார்கள்.

ஆறாமாதிபதியே லக்ன சுபராக யோகராக அமையப்பெற்றால் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு இவைகளை எல்லாம் தரும் இவரே இவைகளில் இருந்து விடுதலையும், இவைகளில் இருந்து நிவர்த்தியையும் இந்த ஆறாமாதிபதி யே தருவார்.

லக்னாதிபதியை விட ஆறாமாதிபதி அதிக வலுப்பெற கூடாது. அதேபோல கடன், நோய்க்கு காரகனான சனியும், லக்னாதிபதியை காட்டிலும் அதிக வலுப்பெற கூடாது. ஆறாமிடம், ஆறாமாதியைவிட லக்னம், லக்னாதிபதி அதிக வலுப்பெற வேண்டும். அப்போதுதான் கடன், நோய், எதிரி இல்லாமல் பிழைக்க முடியும். நூற்றுக்கு 90 சதவீதம் பேர்கள் சனிதசையில் கடன்காரனாக இருக்கிறார்கள். ஏன் என்று சிந்தித்து பாருங்கள். சனி ஆறாமிடமான கடன்,நோய், வம்பு, வழக்குகளுக்கு காரகன். கன்னியா லக்ன ஜாதகர்களுக்கு சனிதசை சுமார் 50, 60 வயதுகளில் வரும் போது தான் பெற்ற பிள்ளைகளால் கடன் ஏற்படுகிறது. ஏன் என்று சிந்தித்து பார்த்தோமானால் சனி ஐந்துக்கும், ஆறுக்கும் உடையவர்.

ஆறாம் அதிபதி 6, 8, 12 ஐ அடைந்தாலும், பகை, நீசம், அஸ்தமனம் அடைந்தாலும் எதிரிகள் அழிவார்கள். அட்டமாதிபதி ஆறாம் இடத்தை பார்த்தால் எதிரிகள் தானாகவே அழிந்து விடுவார்கள். ஏன் என்று சிந்தித்து பார்த்தோமானால் அட்டமாதிபதி பார்த்த இடமெல்லாம் விளங்காது.

பத்தில் ஒரு பாவியாவது பழுதாவது இருக்கனும் என்ற விதிப்படி ஆறாமாதிபதியே நைசிக பாவியாகி பத்தாம் இடத்தில் இருக்கும் போது நல்ல அரசியல் வாதியாகவும், நல்ல தொழில் அதிபர்களாகவும் மாற்றி விடும். ஆனால் சுபத்தன்மை அடைய வேண்டும். பாபத்தன்மை அடைய எப்படியும் பிழைக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். மோசடி எண்ணத்தை தரும்.பொதுவாக ஆறாம் அதிபதி, சுபத்தன்மை அடைய கடன், நோய், எதிரி இல்லாமல் பிழைக்க முடியும்.

பெண்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் பாவக்கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று, ஆறாம் அதிபதியும், ஆறாம் இடமும் அதிபலம் பெற்று, லக்னாதிபதி வலுக்குறைந்தால் கணவனுக்கு இன்னொரு பெண் தொடர்பு ஏற்பட்டு விடும். ஏனேனில் இந்த ஆறாம் இடம் பெண்களுக்கு சக்களத்தி ஸ்தானம் ஆகும்.

எப்படி ஆறாம் இடம் பெண்களுக்கு சக்களத்தி ஸ்தானம்?

நான்காம் இடம் என்பது பெண்களுக்கு சுகஸ்தானம். அந்த பெண்ணின் சுகத்தை பங்கு போட வந்த பங்காளிதான்
நான்குக்கு மூன்றாமிடமான ஆறாமிடம்.

விபரீத ராஜயோகம்

துர்ஸ்தானாதிபதிகள் என்றழைக்கப்படும் ஆறு,எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வீட்டை மாற்றிக்கொண்டு அதாவது ஆறாம் அதிபதி எட்டில், எட்டாம் அதிபதி பன்னிரண்டாம் பாவத்தில், பன்னிரண்டாம் அதிபதி எட்டில் , இப்படி ஒருவருக்கு ஒருவர் தங்களது வீடுகளான ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவத்தில் இருந்து அல்லது ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் இணைந்து ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவத்தில் இருக்க விபரீத ராஜயோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்களை இவர்களுடைய தசையில் தரும். ஆனால் முறைகேடான வழிகளில் மட்டுமே இவர்களது சம்பாத்யம் இருக்கும். நேர்மையான வழியில் இவர்களுடைய சம்பாத்யம் இருக்காது.

இந்த ஆறாம் அதிபதி, ஏழாம் அதிபதியுடன் இணைந்து , லக்னாதிபதியுடன் தொடர்பை பெற்று நல்ல ஸ்தானங்களில் அமையப்பெற்றால் இரண்டாம் தரமான தரும கர்மாதிபதி யோகத்தை தரும். நல்ல பாக்கியங்களையும், நிறைய செல்வங்களோடு, அரசனுக்கு நிகரான வாழ்க்கையை வாழ்வான்.

தொழிலில் உச்ச நிலையை அடைவான் எப்படி?

இந்த ஆறாமாதிபதியும், ஏழாமாதிபதியும், உச்ச கேந்திரமான தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற பத்தாமிடத்திற்கு தர்ம, கர்மாதிபதிகளாக வருவார்கள். எனவே தொழிலில் உச்ச நிலையை அடைந்து அரசனுக்கு நிகராக வாழும் வாழ்க்கையை ஜாதகனுக்கு தருவார்கள். ஆனால் இவர்களோடு லக்னாதிபதி சம்பந்தப்பட வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.

இந்த எதிரி, கடன், நோய், வம்பு, வழக்கு என்று சொல்லப்படும் ஆறாமிடத்தில் நைசிக பாவர்கள் அமர எதிரிகளை வெல்லும் ஆற்றலை தரும். இந்த ஆறாமிடத்தில் கேது அமரப்பெற்று அந்த வீடு சிம்ம வீடாக அமையும் பட்சத்தில் இந்த ஜாதகனை எதிர்க்கும் எதிரிகள் காணாப்பிணம் ஆகிவிடுவார்கள். இந்த ஜாதகனை எதிர்த்து வழக்காடும் இவர்களது எதிரிகள் அவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அந்த வம்பு வழக்கு முடிவதற்குள் இருக்கும் இடம் தெரியாமலேயே அழிந்து விடுவார்கள். ஆகவே ஆறாமிடத்தில் கேது இருப்பவர்களை பகைத்து கொள்ளவே கூடாது.

ஆறாமிடம் சுபத்தன்மை அடையும் போது உத்தியோகத்தில் பாராட்டு பெறுதல், பதவி உயர்வு, முதியோர்களை தாண்டி முந்திக்கொண்டு பதவிஉயர்வு பெறுதல், ஓய்வுக்கு பிறகும் பதவியில் நீட்டிப்பு, உத்யோகத்தில் அதிர்ஷ்டம் போன்ற நல்ல பலன்களுக்கும் ஆறாமிட அதிபதி கை கொடுத்து உதவுவார். போட்டித்தேர்வுகளில் வெற்றியையும் இந்த ஆறாமாதிபதி தருவார்.

Blog at WordPress.com.

%d