“வரும் சசிகேந்திரத்தில் மன்னவன் இருக்க
வந்த அரசன் கேந்திரத்தில் அம்புலி இருக்க
விரவும் மற்றிடத்தின் மற்றோர் மேவிய தோசம்
“யானை ஒருசிங்கம் கண்டவாறு “ஓதுமாம்
கேசரி யோகம் யோகம்.”
சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவும், குருவுக்கு கேந்திரத்தில் சந்திரனும் இருப்பது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.
கஜம்னா யானை. கேசரினா சிங்கம். இவைகள் காட்டில் மாபெரும் சக்தி படைத்தவைகள். ஒன்று உருவத்தில் பெரியது. வலிமையிலும் பெரியது.இன்னொன்று காட்டுக்கே ராஜா. வனத்துக்கு ராஜா. இந்த மாபெரும் சக்திகளுக்கு இணையாக இந்த யோகம் இருப்பதால் கஜகேசரி யோகம் என்றழைக்கப்பட்டது.
இவைகள் காட்டில நூறு வயதுகள் வாழும். எனவே கஜகேசரி யோகம் நீண்ட ஆயுளை கொடுத்து விடுகிறது. ஆயுள் இருந்தால் தானே இந்த யோகங்களை எல்லாம் அனுபவிக்க முடியும். பத்து பேருக்கு தலைவனாக முடியும். பத்துபேர் உங்கள் பின்னாடி வருவார்கள். அரசியல் கட்சிக்கு தலைவனாக முடியும்.உள்ளாட்சி மன்றங்களில் தலைவர், வார்டு மெம்பர் போன்ற பஞ்சாயத்து பதவிகளை தருகிறது. இறப்புக்கு பிறகும் அழியாத புகழ் உடையவன்.அரச பூஜிதை உடையவன். நல்ல அறிவும், உறுதியான மனமும், சத்ருக்களை வெல்லும் ஆற்றலையும் இந்த கஜகேசரி யோகம் ஜாதகனுக்கு தருகிறது.
யாருக்கு யோகம் பலனை தராது?
சரி எல்லோருக்குமே இந்த யோகம் பலனை செய்து விடுமா? என்று கேட்டால் எல்லோருக்குமே நல்ல பலன்களை தராது. சரி யாருக்கு தராது? இவர்களில் ஒருவர் 6, 8, 12 அதிபதியாக அமைந்துவிடக்கூடாது. பகை கிரகங்களின் திருஷ்டியை பெற்று விடக்கூடாது. லக்ன, ராசிகளின் 6, 8, 12 ம்அதிபதிகள் சாரம் , பாதகாதிபதிகள் சாரம் பெற்று விடக்கூடாது. நல்ல ஆதிபத்தியம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
லக்னத்தில் குரு திக்பலம் பெற்று, நான்கில் சந்திரன் திக்பலம் பெற்று கஜகேசரி யோகம் அமைய தன்னம்பிக்கை, மனோபலம், சந்திரன், குரு ராஜகிரகங்கள் என்பதால் அரசு பதவி, அரசுவேலை, ஆசிரியர், புரொபசர், ஆலோசகர், வங்கி அதிகாரி போன்ற பதவிகளை தரும். நல்ல நிர்வாக திறமையை தரும்.
இரண்டில் குருபகவான் இருக்கப்பெற்று, ஐந்து அல்லது பதினொன்றாம் பாவத்தில் சந்திரன் இருக்க நல்ல தனப்புழக்கம், நல்ல மனோதிடம், பேங்க், வங்கி, ஆசிரியர், வாக்கால் பிழைக்கும் தொழில், வக்கீல், சாஸ்திர அறிவு, போன்றவற்றாலும் மூத்த சகோதர்களாலும் நன்மைகளையும், சமுதாயத்தில் இவர்களது பேச்சுக்கு ஒரு மரியாதையும், கொடுத்த வாக்கு தவறாத உத்தமர்கள் இவர்கள்.
நான்கில் சந்திரனும், ஏழில் குருவும் அமைந்து கஜகேசரி யோகம் அமையப்பெற்றால் நான்காம் இடத்து ஆதிபத்தியங்களான தாயார், மனை, மாடு, கொடுக்கல், வாங்கல் போக்குவரத்து போன்ற நான்காம் இடத்து ஆதிபத்தியங்கள் வலுப்பெறுவதோடு நல்ல மனைவி, அழகான மனைவி, அன்பான மனைவி, பக்தியுள்ள மனைவி, பிறர் பொறாமை படக்கூடிய அளவில், பையனைக்காட்டிலும் அழகான பொண்ணாக
நல்ல வசதியான, அந்தஸ்துள்ள இடத்தில் இருந்து பொண்ணு வரும்.
