ஜோதிடத்தில் ஜாதகத்திற்கும், ஆருடம் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

உலகியல் ஜோதிட விதிகள் எந்தளவு சாத்தியம்? எந்தளவு உண்மை?

ஜோதிடம் என்பது முறைப்படுத்தப்பட்ட, வானில் கிரகங்களின் கதிர்வீச்சில் மனித மற்றும் உயிர்களில் ஏற்படும் மாற்றத்தை குறிப்பது.

இதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

இன்று சூரியனை சுற்றி அனைத்து கிரகங்களும் சுழல்கிறது என ,அறிவியல் ஆராய்ந்து பார்த்து ஒத்துக் கொள்கிறது.

ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்தே நவகிரகத்தில் நடுவில் சூரியன் இருப்பதை நம் முன்னோர்கள் ஞான திருஷ்டி மூலம் அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வளவு ஏன் 70 ஆண்டுகளுக்கு முன்பு இன்று விண்ணையே ஆண்டு கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இல்லை.

அந்த காலகட்டத்தில், இந்த நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் ஏற்படும் என எப்படி கணிக்க முடிந்தது.

இன்றும் பஞ்சாங்கம் மூலமாக கிரகணம் ஏற்படும் காலகட்டங்களை துல்லியமாக அறிய முடியும்.

Basically astrology is a science.

பத்தும் பத்தும் கூட்டினால் 20 என்பதைப் போல காலக் கணிதமே ஜோதிடம்.

இதை சரியாக, முறையாக, கையாண்டால் நிச்சயமாக பலன் தவறுவது குறைவே.

சூரியன் உச்சமாகும் சித்திரை மாதமே தமிழ் வருடப்பிறப்பு.

இதை நாம் அனைவரும் உணரமுடியும். சித்திரை மாதம் வெயில் கொளுத்துகிறது அல்லவா?

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நாத்திகவாதிகள் சொல்லும் கருத்துக்களை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடக் வேண்டியதுதான்.

அதேபோல் அமாவாசை, பௌர்ணமி அன்று கடலில் சீற்றம் ஏற்படுவதை நாம் உணர முடிகிறது. கண்ணால் காணவும் முடிகிறது.

அதேநேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக துன்புறுத்துவதையும் பார்க்க முடிகிறது.

காலத்தின் கோலத்தாலலும், நம் நாட்டின் மீது அன்னியர்களின் படையெடுப்பாலும் பல ஜோதிட கிரந்தங்கள் அழிக்கப்பட்டன.

நேற்று உலகக் கோப்பை வெற்றி பற்றி பல ஜோதிட குழுக்களில் பல விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அதைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்து.

விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திலும் சுனாமி வருவதையோ, நிலநடுக்கம் ஏற்படுவதையோ உறுதியாக இந்த இடத்தில் ஏற்படும் என்று எவரும் கணித்துக் கூற முடிவதில்லை

திடீரென ஏற்படும் கூட்டு மரணத்தைப் பற்றி சொல்ல, ஜோதிடத்தில் இன்னும் வகிக்கும் விதிகள் வகுக்கப்படவில்லை.

இந்த இடத்தில், இத்தனை மணிக்கு இத்தனை பேர் மரணம் அடைவார்கள் என யாராலும் கூற முடியாது.

இதற்கு உதாரணமாக ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்ட மரண சம்பவங்களை உதாரணமாக கூறலாம் .

கிட்டத்தட்ட 5 நிமிடத்தில் 2 லட்சம் பேர் மடிந்தனர்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பு இருக்குமா?அல்லது மாரக திசை சென்று கொண்டிருக்குமா? நிச்சயமாக இருக்காது.

உலக ஜோதிட விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை.

நேற்றைய கிரிக்கெட் போட்டி பற்றி பல ஜோதிட குழுக்களிலும் விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால் போட்டி நடக்கும் முதல்நாளே அதைப் பற்றி விலா வாரியாக கணித்து இரண்டு அணிகளில் ஒரு அணி வெற்றி பெறும் என கூறிவிடுகின்றனர். மேன் ஆப் தி மேட்ச் யும் கணித்து பலன் கொடுத்துவிடுகின்றனர்.

