தனம்,குடும்பம், கல்வி, கண், நேத்திரம், பொன், பொருள், அதிர்ஷ்டம், வாக்கு, நாணயம், போன்ற ஆதிபத்திய காரகத்துவங்களை இரண்டாம் இடத்தை கொண்டு அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம். பணம் பத்தும் செய்யும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே. பணம்னா பிணம்கூட வாயைத் திறக்கும். பணம் பாதாளம் வரை பாயும்.போன்ற பழமொழிகள் பணத்தின் அருமையை உணர்த்தும்..
கல்வி, மருத்துவம், குடிநீர், ஸ்வாமி தரிசனம் போன்ற அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட இந்த சூழ்நிலையில் ஒருவர் பணம் இல்லாமல் வாழவே முடியாது. அப்படிப்பட்ட பணத்தை குறிக்கக்கூடிய செல்வத்தை குறிக்கக்கூடிய பாவம்தான் இரண்டாம் பாவம் எனப்படும் தனஸ்தானம்.
உங்களுக்கு தனம் எனப்படும் பணம் வேண்டுமா?இரண்டாமிடம் நன்றாக இருக்க வேண்டும். சுயகுடும்பம் நல்ல முறையில்அமைய வேண்டுமா? ஆரம்ப கல்வி நல்ல முறையில் அமைய வேண்டுமா? பொன், பொருள் சேர்க்கை வேண்டுமா இரண்டாமிடம் நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் அதிர்ஷ்ட மானவராக இருக்க வேண்டுமா? இரண்டாமிடம் நல்ல முறையில் இருக்க வேண்டும்.
இரண்டாம் வீட்டில் சுபர் இருந்தாலும் ,லக்ன, ராசிக்கு இரண்டாமிடத்தை குரு பார்த்தாலும், லக்ன, ராசிக்கு இரண்டாமிடத்ததிபதியை குரு பார்த்தாலும் இரண்டாமிடத்து அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும் ஜாதகருக்கு செல்வ நிலையில் மிக உயர்ந்த நிலையை தரும். அதாவது லட்சாதிபதி என்பதை போல.
இரண்டாம் அதிபதி சுபராக அல்லது சுபர் வீட்டில் அமையப்பெற்று, அது ஆட்சி, உச்ச ம், கேந்திர திரிகோணங்களில் அமைய நல்ல தனத்தையும், செல்வத்தையும் தரும்.
இரண்டாம் இடம் எந்தளவுக்கு உயர்வாக உள்ளதோ அந்தளவுக்கு ஜாதகருக்கு செல்வ நிலை, அதிர்ஷ்டத்தை தரும்.
இரண்டாமிடத்தில் சுபர்கள் இருப்பது பெருந்தன்மையை தரும். பரோபகார சிந்தனையை தரும். சமுதாயத்தில் இவருடைய பேச்சுக்கு ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.
இரண்டாமிடத்து அதிபதியும், குருவும் தங்களுக்குள் 6 × 8 × 12 ஆக அமையக்கூடாது. குரு தனகாரகன், இரண்டாம் இடம் தன பாவகம். இவர்கள் இருவரும் 6 × 8 × 12 ஆக அமைவது செல்வ நிலைக்கு சிறப்பு இல்லை.
இரண்டாம் இடத்துக்கு ராகு சம்பந்தப்பட்டு அவர் பாவகிரகங்கள் சேர்க்கை பெற்று இளமையில் ராகுதிசை நடைமுறைக்கு வந்தால் ஜாதகன் ஆரம்ப கல்வியை தாண்டுவதே மிக கடினம். இதிலும் விதி விலக்குகளும் உண்டு. ராகு சுப ராசிகளில் அமைய, சுபர்பார்க்க, அல்லது அந்த வீட்டதிபதி ராகுவை பார்க்க, புதன் ஆட்சி உச்சம் ஆக, நான்காம் அதிபதி நல்ல முறையில் அமைய அவருக்கு பட்டப்படிப்பு, மேல்நிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்பு அனைத்தையும் தரும்.
இந்த இரண்டாம் இடம் என்பது ஏழாமிடத்துக்கு எட்டாமிடம் என்பதால், வரக்கூடிய கணவன், அல்லது மனைவியின் ஆயுள் ஸ்தானம் இந்த இரண்டாம் இடம். என்பதால் இந்த இரண்டாம் இடம் பாவர்கள் சூழுகை இன்றி சுத்தமாக அல்லது சுபர்கள் பார்வை தொடர்புகளோடு இருக்கலாம்.
இந்த இரண்டாம் இடத்தில் ஆதிபத்திய விஷேஷம் பெற்ற குரு, சுக்கிரன் போன்ற சுபர்கள் இருக்க, பார்க்க இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதியோடு தொடர்பு கொள்ள குடும்பம் பிரியாது. குடும்பத்தில் வம்பு வழக்குகள் இருந்தாலும் குடும்பம் பிரியாது. இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரகம் எட்டாம் இடத்தை பார்த்து விடுவதால் ஜாதகனுக்கு ஆயுள் பலத்தையும் தந்து விடும்.
