இன்று கடன் வாங்காத நபர்கள் ரொம்ப குறைவு (நான் உள்பட)
வீட்டு கடன், கல்வி கடன், வாகன கடன், பயிர் கடன், தொழில் கடன் இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் கடன் வாங்கி கொண்டு தான் உள்ளோம்.
கடன் ஏன் ஏற்படுகிறது? கடன் தீருமா? கடன் எப்போது தீரும் கடனை அடைக்க என்ன செய்யலாம்?
பிறரிடம் கடன் கொடுத்து ஏமாந்தவர்களும், கடன் வாங்கி விட்டு கடன் கட்ட முடியாமல் விழிபிதுங்கி, கடனால் அழிந்த குடும்பங்களும் பல உண்டு. கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாக்கியம் கடன்பட்டவரின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஜாதகப்பிரகாரம் கடன் தொல்லையை தரும் கிரகம் செவ்வாய்.
கடன் தொல்லையை தரும் ஸ்தானம் ஆறாமிடம். மற்றும் ஆறாமாதி.
ஆறாமிடமும், அதன் அதிபதியும், காரகன் செவ்வாயும் சுபத்தன்மை அடைய கடன், நோய், சத்ரு, வம்பு, வழக்கு இல்லாமல் பிழைக்கலாம்.
இவர்கள் பாவத்துவம் பெற்று ஆட்சி உச்சம் பெற்று வலுத்தால் கடன், நோய், எதிரி வலுத்து விடுவார்கள். வலுத்து கெடுப்பார்கள்.
சூரியன், செவ்வாய், ராகு,கேதுக்கள், சனி இவர்கள் லக்ன பாவர்களாகவும் அமைந்து ஆறில் அமர கடன் இல்லாமல் வாழ வழி காட்டும். எதிரிகளை வெற்றி பெற வைக்கும்.
லக்ன, ராசிக்கு இரண்டாமிடத்தோடு அல்லது பதினொன்றாம் இடத்தோடு அல்லது இந்த அதிபதிகளோடு செவ்வாய், புதன்(கால புருஷனுக்கு ஆறாமாதி), ஆறாமிடத்ததிபதி இணையும் போது அவர்களின் தசாபுக்திகளில் கடன் ஏற்படும்.
உதாரணமாக மேச லக்னத்தை எடுத்து கொண்டு
இரண்டாமிடத்திபதியோடு (சுக்கிரனோடு) செவ்வாய், புதன் சேர்க்கை பெற அவர்களுக்கு கடன் ஏற்படும்.
இது அவர்களின் திசாபுக்தியில் நடக்கும்.
செவ்வாயே கடனுக்கு காரகன் ஆவார். இவரே கடன் ஸ்தானத்திற்கும் ஆதிபத்தியத்தை பெறும் போது கடன் ஏற்படும்.
இந்த அமைப்பு மிதுன, விருச்சிக லக்ன, ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி கடன் பிரச்னையில் சிக்கி தவிப்பார்கள்.
இரண்டாமிடம், 11 ம்மிடம் இவற்றில் நீச, பகை, அஸ்தமனம் பெற்ற கிரகம் இருந்தாலும்
2, 11 ம் அதிபதிகள், தன காரகனான குரு பகவான் நீசம், பகை, அஸ்தமனம் பெற்றாலும் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்னை வாட்டும்
ஆறுக்குடையவன் தசாபுக்தி நடந்து அவன் சுபக்கிரகங்களின்
பார்வையை பெறாவிட்டாலும் அவன் ஆறாமிடத்தை பார்த்தாலும் கடன் தொல்லையில் சிக்க வைக்கும்.
ஆறாமிடம், ஆறாமிடத்ததிபதிய விட லக்னாதிபதி, லக்னம் வலுத்து விட கடனில் இருந்து மீண்டு விடுவார்கள்.
ஆறாமாதியும், பத்தாம் ஆதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள தொழிலில் அகலக்கால் வைத்து தொழிலுக்காக கடன் ஏற்படும்
நான்குக்கு உடையவனும், ஆறுக்குடையவனும் பரிவர்த்தனை செய்து கொள்ள தாயாருக்காகவும், சொந்த வீடு அமைத்து கொள்வதால் கடன் ஏற்படும்
ஆறாமிடத்துடன் இரண்டு பரிவர்த்தனை செய்து கொள்ள
குடும்பத்திற்காக ஆடம்பர செலவு செய்து கடன் ஏற்படும் அல்லது திருமணத்திற்காக சுய குடும்பம் அமைக்க கடன் ஏற்படும்.
