எட்டாம் இடத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?
எட்டாமிடத்தைக் கொண்டு முக்கியமாக
- ஆயுள்
- யுத்த ஆயுத பயம்
- விபத்து கீழ விழுகறது மேல விழுகறது
- முக்கியமாக அபகீர்த்தி
- வறுமை
- துன்பம்
- தொல்லை
- கஷ்டம்
- மாங்கல்ய பலம்
- மறைமுகமான இடங்கள்(பிறப்புறுப்பு ஸ்தானம்)
- இன்சூரன்ஸ்
- ஆசனம்
- சட்ட பிரச்னைகள்
- கோர்ட்
- கேசு
- வம்பு வழக்கு இவற்றை எல்லாம் எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்தை கொண்டு அறியமுடியும்.
பாட்சா படத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எட்டு, எட்டா மனிச வாழ்வ பிரிச்சுக்கோ; இப்ப எந்த எட்டுல நீ இருக்கற தெரிஞ்சுக்கோ என்று இக்கட ரா ரா ராமய்யா என்ற பாட்டின் மூலமாக எட்டுஎட்டாக மனித வாழ்க்கையை பிரித்து சொல்லியிருப்பார்.
இந்த எட்டுனாலே ஜோதிட சாஸ்திரத்தில் எல்லோருக்கும் எட்டிக்காயாக கசக்கும். அஷ்ட லட்சுமி என்று அஷ்ட லட்சுமிகளையும் விரும்பாதவர்கள் யாருமே இல்லை. அஷ்ட லட்சுமிகளையும் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாருமே இல்லை. ஆனா அட்டமாதிபதி திசையையோஅல்லது அட்டம சனியையோ, அல்லது சந்திராஷ்டம தினங்களையோ யாருமே விரும்ப மாட்டார்கள்.
3, 6, 8, 12 இவைகள் எல்லாம் மறைவு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும். அதாவது வெளிச்சத்தில் நிகழ்த்தப்படாத செயல்களையும், பிறருக்கு தெரியக்கூடாத ரகசியங்களும், காம, குரோத, மோகம் போன்றவைகளோடு சம்பந்தப்பட்ட உணர்வுகளை அடக்கி ஆள, இடத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள உதவக்கூடிய ஸ்தானங்கள் இந்த மறைவிடங்கள். சில விஷயங்களை மறைவாகத்தான் செய்ய முடியும். சூதாட்டம், ரேஸ், பெட்டிங் போன்ற சமுதாய, சட்ட விரோதமான காரியங்கள், ரகசியமான காரியங்களுக்கு, இந்த மறைவிட ஸ்தானங்களே காரணம்.
லக்ன புள்ளியிலிருந்து சூரியனுடைய ஒளிக்கீற்றுகள் இந்த மறைவிட ஸ்தானங்களில் குறைவாக தான் விழுகிறது. அதுவே மறைவிட ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது. அட்டமாதிபதி ஆட்சி உச்சம் பெற தீர்க்காயுளை தருகிறது. அட்டமாதிபதி அட்டமத்தில் ஆட்சி சரள யோகம். அட்டம ஸ்தானத்தில் குரு, புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரன் அமர, சுபக்கிரகங்கள் தாங்கள் இருக்கும் ஸ்தானத்தை வாழ வைப்பார்கள் என்ற விதிப்படி ஆயுள் தீர்க்கமாக, நீண்ட ஆயுளைத்தரும்.
ஆயுள் காரகன் சனி எட்டில் அமையும் போது நீண்ட ஆயுளை தருகிறது. ஆனால் கடைசி காலத்தில் படுக்கையில் கிடத்தி, சுற்றியுள்ள உறவுகளை இந்த கிழம் எப்ப சாகுமோ? என்று நினைக்கும் படி அளவுக்கு ஆயுளை கொடுத்து தொல்லைகளையும் சேர்த்தே தருகிறார்.
ஆயுளை பற்றி அறிந்து கொள்ள இந்த எட்டாம் இடம், எட்டுக்கு எட்டாமிடமான மூன்றாம் இடம், லக்னம், லக்னாதிபதி, ஆயுள் காரகன் சனி, குரு போன்ற அனைத்தையும் பார்த்தே ஆயுளைபற்றி கணிக்க முடியும்.
1)லக்னாதிபதியும், அட்டமாதிபதியும் சர ராசிகளில் அமைய தீர்க்காயுளை தரும்.