பொதுவாக ஜோதிடத்தில் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு.. நீங்கள் சொன்னது எனக்கு பொருந்தவில்லையே என்று கேட்கக்கூடாது. இரண்டாம் இடத்தில் இருக்கும் கிரகம் எட்டை பார்க்கும் என்பதால்
இந்த இரண்டாமிடத்தில் கொடிய பாவர்கள் இருந்து அவர்களே லக்ன பாவியாகவும் அமையப்பெற்று, இரண்டாம் இடத்தில் அமைய பெற்றால் குடும்ப பிரிவினையை தவிர்க்க முடியாது. குரு பார்க்க குற்றம் விலகும். உதாரணமாக கடக லக்னம் சனியும், ராகுவும் இரண்டாமிடமான சிம்மத்தில் இருக்க,இரண்டாமிடத்து அதிபதியுமான சூரியனும் பகை, நீசம், 6 × 8 × 12 ல் மறைய குடும்ப பிரிவினையை தவிர்க்க முடியாது. ஏன்னா சனி பொதுப்பாவி. லக்னத்துக்கு அட்டமாதிபதி வேறு. இது உதாரணத்திற்குகாக சொல்லப்படுகிறது. உங்கள் ஜாதகத்தை பொருத்தி பார்த்து குழப்பி கொள்ள வேண்டாம்.
இரண்டு, ஒன்பது
இரண்டு, ஐந்து
இரண்டு, பதினொன்று
இரண்டு, ஒன்று
இரண்டு, பத்து
இரண்டு, நான்கு
இந்த வீட்டு அதிபதிகள், பரிவர்த்தனை செய்து கொள்ள, சேர்க்கை பெற, சமசப்தமமாக பார்த்து கொள்ள நல்ல தனவசதி, தனபுழக்கம் ஏற்படும்.
இரண்டு, பதினொன்றாம் அதிபதிகள், சேர்க்கை, பரிவர்த்தனை “மகா தனயோகம்” ஏற்பட இடமுண்டு. இரண்டாம் அதிபதியுடன், 11 ம் அதிபதியும் இணைந்து லக்னாதிபதியுடன் சம்பந்தப்படும்போது செல்வநிலையில் நல்ல உயர்வை, முன்னேற்றத்தை தரும். அதாவது லட்சாதிபதியாக மாற்றும்.
இரண்டாம் இடம், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள ஜாதகத்தில் மற்ற கிரக நிலைகளை பொறுத்து ஆன்மிகத்தின் மூலமாக தனம் சம்பாதிக்க முடியும்.
இரண்டு, பத்து சேர்க்கைபெற பரிவர்த்தனை செய்துகொள்ள, இரண்டாம் வீட்டில் புதன், குரு, பத்துக்குடையவன் அமர பேச்சால், வாக்கால் சம்பாதிப்பார்கள். புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியர், மத போதகர், விரிவுரையாளராக தனம் சம்பாத்யம் செய்வார்கள்.
புதன், குரு, கேது இந்த இணைவு மிகச்சிறந்த நன்மை பயக்கும் இணைவாகும். காரணம் புதன் கல்விக்கு காரகன், குரு அறிவுக்கு காரகன், கேது ஞானத்திற்கு காரகன், இவர்களது இணைவு நன்மையே பயக்க காரணம் அறிவு, கல்வி, ஞானம் அனைத்தும் நன்றாக அமைவது நல்லது தானே. இவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனை இல்லையே. இது எனது கருத்து மட்டுமே. இந்த இணைவால் தனது அறிவால் ஞானத்தால், கல்வியால் தனம் சம்பாதிக்க முடியும்.
2 + 6, இரண்டாம் அதிபதியும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள சேர்க்கை பெற, எவ்வளவு பணம் வந்தாலும் நிற்காது. கடன் பிரச்னை ஜாதகரை வாட்டும். கடன் வாங்கி கடனை அடைக்க வேண்டி வரும். பார்ட்னர்களால் ஏமாற்றப்படுவார்கள்.
இரண்டாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் சேர்க்கைபெற, பார்த்துக் கொள்ள நிறைய பணம் வரும். ஆனா எப்படி போகுதுன்னே தெரியாது. இந்த பணம் இந்த ஜாதகருக்கு பிரயோசனப்படாது.
இரண்டாம் இடத்து அதிபதி பன்னிரண்டாம் பாவத்தில் மறைய பகை, நீசம் பெற செலவுகள் ஆளையே முழுங்கி விடும். செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஜாதகர் செலவாளியாக இருப்பார். சேமிப்பு என்பதே துளியும் இருக்காது.
ஆனால் பன்னிரண்டாம் அதிபதியும், இரண்டாம் அதிபதியும் சேர்க்கை பெற்று லக்ன கேந்திரங்களில் அமையும் போது
பர்வத யோகம் என்னும் ராஜயோகத்தை தருகிறது.
“மன்னிய ஜென்மம் முன்பின் மனைக்கு
இறை இருவர் கூடி
பன்னு கேந்திரத்தில் இருக்கில்
பர்வதமாம் யோகம் என்பர்.
பெண்களுக்கெல்லாம் பிடித்தமானவன். சுக போகி. மன்னனை போல கீர்த்தி உடையவன். வாகன யோகமும் உடையவனாக இருப்பான்.
இந்த இரண்டு, பன்னிரண்டுக்குடையவர்கள் சேர்க்கை
லக்ன கேந்திரங்களில் அமைந்து இருவரும் ஆட்சி அல்லது உச்சமாக இருந்து, அல்லது இருவரில் ஒருவர் ஆட்சி உச்சமாக அமைய பர்வத யோகம் என்னும் ராஜயோகம் கிடைக்க பெறும்.