ஏழாமிடத்தை பற்றி எதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்?

 • லைஃப் பார்ட்னர் என்று சொல்லப்படும் மனைவியை பற்றியும்
 • பிசினஸ் பார்ட்னர் என்று சொல்லப்படும் சுயதொழில் கூட்டாளிகளைப் பற்றியும்
 • வியாபார துறைகளை பற்றியும், திருமண வழக்கு வியாஜ்ஜியங்களை பற்றியும்
 • உள்நாட்டு பயணங்களை பற்றியும்
 • மாரகம்
 • சிற்றின்பத்தை பற்றியும்
 • உறவு முறைகள்
 • திருமணம் நடக்கும் காலங்கள்
 • மனைவியின் குணங்கள்
 • ரூபங்கள்
 • திருமணம் நடக்குமா நடக்காதா போன்ற விசயங்களை ஏழாமிடத்தை கொண்டு நிர்ணயம் செய்ய முடியும்.

ஒரு குழந்தை பிறக்கும் போது எந்த பாவகம் கிழக்கே உதயமாகின்றதோ அந்த பாவகத்திற்கு லக்னம் என்று பெயர். லக்னம் என்பது கிழக்கே உதயமாகும் பாவகமாகும்.இதற்கு நேர் எதிரான, சரியாக 180 பாகையில் அமையும் பாவகமே ஏழாம் பாவகம் எனப்படும். இது மேற்கு திக்குவை குறிக்கும். இது களத்திர பாவம் என்று அழைக்கப்படுகிறது.

இது பொது மாரகஸ்தானம் ஆகும். இது எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்திற்கு விரையஸ்தானம் ஆகும். ஏழாமிடமானது சிற்றின்பத்தைக் குறிப்பிடும் பாவகம். புனரபி ஜனனம். புனரபி மரணம் என்ற வாக்கின்படி புணர்வதால் ஒருவருக்கு பிறப்பும், மிக அதிகமாக புணர்வதால் நோயும், மரணமும் நிச்சயம் என்பதைக் குறிப்பதற்காக இந்த ஸ்தானத்தை ஆயுள் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானமாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.

பொதுவாக இந்த ஏழாம் பாவத்தில் எவரும் தீயர் என்பர். பொதுவாக 2, 7, 8 சுத்தமாக இருக்கனும். சரி அப்படி இல்லை என்ன பண்றது? சுபக்கிரகங்கள் இருக்கலாம். வளர்பிறை சந்திரன், சுபர்களோடு சேர்ந்த புதன் அல்லது தனித்த புதன், சுக்கிரன், குரு போன்ற சுபக்கிரகங்கள் இருக்கலாம். அங்கேயும் ஒரு சிக்கல் இருக்குது. சுபர்கள் கேந்திரங்களில் கேந்திராதிபத்திய தோசத்தை அடைவார்கள். எனவே ஏழில் சுபர்கள் இருப்பது கேந்திராதிபத்திய தோசத்தை ஏற்படுத்தும்.
லக்னத்தில் குரு திக்பலம் பெறுபவர் என்பதால்
அவர் ஏழில் நிற்கும் போது நிஷ்பலம் என்னும் பலம் குறைந்த நிலையை அடைவார். சுக்கிரன் ஏழில் காரகோபாவநாஸ்தியை அடைவார். எனவே ஏழில் யாரும் இல்லாமல் சுத்தமாக இருப்பதே உத்தமம். பாவக்கிரகங்கள் இருந்தால் சுபத்தன்மை அடையவேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் ஏழாமிடம் சுத்தமாக இருந்து, ஏழாமாதிபதியும், சுக்கிரனும் நல்ல முறையில் ஆட்சி, உச்சமாக அமைய ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் ஏழாமிட காரகத்துவங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஜாதகருக்கு கிடைக்க பெறும்ஒருவருக்கு நல்ல மனைவி அமைய ஏழாமிடமும், ஏழாம்பாவமும், களத்திர காரகன் சுக்கிரனும் , சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாம் வலுப்பெற வேண்டும். ரிஷப, துலாத்தில் பாவிகள் இருந்தால் நல்ல மனைவி அமைய தடை ஏற்படும்.