2)லக்னாதிபதி ஸ்திர ராசியிலும்,அட்டமாதிபதி உபயம ராசியிலும் அமைய தீர்க்காயுளை தரும்.
3)லக்னாதிபதி உபயத்திலும்,அட்டமாதிபதி ஸ்திர ராசியிலும் அமைய தீர்க்காயுளை தரும்.
மத்திம ஆயுள்
1)லக்கனாதிபதி சரத்திலும், அட்டமாதிபதி ஸ்திரத்திலும் இருந்தால் மத்திம ஆயுள்
2)லக்னாதிபதி ஸ்திரத்திலும், அட்டமாதிபதி சரத்திலும் மத்திம ஆயுள்.
3)அட்டமாதிபதி உபயத்திலும், லக்னாதிபதியும் உபயம ராசியில் இருக்க மத்திம ஆயுள்.
அற்பாயுள்
1)லக்னாதிபதி சரத்திலும், அட்டமாதிபதி உபயம ராசியிலும் இருக்க அற்பாயுள்.
2)லக்னாதிபதி ஸ்திரத்திலும், அட்டமாதிபதி ஸ்திரத்திலும் இருக்க அற்பாயுள்
3)லக்னாதிபதிஉபயம ராசியில் இருந்து அட்டமாதிபதி சர ராசியில் இருக்க அற்பாயுள்.
இது பொதுவானது. இத்தோடு நடக்கும் திசாபுக்திகள், மாரக திசைகள், மாரக லட்சணம் பெற்ற கிரகங்கள் இவைகளை கொண்டு அவர் அவர்களுடைய ஆயுளை நிர்ணயம் செய்ய கொள்ளவேண்டும்.
இந்த எட்டுனாலே உடனே நம் ஞாபகத்தில் வருவது அட்டமச் சனி. ஏழரை சனியில் கூட சிலருக்கு சுப விரையங்கள் நடக்கும். நல்லது நடக்கும். ஆனால் இந்த அஷ்டம சனியில் நல்லது நடக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இது ஒரு தண்டனை காலமாகும். போன ஜென்மத்தில் செய்த விதைத்த வினையை ஒன்றுக்கு பத்தாக அறுவடை செய்யும் காலமாகும். “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப பலநாள், பலவருடங்கள் ஒருவர் ஊழல், லஞ்சம், லாவண்யம், திருட்டு, கொள்ளை, கொலை போன்ற பஞ்சமஹா பாதகங்களை ஒருவர் நடத்தி கொண்டு வரும் போது, இந்த அட்டமச்சனியில் அல்லது அட்டமாதிபதி திசையில் அவரைக்காட்டி கொடுத்து, அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து தண்டனை வாங்கி தருவார் இந்த அட்டமாதியும், சனீஸ்வரர் பகவானும். இந்த அட்டமச் சனி காலத்தில் ஒருவர் பேராசைப் படாமல் நேர்மையாக வாழ்ந்தால் சனிஸ்வர பகவானால் ஒன்றும் செய்ய இயலாது.
எந்த பாவகத்துக்குமே அட்டமாதிபதி வலுக்கக்கூடாது. லக்னாதிபதியை காட்டிலும் அட்டமாதிபதி வலுத்தால் அடிக்கடி கீழ விழுகறது, மேல விழுகறது போன்ற கண்டங்களைத் தரும். நான்காம் இடத்திற்கு எட்டாம் இடமான பதினொன்றாம் பாவத்தில் பாவர்கள் ஆட்சி, உச்சம் பெற தாயாருக்கு கண்டங்களைத் தரும். அட்டமாதிபதியும் வலுத்து, பதினொன்றாம் அதிபதியும் வலுத்து, நான்காம் அதிபதியோடு ஆறுக்குடையவனும், ராகுவும் சேர்ந்து பாவத்தன்மை பெற ஜாதகனுக்கே வாகன விபத்துகள் ஏற்படும்.
தகப்பன் ஸ்தானத்திற்கு எட்டாம் இடமான நான்காம் பாவகத்தில் பாவர்கள் ஆட்சி உச்சம் பெற்று பாவத்தன்மை பெற தந்தைக்கு அடிக்கடி கண்டங்களை தரும்.