இந்த உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட 5 ஆட்டங்களில் மழையால் முடிவு இல்லாமல் போனது.

லீக் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆட்டம் நடைபெறவே இல்லை. அதற்கும் கணிப்பு வெளியிட்டு Man of the match. Score total. எத்தனை ரன்னில், எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெரும் எனஇதற்கும் சேர்த்தே அனைவரும் கணிப்பு வெளியிட்டிருந்தனர் . கேட்க நகைச்சுவையாக இருந்தது.

அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முதலில் அந்தப் போட்டி முழுமையாக நடைபெறுமா நடைபெறாதா என சரியாக கணித்து விட்டு அதற்கப்புறம் வெற்றி பெறும் அணியை தீர்மானிப்பது நல்லது.

இரண்டு அணிகள் விளையாடுகின்றன இரண்டு அணிகளில் ஒரு அணி தான் வெற்றி பெறப் போகிறது.

எதை வைத்து கணித்தார்கள் என்பதை இவர்கள் யாரும் முழுமையாக விளக்கியேதே இல்லை.

பிள்ளையார் குத்து ஒன்னு. ஊமை குத்து ஒன்னு. இரண்டில் ஒன்று.

வந்தா மலை. போனா …… என்ற அமைப்பிலேயே பல கணிப்புகள் இருப்பதை காண முடிந்தது.

ஒருவர் கூட இந்த விதி மூலம், இந்த அணி ஜெயிக்கும் என விளக்கவே இல்லை.

இவர்கள் எந்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இரண்டு கேப்டன்களின் பிறந்த நேரமா? டாஸ் போடும் நேரமா? அணியை தேர்ந்தெடுக்கும் நேரமா? என எவற்றையும் குறிப்பிடுவதில்லை.

சம்பந்தப்பட்ட இரு அணிகளின் கேப்டன்களின் பிறந்த நேரம் என்றால், அது இணையத்தில் உள்ளதென்றால் அது எந்த அளவு உண்மையாக இருக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

(இதைப்பற்றி கடந்த நாடாளு மன்ற தேர்தல் முடிவுகளில் ஒரு கட்டுரை போட்டிருந்தேன். அதையும் இதோடு இணைக்கிறேன்.)

இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா இந்தியா நியூசிலாந்து இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா என ஐந்து அணிகள் அரையிறுதிக்கு வரும் என கிரிக்கெட் ஞானம் ஓரளவு கொண்டவர்கள் கூட உணர முடியும்.

அதில் வழக்கம்போல துரதிர்ஷ்ட அணியான தென் ஆப்பிரிக்கா முதல் சுற்றோடு நடையை கட்டியது.

இலங்கை பாகிஸ்தான் அணிகள் நார்மலான அளவு விளையாடிக்கொண்டிருந்தன.

புள்ள பூச்சி அணியான வங்கதேசமும் நல்ல முன்னேற்றம் கண்டு இருந்தது.

ஆனால் நடைமுறையில், கிரிக்கெட் அனுபவத்தில் நல்ல வலுவான பாமில் இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் இங்கிலாந்து, நியூசிலாந்தும் நல்ல அணி நல்ல வலுவான அணியாகவே இருந்தது.

அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து மோதும் போது கிட்டத்தட்ட 99.9% ஏன் 100 சதவீதம் இந்தியா வெற்றி பெறும் என பலரும் கணித்திருந்தனர்.

இவர்களில் ஒருவர் கூட விதிப்படி விளக்கவில்லை .

ஆனால் நடந்தது என்ன 235 இலக்கை எட்ட முடியாமல் இந்தியா திணறி தோல்வியடைந்தது.

இன்று நல்ல நிலையில் இருக்கும் இந்திய அணி 235 ரன்களை எட்ட முடியாமல் போனது ஆச்சரியமே.

100% எல்லோர் கணிப்பும் தவறாகியது.

ஒரு இந்தியனாக, இந்தியா வெற்றி பெற வேண்டும் என அவர்களின் மனது சொல்லிய ஆருடமே கணிப்பாக வெளிவந்தது.

யாரும் முறைப்படி விதிப்படி கணிக்கவில்லை.

இதுதான் உண்மை.