யாருக்கு சிறப்பை தராது?
ஒன்பதில் குரு இருக்கலாம். ஆனால் 3, 6, 12ல் சந்திரன் இருப்பதால் ஓரளவு நன்மைகளை தரும். இருவரும் சமசப்தமமாக இருப்பது ஓரளவு நன்மையை தரும். இருவரும் சமசப்தமமாக இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
இவர்கள் இருவரும் ஒளிக்கிரகங்கள். நேருக்கு நேராக பார்ப்பது ஒளியை, குளிர்ச்சியை அதிகரிக்கும் என்பதால் அளவுக்கு மீறிய வெப்பமும், அளவுக்கு மீறிய குளிர்ச்சியையும் நாம் அனுபவிக்க முடியாது என்பதால் இந்த சமசப்தமமான கஜகேசரி யோகம் அவ்வளவு சிறப்பை தராது. அளவுக்கு அதிகமான வெப்ப நிலையில் இருக்கும் நீரை நாம் அருந்த முடியாது.100 டிகிரி செல்சியசில் இருக்கும் நீரையோ அல்லது 0 டிகிரியில் உறைந்து நீரான பனிக்கட்டியையோ நாம் உடனே எடுத்து குடிக்க முடியாது.
அப்ப சந்திரனும், குருவும் ஒருவருக்கு ஒருவர் 1, 4 அல்லது 1, 10 அல்லது 4, 7அல்லது 4, 7ஆக இருப்பது சாலச்சிறந்தது. சமசப்தமமாக இருப்பது அவ்வளவு நல்லது அல்ல.
இந்த கஜகேசரி யோகம் நல்ல பலன்களை அளிக்க வேண்டுமானால் சந்திரன், மற்றும் குரு இவர்கள் அசுப ஆதிபத்தியத்தாலோ, அல்லது பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று கெட்டு விடக்கூடாது. பகை கிரகங்கள் பார்வையை, சேர்க்கையை பெறக்கூடாது.
இந்த கஜகேசரி யோகம் இன்னும் சிறப்பாக வேலைசெய்ய வேண்டும் என்றால் பத்தில் இருக்கும் கிரகம் பலமாக இருக்க வேண்டும். சந்திரன் குருவுக்கு நான்கில் இருந்து, குரு சந்திரனுக்கு பத்தில் அமைய குரு தனக்கு நான்கில் உள்ள சந்திரன்மேல் ஆதிக்கம் செலுத்துவார். அப்போது சந்திரன் கொஞ்சம் பலவீனமாக இருந்தால் கூட குரு சந்திரனுக்கு பத்தில் ஆட்சி, அல்லது, உச்சமாக அல்லது லக்னகேந்திரத்திரத்தில் திக்பலமாக அமையும் போது குரு நல்ல ஒளியோடு இருந்து தனக்கு நாலில் இருக்கும் சந்திரனை தனது ஆதிக்கத்தில் சுபப்படுத்துவார் & பலப்படுத்துவார்.
அதேபோல சந்திரன் குருவுக்கு பத்தில் நல்ல ஒளியோடு பௌர்ணமி சந்திரனாகவோ, திக்பலத்தோடு அல்லது ஆட்சி உச்சமாக இருக்கும் போது குரு பலவீனமாக இருந்தாலும் சந்திரனின் ஒளியின் ஆதிக்கத்தால் குரு பலப்படுவார். அவர் வலிமையடைவார்.
மாறாக பத்தில் இருக்கும் கிரகம் நீசம், பகை, அஸ்தங்கம், வக்ரம் போன்ற ஸ்தான பலம் கெட்டிருந்தால் தனக்கு நான்கில் உள்ள கிரகத்தையும் பலவீனப்படுத்தும்.குருவுக்கு பத்தில் சந்திரன் நிற்பதாக கொண்டோமானால் அவர் பலவீனமாக இருந்தால் தனக்கு நான்கில் உள்ள கிரகத்தையும் பலவீனப்படுத்துவார்.