ஒன்பதாம் பாவம்

11,366

ஒன்பதாம் பாவகத்தைக் கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?

தகப்பனார், உண்மை, நேர்மை, ஈவு, இரக்கம், கருணை, இரட்சித்தல், கடவுள் பக்தி, குரு விசுவாசம் அல்லது குருபக்தி, பாக்கியங்கள், செல்வம், தீர்த்த யாத்திரைகள், அஷ்டமா சித்துக்கள், மகான்கள், ஞானிகள் தரிசனம், தரும காரியங்கள்(குளம்,கிணறு வெட்டி தாகத்திற்கு தண்ணீர் தருவது, சத்திரம் கட்டுவது), நல்ல காரியங்கள், பிள்ளைகள், கற்பனாசக்தி, நுண்ணறிவு, தவம், தொடை போன்றவைகளை ஒன்பதாமிடத்தைக் கொண்டு அறியலாம்.

ஒன்பது என்ற எண்ணை எந்த எண்ணாலும் பெருக்கி, அந்த முழு எண்ணைக்கூட்டினால் அந்த எண்ணும் ஒன்பதாகவே முற்றுப்பெரும்.

8 × 9=72
7 + 2 = 9 மேலும் 15 × 9 = 135, மொத்தத்தை கூட்ட
1 + 3 + 5 = 9 இப்படி ஒன்பதுக்கு இருக்கும் சிறப்பு வேறு எண்ணுக்கு இல்லை. ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று இந்த ஒன்பதாம் இடத்தை பற்றி ஜோதிடம் சிலாகித்து கூறும். இந்த ஒன்பதாம் இடம் என்பது நம்பிறப்புக்கு, காரணமான, மூலமான தந்தையை பற்றி இந்த ஸ்தானத்தை கொண்டே அறியமுடியும். தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

இது முக்கியமாக தகப்பனார் ஸ்தானத்தை குறிப்பிடுவதால் நல்ல தகப்பனார் அமைய, அவருடைய உதவிகள் கிடைக்க இந்த ஒன்பதாம் வீடு நல்ல முறையில் இருக்க வேண்டும். தகப்பனார் காரகன் சூரியன் என்ற போதிலும், பகலில் பிறந்தவர்களுக்கே சூரியன் பிதுர்காரகன் ஆகின்றார். இரவில் பிறந்தவர்களுக்கு சனியே பிதுர்காரகன் என்ற தகப்பன் காரகனாக வருவார்.

அதேபோல இரவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சந்திரன் மாதுர்காரகனாக வருவார். பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனே தாய் காரகன் அல்லது மாதுர் காரகனாக வருவார். நுணுக்கமான ஆய்வுகளுக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
சகல பாக்கியங்களும் கிடைக்க மேலே குறிப்பிட்ட நல்ல ஆதிபத்திய காரகத்துவங்களை ஜாதகன் அடைய, ஒன்பதாம் இடத்தில் நைசிர்க்கிக சுபர்கள் ஆதிபத்திய விஷேஷத்துடன் அமைய வேண்டும், ஒன்பதாம் இடத்ததிபதியும் நல்ல முறையில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் போன்ற ஸ்தான பலங்களை அடைந்து, காரகனான குருவும், கேந்திர திரிகோணங்களில், பகை, நீசமின்றி இருக்க ஜாதகன் சகல பாக்கியங்களையும் அடைவான்.
குரு ஒன்பதாம் இடம்,அதன் அதிபதி, சூரியன் இவர்களை பார்க்க ஜாதகன் சகல சம்பந்துக்களையும் அடைவான்.

லக்னாதிபதி நின்ற வீட்டுக்கு உடையவன் அதாவது லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் நைசிர்க்கிக சுபராக ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று 5, 9 போன்ற லட்சுமி ஸ்தானத்தில் நிற்க,ஜாதகன் பர்வத யோகத்தை அடைந்து தன, தான்ய, லட்சுமி கடாட்சங்களை அடைந்து, அநேக புண்ணிய ஷேத்திரங்களை தரிசித்து, தீர்த்த ஸ்நானம் செய்து, காணக்கிடைக்காத பல அபூர்வமான மூலிகைகளை கண்டுபிடித்து, ஞானிகள், மகான்கள் தரிசினம் கிடைத்து, அஷ்டமாசித்துகளையும் அடைவான்.