2, 7, 8 போன்ற இடங்களில் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்றபாவர்கள் பாவத்தன்மை பெற்று அமர திருமணம் தாமதமாகும். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் + செவ்வாய் சேர்ந்து ஏழாம் பாவத்தில் பாவ ராசியில் இருந்து பாவத்தன்மை அடைய,
அந்த ஜாதகன் விதவையை மணம் புரிந்து கொள்வான்.

ஏழாம் பாவத்தோடு பத்தாம் அதிபதி, ஜீவன காரகன் சனி ஆகியோர் சுபத்தன்மை பெற்று தொடர்புகொள்ள கூட்டுத்தொழில் கூட்டாளிகளுடன் ஏற்படும். ஏழாமிடத்தில் 1, 5, 9, 10 ம் அதிபதிகள் அமர கூட்டுத்தொழில் சிறப்பாக இருக்கும். ஏழு, பத்தாம் அதிபதிகள் பரிவர்த்தனை செய்து கொள்ள சுய தொழில் கூட்டாளிகளிடன் ஏற்படுகிறது.

லக்னாதிபதியைக் காட்டிலும், ஏழாம் அதிபதி அதிக வலுப்பெற்றால் , வீட்டில் மனைவியின் கையே ஓங்கியிருக்கும். ஜாதகன் நாட்டிற்கே ராஜாவானாலும், வீட்டில் மனைவியிடம் இவரது அதிகாரம் செல்லுபடியாகாது. ஏழாம் அதிபதி வலுக்குறைந்து லக்னாதிபதி அதிபலம் பெற மனைவி ஜாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்.

இந்த ஏழாம் இடம், ஏழாமிடத்ததிபதி வலுக்குறைந்து, பதினொன்றாம் இடம் பதினொன்றாம் அதிபதி அதிக வலுப்பெற ஜாதகனுக்கு இருதார அமைப்பு ஏற்படும். இந்த பதினொன்றாம் பாவகத்தில் பாவர்கள் ஆட்சி உச்சம் பெற்று ஏழாமாதிபதி , பகை, நீசம், அஸ்தமனம் பெற்று பதினொன்றாம் அதிபதியின் தசை நடக்கும் காலத்தில் கண்டிப்பாக இரண்டு தாரம் அல்லது இன்னொரு பெண்ணின் தொடர்பு ஏற்பட்டு விடும். பன்னிரண்டாம் பாவகத்தில் ஒரு பாவி உச்சமாக இது இன்னும் உறுதிப்படுத்தி கொள்ளலாம். பன்னிரண்டாம் பாவத்தில் ஒரு பாவக்கிரகம் உச்சமாக சிற்றின்ப எண்ணம் அதிகப்படுவதோடு அந்த இடம் மனைவிக்கு சக்களத்தி ஸ்தானம் என்பதால் நிச்சயமாக இருதாரம் அல்லது வேறு பெண்ணின் தொடர்பு ஏற்பட்டு விடும்.

பெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடம், ஏழாமிடத்து அதிபதி வலுத்து , லக்னாதிபதி, ஏழாம் அதிபதியை காட்டிலும் வலுக்குறைந்து காணப்பட்டால் மனைவியை கண்கலங்காது காப்பாற்றும் கணவன் அமைவார்.

ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் இணைந்து லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ள அல்லது லக்னத்தோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புகொள்ள இவர்களுக்கு காதல் திருமணம் நடக்கும். இவர்களுக்கு இவர்கள் அப்பா, அம்மா பார்த்து திருமணம் செய்ய முடியாது. ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வர். மதச்சம்பிரதாயங்களை குறிக்கும் ஒன்பதாமிடமும், குருவும் பலப்பட்டு ஜாதகத்தில் நிற்க காதலித்து பின்பு அப்பா, அம்மா சம்மதத்துடன் உறவுகள் போற்ற, மத்தளம் கொட்ட , வரிசங்கம் நின்றூத திருமணம் பெரியோர்கள் வாழ்த்த ஜாம், ஜாம் என்று நடக்கும்.