மூன்றுக்கு எட்டில் ஒரு பாவக்கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற எல்லாவற்றிலும் தடை தாமங்கள் கண்டிப்பாக இருக்கும். ஜாதகன் முயற்சியே செய்யாமல் சோம்பேறியாக இருப்பான். இரண்டாம் இடத்திற்கு எட்டில் பாவக்கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற கல்வியில் தடை இருக்கும். அந்த கிரகம் சனியாக இருந்தால் குடும்பத்தை பிரிக்கும். குடும்பத்தை கெடுக்கும். தாமத திருமணத்திற்கு வழிவகுக்கும். பத்துக்கு எட்டாமிடமான ஐந்தில் பாவக்கிரகங்கள் பாவத்தன்மை பெற்று அமைய தொழிலை கெடுக்கும். தொழிலே அமையாத நிலையையும், அடிமைத்தொழிலையும் தரும்.தொழிலில் இடைஞ்சல்களை தரும்.
ஸ்திர லக்னமாக அமையப்பெற்று 3, 8 க்குடையவர்களோடு ராகு சேர்க்கைபெற்று அவர்கள் பாவ ராசியில் பாவக்கிரகங்கள் சேர்க்கைபெற அவர்களுடைய தசாபுக்திகளில் விசமருந்தியோ, தூக்குப்போட்டோ தற்கொலை செய்து கொள்வார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கைபெற்று, அல்லது நேருக்கு நேராக சந்தித்து கொள்ள, எட்டாமிடத்தில் பாவ கிரகங்கள் இருக்க அவர்களுடைய வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் ஆபரேஷன் என்ற அறுவை சிகிச்சை நிச்சயமாக உண்டு.
எட்டாமிடமான மறைவு ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கைபெற, தனுசு ராசியில் பாவக்கிரகங்கள் இருக்க அவருக்கு அட்டமச்சனியில் அல்லது சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் மூலநோயை கண்டிப்பாக தரும்.
எட்டாமிடமும், சுக்கிரனும், விருச்சிகமும், செவ்வாயும், அட்டமாதிபதியும், அதிகம் பாவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் , லக்னாதிபதியும், லக்னமும் வலுவிழந்து இருந்தால் அவர்களுக்கு எய்ட்ஸ், ஹச்.ஐ.வி போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும். ஏன்னா எட்டாம் இடம் மர்ம ஸ்தானம்.சுக்கிரன் வந்து மர்ம ஸ்தானத்திற்கு காரகன், விருச்சிகம் காலபுருஷனுக்கு எட்டாமிடம், செவ்வாயும் கால புருஷனுக்கு அட்டமாதிபதி.
எட்டாமிடம் அதிக சுபத்தன்மை அடையும் போது
வழக்கு, நீதி, சட்டத்துறை, சி.பி.ஐ, மறைபொருளை கண்டு பிடிக்கும் விஞ்ஞானிகள், மறைவாக உள்ள புதையலை, பெட்ரோலை, கண்டு பிடிக்கும் துறையில் உள்ளவர்கள். தொல்பொருள் துறை போன்றவற்றில் ஜாதகனை ஈடுபடுத்தி அதன்மூலமாக நன்மைகளை அடைய வைக்கும்.
சர லக்னம், சர ராசியில் பிறந்து எட்டாமிடம் அதிக சுபத்தன்மை அடைந்து, நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ராசிகள் சுபத்தன்மை அடைந்து, வலுப்பெற்று, சுபத்தன்மை அடைந்த அட்டமாதிபதி தசை நடைமுறையில் வரும்போது ஜாதகனை ஊர்விட்டு ஊரு, நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் தாண்டி கடல்கடந்து, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கு ஏற்ப வெளிநாட்டில் சென்று பிழைக்க வைக்கும். வெளிநாடு சென்று திரண்ட செல்வத்தையும், பேரையும், புகழையும் அடைவார்கள் பாரின் போற யோகத்தை தரும்.
பெண்களுக்கு எட்டாம் இடம் சுபத்தன்மை அடையும் போது நல்ல மாங்கல்ய பலத்தை அருளி கணவனுக்கு நீண்ட ஆயுளை தருகிறது. எட்டாம் பாவமானது ஆயுளுக்கு மட்டும் அல்ல. தன்மானத்தோடும், புகழோடும், கீர்த்தியோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வழிவகை செய்கிறது. ஆனால் அதற்கு எட்டாமிடமும், அதன் அதிபதியும் சுபத்தன்மை அடைய வேண்டும். அதாவது எட்டாமிடத்தை, அதன் அதிபதியை சுபர்கள் பார்க்க வேண்டும். சுபர்கள் தொடர்பு எட்டுக்கும், அதன் அதிபதிக்கும் வேண்டும்.