கோட்சாரத்தில் குரு பகவான் ஆறுக்கு வந்தாலும், ஆறாம் இடத்தை பார்த்தாலும், சுய ஜாதகத்தில் குருபகவான் வலுத்து ஆறாமிடத்தை பார்த்து அல்லது ஆறாமிடத்தில் லக்ன யோகர்களுடன் இணைந்து இருக்கும் போது சுபர்கள் பார்க்கும் இடத்தை இருக்கும் இடத்தை வாழவைப்பார்கள் என்ற விதிப்படி கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு இவையெல்லாம் பெருகும். வளரும்.
உதாரணமாக நான் மிதுனம் லக்கனம்
ரிஷப ராசி எனக்கு 29 வயதில் இருந்தே குரு தசை நடக்கிறது.குரு இரண்டில் உச்சத்தில் இருந்து ஆறாம் இடத்தை பார்த்து கொண்டு உள்ளது.வலுத்து ஆறாம் இடத்தை பார்த்து தசையை வேறு நடத்தி கொண்டு உள்ளது. போதாக்குறைக்கு உச்ச சந்திரன் ஆறாம் இடத்தை பார்த்து கொண்டு உள்ளார். இரண்டு உச்ச சுபக்கிரகங்கள் ஆறாம் இடத்தை பார்ப்பதால் இந்த பத்து வருட காலங்களும் கடன் பிரச்சினை இருந்து கொண்டே தான் உள்ளது. ஒரு கடனை அடைப்பான் இன்னொரு கடன் வந்துரும்.
எனவே குரு ஆறாம் இடத்தை பாத்துருச்சு கடன் தீரும் என்று எண்ண வேண்டாம். ஆனால் கடனை தரக்கூடிய அந்த குருபகவான் கடனை அடைக்க கூடிய வழிகளையும் அவரே ஏற்படுத்தி தருவார்.
ஏழரை சனி, அஸ்டமசனி காலங்களில், தொழிலை கெடுத்து கடனை தருவார். அர்த்தாஷ்டம சனி காலத்தில் வீடுகட்ட வைத்து,வீடு புனரமைப்பு, வாகன, தாய் வழிகளில் செலவுகளை அதிகம் ஏற்படுத்தி பற்றாக்குறையை தந்து கடன் ஏற்படுத்துவார்.
குரு ஆறை பார்த்து விட்டார். கடன் எதிரி வம்பு, வழக்கு குறையும் என்று கணிக்க கூடாது. கடனை கொடுக்க ஒரு பாவகம், பாவாதிபதி என்ற ஒருவர் இருந்தால் கடனிலிருந்து மீண்டுவர ,கடனிலிருந்து மீண்டு வர ஒரு பாவகம் இருக்கும் அல்லவா? அது எந்த பாவகம்?
அது வேற யாரும் இல்லைங்க. பதினொன்றாம் பாவக அதிபதி. பதினொன்றாம் இடம் உங்களை கடனிலிருந்து காப்பாற்றும்.
அந்த பதினொன்றாம் அதிபதியின் தசாபுக்திகளில், அந்தரங்கங்களில்,பதினொன்றாம் பாவத்தில் அமர்ந்த சுபகிரகங்கள், லக்ன யோகர்களின் திசாபுக்திகளில் உங்களுக்கு பணம் வந்து பையை நிரப்பும். அப்போது கடன் அடைந்து விடும். புரியுதுங்களா???
கடன் ஏன் ஏற்படுது?
வருமானம் குறையும் போது, அதிக செலவினங்கள் ஏற்படும் போது, அதிக விரையங்கள் ஏற்பட்டு பற்றாக்குறை ஏற்படும் போது, தொழில் இல்லாத போது, கடன் ஏற்படுகிறது. அதிக ஆடம்பரங்களின் மூலமாக, டாம்பீகத்திற்காக கடன் ஏற்படுகிறது. செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். விரலுக்கேத்த வீக்கம் என்பதை போல வாழ பழகுங்கள் வருமானத்துக்குள்ள செலவுபண்ண பாருங்கள்.
ஆறாமாதிபதி வலுத்து பாவத்தன்மை பெற்றால் கடன் ஏற்படும் என்று பார்த்தோம். கடன் எப்போது தீரும் என்று ஒருவர் கேட்பார் அல்லவா?
லக்னாதிபதி ஆறாமாதிபதியை விடஅதிக வலுப்பெற்று விட்டால் கடன் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.
பதினொன்றாம் இடத்தின்அதிபதியின் தசாபுக்திகளில் கடன் தீரும். நல்ல நிலையில் உள்ள பஞ்சம, பாக்கியாதிபதிகள் திசைகளிலும் , சனி கோள்சாரத்தில் 3, 6, 11போன்ற இடங்களில் சஞ்சாரம் செய்யும் போதும், குரு, 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில் சஞ்சாரம் செய்யும் போதும் முக்கியமான அவசரமான கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
கடன் தீர எதாவது பரிகாரம் இருக்கா?
