பல பேரின் வாழ்க்கை உயர வழிகாட்டும் ஜோதிடன் வறுமையில் உழல்வதேன்? உண்மை நிலை என்ன? வாருங்கள் பார்ப்போம்.
ஜோதிடம் ஆய கலைகள் 64 ல் 5 வதாக இடம் பெற்றுள்ளது. ரிக், யஜிர், சாமம், அதர்வணம் நான்கு வேதத்திலும் கண் போன்று ஜோதிடம் உள்ளது.
அந்த காலத்தில் மன்னனுக்கு அடுத்தபடியாக ஜோதிடருக்கே அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. மந்திரிக்கு கூட ஜோதிடருக்கு அடுத்த நிலைதான்.
ஜோதிடர் தெய்வக்ஞன் என்று அழைக்கப்பட்டான்.
இந்த உலகில் பிறந்த அனைவரும் நவகிரகத்தின் ஆளுகைக்கு கட்டுபட்டவர்களே. ஜோதிடர் உட்பட.
தலையெழுத்தை எழுதுவது பிரம்மாவாக இருந்தாலும் ஒரு சில விதிவிலக்கையும் இறைவன் கொடுத்துள்ளார்.
அந்த சூட்சமம் அனைத்தும் அறிந்தவர் ஜோதிடர் மட்டுமே.
விதியை மாற்றும் வலிமை நாம் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அந்த சூட்சுமம் நமக்கு புலப்படும். இல்லையென்றால் கண்ணிருந்தும் நமக்கு அது மறைக்கும்
அமாவாசை அன்று யுத்த பலி கொடுத்தால் போரில் ஜெயிக்கலாம். மகாபாரதத்தில் கிருஷ்ணன் கூறியது.இதுவே சூட்சுமம்.
கடன் ஏற்படுவது அவரவர் பூர்வ ஜென்ம வினைப்படி என்றாலும், கடன் விரைவாக தீர்வதற்கும் ஜோதிடத்தில் வழிவகை உள்ளது
இவ்வுலகில் பிறந்த யாராலும் வினைபயனை மாற்றமுடியாது.அதே நேரத்தில் தீவிர இறைவழிபாடு, தான தர்மம், செய்வதால் விதியை மாற்றக்கூடிய வழி நமக்கு கிடைக்கும்.
இதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொல்கிறது.ஒவ்வொரு வினைக்கும், ஓர் எதிர்வினை உண்டு.
நல்லது செய்தால் ஏதாவது ஒரு ரூபத்தில் நற்செயலாக அது வெளிப்படும். தீய செயல் செய்தால் நீ விதைத்த வினை உனை அறுக்க காத்திருக்கும்
கர்மாவில் நாம் செய்யும் செயல் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.
ஜோதிடர் யாருடைய கர்மவினையையும் மாற்ற முடியாது. ஆனால் மாற்றுவதற்குரிய வழிமுறையை சொல்லமுடியும். (பரிகாரம் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்)
அவர்தான் உண்மையான ஜோதிடர்.
தன்னிடம் படித்த மாணவன் கலெக்டர் ஆனால் ஆசிரியருக்கு பெருமையே. மாணவன் கர்மா வலுவாக உள்ளதால் அவன் கலெக்டர். அதற்காக ஆசிரியர் தன்னிடம் பயின்ற மாணவன் கலெக்டரா! என பொறாமை கொள்வதில்லை.
ஜோதிடரும் வினைபயனை கொண்டே பிறந்துள்ளார்.
அவருக்கும் எல்லோரையும் போல திசா, புத்திகள் உண்டு.நல்ல திசையில் பிரபலமாவதும், தீய திசையில் சறுக்கலும் உண்டு.
நித்திய பூஜையை தினசரி செய்வதும், மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதும், சாஸ்திரத்தில் கூறியவற்றை முறையாக கடைபிடிப்பதும் கர்மா கழிய உதவும்.
பல பேரின் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய புண்ணியம் அவரை சாரும்.
அதே நேரத்தில் ஜோதிடத்தில் பொய் கூறி, அவர்களை பயமுறுத்தி அதன் மூலம் பரிகாரம் என்று பணத்தை சம்பாதிக்க நினைப்பபவரின் தலைமுறையே நசிந்து நாசமாகும்.