இந்த ஒன்பதாம் இடத்தில், சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் அமரப்பெற்றால் பாக்கியங்கள் கெடும். தகப்பனார் வலிமையை, ஆதரவுகளை கெடுக்கும். சூரியன், சனி சேர்ந்து சூரியனை காட்டிலும் சனி வலுப்பெற்று பாவத்தன்மை, பாவ ராசியில் அமர தந்தையையும், பிள்ளையையும் பிரித்து வைக்கும். தந்தையும், பிள்ளையும் ஒரே இடத்தில் இல்லாமல் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என்று தொழிலுக்காகவோ அல்லது கல்விக்காகவோ தந்தையையும், பிள்ளையையும் இந்த அமைப்பு பிரித்து வைக்கும்.

லக்னாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், சூரியனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திர திரிகோணங்களில் அமைய தந்தை, மகன் இருவருக்கும் இடையிலான உறவு மிக நன்றாக இருக்கும். மாறாக 6, 8, 12 ஆக லக்னாதிபதியும் ஒன்பதாம் அதிபதியும், சூரியனும் 6, 8, 12ஆக அமையும் போது தந்தை, மகன் உறவு கண்டிப்பாக பாதிப்பு அடையும்.

லக்னாதிபதியும், ஏழாமாதிபதியும், பாக்கியாதிபதியும் இணைந்து அல்லது ஒருவருக்கு ஒருவர் சம்பந்தப்பட மனைவி வந்தபின் இவருக்கு எல்லாமே ஏறுமுகமாக இருக்கும். மனைவி பாக்கியவதியாக இருப்பார். மனைவி வந்த பின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பானை பிடித்தவள் பாக்கியசாலி ஆவாள்.

பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பது ஒரு வலுவான அமைப்பு ஆகும். எந்த ஒரு கிரகமுமே தன் வீட்டை தான் பார்ப்பது அந்த வீட்டை வலுப்படுத்தவே செய்யும்.இது பாக்கிய யோகம் எனப்படும். ஒன்பதாம் அதிபதி பத்திலும், பத்தாம் அதிபதி ஒன்பதிலும் இருந்து குருவால் பார்க்கப்படுவது ஸ்ரீ மதி என்ற லட்சுமி யோகமாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இந்த ஒன்பதாம் இடம் என்பது 1, 5, 9 ஆகிய திரிகோணங்களில் உச்ச திரிகோணம் ஆகும்.
இது இலட்சுமி ஸ்தானம் என்றழைக்கப்படும்.
1, 4, 7, 10 போன்ற கேந்திரங்களில் உச்ச கேந்திரம் என்று அழைக்கப்படுவது பத்தாமிடமான, தொழில், ராஜ்யம், ஜீவன, கர்ம ஸ்தானமான பத்தாமிடம் ஆகும். இது விஷ்ணு ஸ்தானம் என்றழைக்கப்படும். இந்த ஒன்பது + பத்தாம் அதிபதியின் சேர்க்கையே தர்ம கர்மாதிபதியோகம் என்றழைக்கப்படுகிறது.இது யோகங்களிலியே சிறந்த, முதல்தரமான யோகமாகும். இந்த யோகம் லட்சுமி கடாட்சம், தன, தான்ய, உத்யோகம், பாக்கியங்களை தரும்.