சந்திரன், சுக்கிரன் இணைந்து ஏழில் அமரப்பெற்று இதில் சுக்கிரன் கிரகயுத்தத்தில் தோல்வி அடையும் போது அவருக்கு, திருமணம் இல்லை. அதேபோல சுக்கிரன் ராகுவுடன் 8 டிகிரிக்குள் இணைந்து கிரகண தோசத்தை அடையும் போது அங்கே அவருக்கு திருமணம் மறுக்கப்படலாம்.
அதேபோல சூரியனுடன் சுக்கிரன் 8 டிகிரிக்குள் இணையும் போதும் அங்கே அவருக்கு தாம்பத்ய சுகம் கிட்டாமல் போகலாம். இதே அமைப்புகளோடு ஏழில் சனி + செவ்வாய் சேர்க்கைபெற அல்லது இவர்கள் இருவரும் இணைந்து அந்த பாவங்களை பார்க்க திருமணம் நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

ஏழாம் இடத்தை ஆய்வு செய்யும் போது ஏழாமிடத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகின்றோமோ அந்தளவுக்கு சுக்கிரனுக்கும் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம்.
ஏழாம் பாவகத்திற்கு சுக்கிரனும் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாயின் வீடுகளான மேச, விருச்சிகத்தில் அமையப்பெற்றாலோ, அல்லது சனியின் வீடுகளான மகரம், கும்பத்தில் அமையப்பெற்றாலோ, சுக்கிரன் அதிகமாக பாவிகளோடு சம்பந்தப்பட்டாலோ, செவ்வாயோடு, சம்பந்தப்பட்டாலோ, ஏழாம் அதிபதியும், சுக்கிரனும் ஆறாம் அதிபதியோடு சம்பந்தப்பட்டாலோ காமம் மிகுந்தவர்கள். சதா சிற்றின்ப மோகத்தில் திளைப்பவர்கள்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் அதிபலம் பெற்று, புதனும், குருவும் பலமிழக்கும்போது அங்கே ஜாதகனுக்கு புக்தி வேலை செய்யாது.அவன் சதா சிற்றின்ப எண்ணத்திலே சுக்கிலத்தை அதிகமாக விரையம் செய்வான். அங்கே அவனுடைய புக்தி மழுங்கடிக்கப்பட்டு எந்த காரியங்களையும் அவன் திறம்பட செய்ய முடியாது. அவனுக்கு சிற்றின்ப எண்ணமே பிரதானமாக இருக்கும். சுக்கிலம் எந்தளவுக்கு விரையம் ஆகின்றதோ அந்தளவுக்கு அவனுக்கு உடல் பலகீனம் அடையும்.

ஞானிகள், சித்தர்கள், மகான்கள் சுக்கிலத்தை அடக்கி, சேமித்து, வாசியோகத்தின் துணையால் குண்டலினி சக்தியை அடைந்து ஞான சித்திஅடைந்து பல பேருண்மைகளையும், பரவச நிலைகளையும், இறையருளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர்.

சுக்கிரனும், ஏழாம் பாவகமும், ஏழாம் அதிபதியும் அதிக சுபத்தன்மை அடையும் போது நல்ல பெண்களை அடைந்து, உத்தமமான பெண்களை அடைந்து, நல்ல குணம், நல்ல ரூபவதியை அடைந்து, தன்னுடைய தகுதிக்கும் மேம்பட்ட பெண்களிடம் இன்பம் அனுபவிப்பான்.

மாறாக சுக்கிரன், ஏழாம் இடம், ஏழாம் அதிபதி அதிகம் சனி, ராகு, கேதுக்களால் பாதிக்கப்பட்டால் நீச ஸ்திரீகள், வேலைக்காரிகள், வயது மூத்த பெண்கள், விதவைகள், கீழ் சாதிபெண்கள் போன்ற பெண்களை அடைந்து தன்னுடைய பணத்தையும், நேரத்தையும், காலத்தையும், சுக்கிலத்தையும் விரையம் செய்வான்.

Blog at WordPress.com.

%d