ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?
- ஒருவர் புண்ணியம் செய்தவரா
- குழந்தை பாக்கியம் எப்படி
- புகழ் பெறுவாரா அல்லது அபகீர்த்தியை அடைவாரா
- உயர் கல்வியை மேல்நிலை கல்வியை அடைவாரா
- அதிர்ஷ்டம் உடையவரா பிரபுத்துவம் உடையவரா அதாவது மந்திரியோகம் உடையவரா
- சினிமா,நாடகம் ,இசை இவற்றில் செல்வத்தை அடைய முடியுமா
- காதல் திருமணம் ஏற்படுமா
- மந்திரங்களை அறிந்த சித்தராக முடியுமா
- குல தெய்வம், இஷ்ட தெய்வம், புண்ணிய நதிகளுக்கு செல்லும் யோகம் உள்ளதா போன்றவற்றை ஐந்தாம் இடத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
“ஜெனனீ ஜென்ம சௌக்யானாம்:
வர்த்தனீ குல சம்பத்தாம்;
பதவீ பூர்வ புண்ணியானாம்
லிக்யதே ஜென்ம பத்ரிகா”
ஒருவர் நல்ல குடும்பத்தில் பிறப்பதுவும்,
பட்டம், பதவி, புகழ், உத்யோகம் இவற்றை அடைந்து சுகமாக வாழ்வதற்கும் அவர் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தை பொறுத்தது. பூர்வ புண்ணியம் நன்றாக அமைந்துவிட்டால் அவருக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும். பூர்வ புண்ணியம் பெற்றெடுத்த குழந்தை தான் பாக்கியம். பாக்கியத்தின் தந்தை பூர்வ புண்ணியம் ஆகும்.
பூர்வ புண்ணியம் என்பது நாம பேங்க்ல சேர்த்து வைத்திருக்கும் டெபாசிட் மாதிரி. பேங்க்ல பணம் இருந்தால் தான் எடுத்து செலவுபண்ண முடியும்.விட்ட குறை, தொட்ட குறை, கொள்வினை, கொடுப்பினை, என்ன தவம் செய்தேனோ என்ற வாக்கியங்கள் பூர்வ புண்ணியத்தை குறிப்பிடும் வார்த்தைகள் ஆகும்.
ஒருவருக்கு ஐந்தாம் இடம், பஞ்சமாதிபதி,புண்ணிய காரகன் குரு , தனுசு, மீனம் நல்ல முறையில் அமைய நல்ல புத்திரர்கள் சத்புத்திரர்கள் தோன்றுவார்கள். முக்கியமாக வீடு புத்திர பாக்கியத்தை குறிப்பதால் இந்த வீட்டில் சனி, ராகு, செவ்வாய், கேது போன்ற பாவர்கள் அமரக்கூடாது. தனுசு, மீன ராசியிலும் பாவர்கள் அமரக்கூடாது.
குரு பகவானும் பகை, நீசம் பெற்று ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவத்தில் அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால் புத்திர பாக்கிய தடை ஏற்படும். புத்திரர்களால் நன்மையும் இராது. இந்த வீட்டில் பாவத்துவம் பெற்ற பாவர்கள் இருப்பது பூர்வ புண்ணியம் அற்ற நிலை அதாவது பூர்வ புண்ணியம் குறைவாக உள்ளது என்று பொருள்.
இந்த ஐந்தாமிடம் புகழை குறிக்கும் இடம் என்பதால் ஒருவர் பெயரும் புகழும் பெற இந்த வீடு பலம் பெறுவது மிக முக்கியம்.
எனக்கு தெரிந்த ஒருவருக்கு ஐந்தில் சனி + செவ்வாய் சேர்க்கை பெற்று சுபத்தன்மை பெறவில்லை. அவர் காதல் திருமணம், கலப்பு திருமணம் செய்து தன்னுடைய குலத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தினார்.
ஒருவருக்கு ஐந்தாமிடத்தில் 6, 8, 12 ம் அதிபதிகளில் ஒருவரோ அல்லது இருவரோ இணைந்து இருந்து அவர்களுடைய தசாபுக்திகள் நடைமுறையில் இருக்கும் போது அவர்களுக்கு போலீஸ், கோர்ட், கேசு, வம்பு, வழக்கு, கெட்ட பெயர்கள், பூர்வீக சொத்தை அடமானம் வைத்தல் போன்ற கெட்ட பலன்கள் ஏற்படும். முக்கியமாக புகழுக்கு இழுக்கு ஏற்படும்.
அதேபோல லக்னத்துக்கு, ராசிக்கும் ஐந்தாம் இடம் கெட்டு, மனது காரகன் சந்திரனும், புதனும், பகை,நீசம் ஆறு, எட்டு, பன்னிரண்டை அடைய மனநிலை, புத்தி பாதிக்கும். அது சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் நடக்கும். அதேபோல ஐந்தாம் இடத்தில் ராகு, செவ்வாய் நீசம் போன்ற பாவக்கிரகங்கள் ஸ்தான பலத்தை இழந்து தசையை நடத்தும் போது இருதய சம்பந்தப்பட்ட நோய்களையும் தருகிறது.