அதே நேரத்தில் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் ஒரு செயலை நம் மனது முழுமையாக நம்பி அதை வெளியிடுவது ஆருடம் ஆகும்.

இதை எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால் மழை பெய்ய போகிறதென்றால் மயில் தோகை விரித்தாடும்.

அதுபோல் இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் சுனாமி வருவதை விலங்குகள், பறவைகள் முன்கூட்டியே உணர முடியும்.

ஆழ்மனத்தின் முடிவான இறுதி நிலையே ஆருடம் ஆகும்.

ஒருசிலருக்கு இயற்கையின் பிரபஞ்ச ஆற்றலினால் இந்த சக்தி அவர்களுக்கு உண்டு. அவர்கள் சொல்லுவது ஆருடம் ஆகும். ஜோதிடம் ஆகாது.

மறுபடியும் சொல்கிறேன் உலகியல் ஜோதிட விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை. இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட முடிவை சார்ந்தது .

(நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் கட்டுரை

ஸ்ரீராமஜெயம்

உலகியல் ஜோதிட நிகழ்வுகளான தேர்தல் கணிப்பு, கிரிக்கெட் கணிப்பு, இயற்கை சீற்றங்களான மழை, சுனாமி, பூகம்பம் வருவது, கூட்டு மரணம் ஏற்படுவது, இவை ஜோதிடத்தில் எந்த அளவு நம்பகத்தன்மையாக இருக்கும்?

ஒரு தனிமனித ஜாதகமே எந்த அளவு துல்லியமாக இருக்கும் என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் மருத்துவமனையில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அந்த மருத்துவமனையில் மருத்துவர் தாய், சேய் என இரண்டு பேரையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பார்.

பிறக்கும் குழந்தை லக்ன சந்தியில் லக்னம் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கும் குழந்தை என வைத்துக் கொள்வோம்.

அந்தச் சூழ்நிலையில் அந்த மருத்துவமனை குறித்து கொடுக்கும் நேரமே இறுதி செய்யப்படுகிறது.

ஆனால் நடைமுறையில் நடக்கும் பலன்கள் வித்தியாசமானதாக இருக்கும்.

ஆனால் நடக்கும் பலன்களை வைத்து தனக்கு இந்த லக்னம் தான் என உறுதிப்படுத்த அந்தக் குறிப்பிட்ட நபரால் மட்டுமே முடியும்.

அதுமட்டுமல்லாமல் இன்று டிஜிட்டல் வேர்ல்ட் எனப்படும் உலகத்தில், உலக கடிகாரம் அனைத்தும் ஒரே நேரத்தை காட்டும். நேர வித்தியாசம் இருக்காது.

முப்பது வருடங்களுக்கு முன் இது சாத்தியமல்ல.

புரியும்படி சொன்னால் நாம் அன்றைய காலகட்டங்களில் நம் பக்கத்து வீட்டுக்காரரிடமோ, முகம் தெரியாத ஒரு நபர்களிடமும் கேட்டு நம் கடிகார மணியை சரி செய்திருப்போம்.

மகன் பள்ளி செல்வதற்கு தாமதமாக்குவான் என்ற காரணத்தினால் கடிகாரத்தை பத்து நிமிடம் அதிகமாக வைத்திருப்பார்கள்.

அவரிடம் போய் இவர் நேரத்தை சரி செய்து இவர் வீட்டில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு சரியான நேரம் எப்படி இருக்க முடியும்.

நிலைமை இப்படி இருக்க

50 வருடங்களுக்குப் பிறந்த ஒருவரின் ஜாதகம் துல்லியமாக இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

ஜோதிடத்தில் லக்னம் மாறினால் அனைத்தும் மாறி விடும்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது பலர் ஜோதிட கணிப்பை வெளியிட்டு வெளியிட்டனர்.

இறுதிப் போட்டியில் சென்னை வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என உறுதியாக கணித்துக் கூறினார்.

அதற்கேற்றாற்போல் மும்பையும் 150 ரன்னில் சுருண்டு விட்டது.

150 ரன் என்பது இன்றைய காலகட்டங்களில் 20 ஓவர் போட்டிகளில் ஒரு இலக்கேஅல்ல.