இருக்கிறது. அதாவது மைத்ரேய முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது.
மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன?
செவ்வாய் கிழமையும், அசுவனி நட்சத்திரமும், மேச லக்னமும் அமைந்தநேரமும், அல்லது அனுசம் நட்சத்திரமும், விருச்சிக லக்னமும், செவ்வாய் கிழமையாக அமைந்த நேரமே மைத்ரேய முகூர்த்தம் என்றழைக்கப்படுகிறது.
இது மிகவும் விஷேஷமான காலமாகும். எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,எளிமையாக தீர்த்து வைக்கும் காலமாகும். இந்த காலநேரத்தில் ஒரு பெரிய கடனில் ஒரு பகுதியை இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் அடைக்க அந்த கடன் ரொம்ப ஈசியாக அடைந்து விடும். அந்த கடனை அடைக்க உங்களுக்கு வழிபிறக்கும். கடனை அடைக்கும் வழியை ஏற்படுத்தி தரும்.
இன்னொன்று பிரதோசம் கேள்வி பட்டிருப்பீங்க. அதாவது பௌணர்மி கழித்து வரக்கூடிய பதிமூன்றாவது நாள், அமாவாசை கழித்து வரக்கூடிய பதின்மூன்றாவது நாள் அதாவது திரயோதசி திதியில் மாலை 4.30 மணிக்கு மேல் 6மணிக்குள் வரும்காலமே பிரதோஷ காலமாகும். பிரதோசம் அப்படினா குற்றம் அற்ற என்று பொருள். தோசம் அப்படினா குற்றம் அப்படினு அர்த்தம். பிரதோசம் அப்படினா குற்றமற்ற நேரம் என்று பொருள்.
ஏன் இந்த பிரதோசம் குற்றம் அற்ற நேரம் அப்படினா இந்த நேரத்தில் தான் சிவபெருமான் ஆலகால விசத்தை உண்டு உலகமக்களையும் ,தேவர்களையும் காப்பாற்றினார். திருநீலகண்டன் என்ற நாமத்தை பெற்றார். இந்த நேரத்தில் தான்
நரசிம்மர் அவதாரம் எடுத்தார் என்று வரலாறுகளை பார்க்கிறோம்.
செவ்வாய் கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷத்தை ருண, விமோசன பிரதோஷம் என்று அழைக்கிறார்கள். இந்த நேரத்தில், இந்த கிழமையில் நீங்கள் பிரதோஷ வழிபாடு செய்து கடன் அடைய வேண்டும் என்று வேண்டுதல் வைக்க உங்கள் கடன் அடையும்.
குளிகன் காலம்
குளிகன் காலம் என்று ஒன்று ஒவ்வொரு நாளும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் அந்த நேரத்தில் உங்கள் கடனை அடைக்க அல்லது கடனில் ஒரு பகுதியை அடைக்க உங்கள் கடன் படிப்படியாக தீரும். குளிகனில் எந்த காரியம் செய்தாலும் அந்த காரியம் விருத்தியம்சம் பெறும்.திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகும்.
குளிகன் காலத்தை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
குளிகன் என்பவன் சனியின் புதல்வன் என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குளிகன் சனியின் துணைக்கோள். குளிகன் தனது தந்தையின் நாளான சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிவரை ஆரம்பமாகும்.
அப்படியே ரிவர்ஸ் ல வெள்ளிக்கிழமை 7.30_ மணி முதல் 9.0 மணிவரை குளிகன் காலம் ஆகும். அப்படியே கிழமைகளை ரிவர்ஸ்ல எண்ணி
சனி, வெள்ளி, வியாழன், புதன் , செவ்வாய், திங்கள் , ஞாயிறு
என்று எண்ணி ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஒன்றரை மணி நேரத்தை கூட்ட வரும் காலம் ஆகும்.
- வியாழக்கிழமை 9 மணி முதல் 10.30 மணிவரை குளிகன் காலம் ஆகும்.
- புதன் கிழமை 10.30 மணி முதல் 12 மணிவரை குளிகன் காலம்
- செவ்வாய் கிழமை 12 மணி முதல் 1.30 மணிவரை குளிகன் காலம் ஆகும்.
- திங்கட்கிழமை 1 .30 மணி முதல் 3 மணி வரை
- ஞாயிற்றுக்கிழமை 3 மணி முதல் 4.30 வரை குளிகன் காலம் ஆகும்.