ஐந்தாமிடம் அதிபலம் பெற்று, ஐந்தாம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போதும், ஐந்தாம் அதிபதி தன, பாக்கியாதிபதி சேர்க்கை பெற்று ஐந்தாம் அதிபதியின் திசை நடக்கும் காலத்தில் ஸ்பெகுலேசன், ரேஸ், சீட்டாட்டம், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் அதிகளவில் லாபம் பெற முடியும். வெற்றி பெற முடியும். இதில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு.
ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்க்கை பெற்று லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது இவர்களுக்கு காதல் திருமணம் நடக்கும்.
இந்த ஐந்தாமிடம் சாத்வீக குணத்தை உடையது. அதாவது ஈவு, இரக்கம், நேர்மை, தயாளகுணம், இரட்சித்தல் போன்றவை. இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் கடின மனசை தரும்.
ஒரு சிலர் ஈவு இரக்கம் இல்லாமல் கடினமனம் கொண்டவராக இருப்பதற்கு காரணம் என்ன?
லக்னத்தில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபர்களோடு சேர்ந்த புதன் சம்பந்தப்பட்டு அதேபோல ஐந்தாமிடத்தில் இயற்கை சுபர்கள் ஆட்சி உச்சமாக அமர அல்லது பார்க்க நீதி, நேர்மை, இரக்க குணம், பணிவு, பண்பு, தெய்வ பக்தியோடு, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவர்கள். இவர்கள் ஒரு கொடி படர்வதற்கு தன் தேரையே கொடுப்பவர்கள். மயிலின் குளிருக்கு தன்னுடைய சால்வையை போர்வையாக அளிப்பவர்கள்.
தனக்கும், தனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் ஏன்? உலகத்திற்கே கூட பயன்படும் படியாக தனது வாழ்க்கை முறையை அமைத்து கொள்வார்கள். ஈரமான நெஞ்சம் உடையவர்கள்.
மாறாக
லக்னத்தில் பாவக்கிரகம் இருக்கப்பெற்று, ஐந்தாமிடமான புக்தி ஸ்தானத்தில் தீயக்கிரகங்கள் (சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள்) ஆட்சி உச்சம் பெற்று பாவத்துவம் பெற்றால் கடின மனம் உடையவர்கள். கோபத்தை உடையவர்கள்.
ஒருசிலர் கோழியின் கழுத்தை திருகி, அது துடி துடிப்பதை சாதாரணமாக பார்த்து கொண்டிருப்பார்களே? சிலர் ஆடுவெட்டறது , கோழி வெட்டறது போன்ற தொழில்கள் செய்து கொண்டிருப்பார்களே அவர்களுக்கு ஐந்தாமிடத்தில் பாவர்கள் அமரப்பெற்று இருப்பார்கள். இவர்கள் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள்.
சிலர் தன்னுடைய அறிவை புத்திசாலித்தனத்தை கிரிமினல் விஷயங்களுக்கோ, அடாவடியான செயல்களுக்கோ, உலகத்திற்கு தீமையை விளைவிக்கும் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். கல் நெஞ்சக்காரர்கள். பிறரை துன்புறுத்துவதையே சந்தோசமாக கொண்டவர்கள்.
பூர்வ புண்ணிய பலம் பெற்றவர்களை, ஏழரைச்சனி, அஷ்டமசனி காலங்களில் சனி தன்னளவில் பெரிய அளவில் பாதிப்பை தருவதில்லை. அதானால்தானோ என்னவோ பூர்வ புண்ணியம் பலம்பெற்ற ரிஷிகளையோ, முனிவர்களையோ சனி எதுவும் செய்து விடுவதில்லை.
ஒன்பதாம் அதிபதி + ஐந்தாம் அதிபதி
லக்னாதிபதி + பஞ்சமாதிபதி
ஐந்து + பதினொன்றாம் அதிபதி
இரண்டு + ஐந்து
நான்காம் அதிபதி + ஐந்தாம் அதிபதி
இவர்கள் இணைந்து, லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில், 2, 11 போன்ற பாவகங்களில் அமர அல்லது பரிவர்த்தனை செய்து கொள்ள, இவர்களின் தசை நடைமுறையில் வரும் போது நல்ல தனப்புழக்கம், தனயோகம் ஏற்படும்.
பூர்வ புண்ணியம் வலுத்து இருப்பவர்களுக்கு பட்டம், பதவி, புகழ் தானாக இவர்களை தேடிவரும். அப்பா சொத்து, அப்பாவின் அப்பா சொத்து, தாத்தா சொத்து, பாட்டன் சொத்து இவர்களுக்கு கிடைத்து பேரும் புகழும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.