நானும் சென்னை உறுதியாக கோப்பையை வெல்லும் என்று நம்பினேன்.

அதற்கேற்றாற்போல் ஆரம்ப 6 ஓவர்களில் நல்ல ரன்னை சென்னை அணி குவித்தது.

கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் 150 ரன் என்பது மிக எளிதான இலக்கே.

ஆனால் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது.

கடைசி பந்து வரை ஆட்டத்தின் முடிவு எந்த விதமாகவும் இருக்கலாம் என்ற உண்மையை உணர்த்தியது.

இவர்கள் எந்த அடிப்படையில் ஜோதிட கணிப்பை கணிக்கின்றனர் என்பது சுத்தமாக புரியவில்லை.

ரோகித் சர்மாவின் ஜாதகமா, டோனியின் ஜாதகமா அல்லது Toss போடப்பட்ட நேரத்தை அடிப்படையாக கொண்ட பிரசன்ன லக்னத்தை கொண்டா என்பதும் தெரியவில்லை.

இரண்டு அணிகள் விளையாடுகின்றன இரண்டு அணிகளில் ஒரு அணி மட்டுமே வெற்றி பெறப் போகிறது என்பதை வைத்துக் கொண்டு தன் மனதில் தோன்றியதை சொல்லும் ஜோதிடர்கள் தான் பலர் உள்ளனர்.

பட்டா பாக்கியம், படாட்டி லேகியம் என்ற நிலையில் உள்ளனர்.

சில நேரங்களில் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதையாக , எதார்த்தமாக சில நேரங்களில் ஒரே அணி வெற்றி பெறும் அமைப்பும் உண்டாகிறது.

ஜோதிட விதிகளுக்கு உட்பட்டு சரியாக கணித்து இருக்கிறார்களா என்பதைக் கேட்டால் மில்லியன் டாலர் கேள்வி ஆகவே அது இருக்கும்.

சரி, பிரசன்ன லக்கினத்தை வைத்து கணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் அதில் எத்தனை பேர் ஆன்மாவை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால் அதுவும் மில்லியன் டாலர் கேள்வியே.

அதிலும் அவர்கள் எந்த நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதுவும் கேள்வி குறியே.

இதுபோல் பல காரணங்களால் தவறுகள் நேர்கிறது அதற்கு ஜோதிடம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

அதுபோல் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பலர் கருத்து கணிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

நான் ஒரு கட்சியை சார்ந்து இருக்கிறேன் என்றால் அது சார்ந்த கட்சியே ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவேன்.

நான் ஒரு ஜோதிடராக இருந்தாலும் என் ஆழ் மனதில் நான் சார்ந்த கட்சியே ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவேன். இது மனித இயல்பு.

ஜோதிட விதிகளின்படி எந்த கட்சி ஜெயிக்கும் என்பதை உறுதியிட்டுக் கூற இயலாத நிலையில் அதைத் தவிர்ப்பதே நல்லது.

தனி மனித ஜோதிடவிதிகள் அளவிற்கு, உலகியல் ஜோதிடத்திற்கு தெளிவான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை.

அப்படி யாராவது கூறி, அது நடந்தால் அது எதார்த்தமானதே.

அதுபோல் கூட்டு மரணம் தோஷத்திற்கும் சரியான ஜோதிட விதிகள் இன்றளவும் ஜோதிடத்தில் வகுக்கப்படவில்லை.

பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த ஜோதிட விதிகளை பொது வெளியில் பயன்படுத்தினால் சறுக்கிவிடும்.

உறுதியாக, இறுதியாக ஒரு விஷயம் தெரியாத போது அதிலிருந்து விலகி நிற்பதே நல்லது.

மனித மனத்திற்கு எட்டாத பல மாய ஜோதிட விதிகளை இறைவன் மறைத்து வைத்திருக்கிறான்.

மனித மனத்திற்கு அவை எட்டினால் மனிதனும் இறைவன் ஆகிவிடுவான்.

நாளை என்ன நடக்கும் என்பதை சர்வ நிச்சயமாக இறைவன் மட்டுமே அறிவான். ஜோதிடன் எக்காலத்திலும் இறைவனாக முடியவே முடியாது.

Blog at WordPress.com.

%d