பாழ் நரக குழியில் அவரும் விழுவர்.
உண்மையாக, நேர்மையாக ஜோதிடர் இருக்கும் பட்சத்தில் ஜோதிடரை நவகிரகம் ஒன்றும் செய்யும்.இது சத்தியம்.
ஜோதிடரை முறைப்படி சந்தித்து தக்க தட்சிணை கொடுத்து பலனை கேட்பதே முறை.
அவசர கோலத்தில் ஜாதகரும் பலன் கேட்க கூடாது. ஜோதிடரும் சொல்லக்கூடாது.
ஜோதிடரின் வினைபயன் மட்டுமே ஜோதிடரின் வறுமைக்கு காரணம்.
ஜோதிடம் பார்ப்பதால் எவ்விதத்திலும் வறுமை வராது. தவறாக பயன்படுத்தினாலொழிய.
இது உறுதி.
நேற்றைய பதிவில் கூட மோதிரம்,டாலர், ராசிக்கல், பெயர் மாற்றம் செய்தால் அறுபதாவது நாளில் ஆடி காரில் போகலாம் என சில போலி ஜோதிடர்கள் ஜோதிடத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காசாக்க பார்க்கின்றனர்.
பத்து ,பதினைந்து வருடங்களுக்கு முன்பு தினமும் காலையில் டி வியை திறந்தால் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை ராசிக்கல், பெயர் மாற்றம் என வரிசையாக நிகழ்ச்சிகள் சென்றுகொண்டிருக்கும்.
அதையும் சில குறிப்பிட்ட நகைக் கடைகளில் தான் வாங்க வேண்டுமென்ற ரெகமெண்டேஷன் வேறு.
இன்று, அதுபோல் பெரும்பாலும் விளம்பரமும் வருவதில்லை. அவ்வாறு போலியாக சொன்ன பல ஜோதிடர்கள் காணாமலும் போய்விட்டனர்.
போலிகள் விரைவில் காலியாகிவிடும்.
இவர்கள் மனசாட்சிக்கு தெரிந்திருக்கும் இதனால் பெரும் மாற்றம் ஏற்படாது என்று.
காணாமல் போன அனைவரும் தனக்குத்தானே ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு, பெயர் மாற்றி கொண்டு மறுபடியும் டிவியில் வர வேண்டியதுதானே.
நல்ல திசைகள் முடிந்தபின் யாராயிருந்தாலும் தூக்கி எறிந்து விட்டுப் போய்விடும்.
ஒருவரின் இயலாமையை, பணமாக மாற்ற எண்ணினால் அது, அவரின் தலைமுறையை அது நிச்சியம் பாதிக்கும்.
சமீபத்தில் ஜோதிடம் பார்க்க வந்த கோடீஸ்வர நபர் திருமண பரிகாரத்திற்கு மட்டும் 5லட்சம் செலவு செய்துள்ளார்.
சன்னியாச ஜாதகத்திற்கு எப்படி ஐயா திருமணம் நடக்கும்.
திருமணம் நடக்கும் எனசொல்லி அவரின் இயலாமையை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும்(கிட்டதட்ட 4முறை) 25,000 ரூபாய்க்கு யாகம் நடத்தியுள்ளார்.
இதுபோக இவர் செய்யாத பரிகாரமே இல்லை.
கர்மம் கழிய காசிக்கு போ என்பார்கள். உன்னுடைய கர்மம் கழிய கடவுளை மட்டுமே சரணடை. மற்ற யாரையும் அணுகினால் பணவிரையம் மட்டுமே ஏற்படும்.
எளிய பரிகாரம் எனப்படும் இறைவனை வழிபடுவதை மட்டுமே நான் பரிகாரமாக என்னுடைய வாடிக்கையாளருக்கு பரிந்துரைக்கிறேன். பணம் சார்ந்த பரிகாரத்தை நான் என்றைக்குமே பரிந்துரை செய்தது கிடையாது.இதை பெருமையாகவே சொல்வேன்.
நான் படித்தது மருத்துவதுறை சார்ந்தது என்றாலும், ஜோதிடர் என்பதிலேயே பெருமை கொள்கிறேன்.
ஓம் நமசிவாய