நீதி, நேர்மை, ஈவு, இரக்கம் மனிதநேயம், தன் பெயர் நிலைத்து நிற்கும் படியாக, குளம் வெட்டுதல், சத்திரம், சாவடி அமைத்து கொடுப்பது, தெய்வ தொண்டு கும்பாபிஷேகம் செய்தல், பேரும், புகழையும், சகல பாக்கியங்களையும் ஒன்பது, பத்து, ஒன்று, ஐந்து போன்ற நல்ல இடங்களில் இந்த தரும, கர்மாதிகள் அமரும் போது
இவர்களுக்கு அளித்து நல்ல மேன்மையான, உயர்வான நிலைக்கு உயர்த்துகிறது.

இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர்களாக, பொது வேலையில், கோவில் பணிகளில் கமிஷன் அடிக்காமல் தன்னுடைய சொந்த காசில் செலவு செய்பவர்கள் இவர்களாத்தான் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொது, வேலைகளையும் ஒப்படைக்கலாம்.
தனக்கு வரவேண்டிய பணம் வராவிட்டாலும், தன்னிடம் கடன் வாங்கியவர் கள் திருப்பி கொடுக்க முடியாமல் போகும் போதும் கூட போனால் போகுது என்று விட்டு விடுவார்கள். இவர்கள் பல முறை பலரிடம் ஏமாந்தாலும்கூட தன்னுடைய குணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள். ஆனால் பணம் மட்டும் தரும கருமாதிபதி யோகம் இருப்பதால் எப்படியும் வந்து விடும். எந்த யோகத்தையும் அனுபவிக்க லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும்.

இந்த தரும, கர்மாதிகள் இருந்த இடம், பார்த்த இடம் பெருகும். வளரும். ஒன்பதாம் வீட்டில் உள்ள குருவை பாக்கியாதிபதி பார்ப்பது சிறப்பு. உயர்ந்த நிலை, உயர் பதவிக்கு செல்ல முடியும்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக மன நிம்மதி, மன அமைதியை தரக்கூடிய கிரகங்கள் சுபக்கிரகங்கள். அதேபோல மனநிம்மதி, மன சாந்தி, மன அமைதி, சாத்வீக குணங்களை கொண்டது இந்த 1, 5, 9போன்ற திரிகோணங்கள். இந்த பாவகங்களில் அதாவது 1, 5, 9ல் பாவிகள் இருக்க மனநிம்மதி கெடும். தெய்வ நம்பிக்கை, தெய்வ அனுக்கிரகம், தெய்வ அனுகூலம் இருக்காது. புத்தி கெடும். அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணம் உண்டாகும்.

ஒன்பதாம் இடமும், அதிபதியும், குருவும் பகை, நீசம், அஸ்தங்கம், கிரகண தோசம் அடைந்து பலகீனப்பட்டு பாவிகள் சேர்க்கைபெற்று தசாபுக்தி நடக்கும் போது பாக்கியங்கள் இழப்பு, சொத்துக்கள் இழப்பு, ராஜதண்டனை, அபகீர்த்தி என்ற கெட்ட பெயர், பொருளாதார வீழ்ச்சி, மனசு கெட்டு போதல், ஊர்பகை, பிதுர் சாபமும் ஏற்பட இடமுண்டு.

ஒன்பதாம் இடம், அதன் அதிபதி, குரு, சூரியன் நல்ல முறையில் அமைய ஜாதகன் மகன் தந்தைக்காற்றும் உதவியை சரிவர செய்து , லட்சுமி கடாட்சத்தையும், பாக்கியங்களையும் அடைவான். இந்த ஒன்பதாம் இடத்தில் பாவக்கிரகங்கள் பாவத்தன்மை பெற்று இருக்க, ஒன்பதாம் இடம் சரராசியாக இருக்கும் பட்சத்தில் , சூரியன், சனி சேர்க்கையும், லக்னாதிபதியும், பாக்கியாதிபதியும் ஆறெட்டாக அமைய ஜாதகன் வெளிநாட்டில் இருந்து தந்தையின் இறுதி காலத்தில் தந்தைக்கு உதவமுடியாமலும், தந்தையின் இறுதி காரியங்களில் தாமதமாக வந்துதான் இறுதி காரியங்களை செய்வான்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More