நான்காம் பாவம்

11,509

தாயார், மனை, மாடு, கொடுக்கல் வாங்கல், போக்குவரத்து, செய் தொழில், பர விஷயம் என்று சொல்லப்படும் கெட்ட நடத்தை, சுகம், வித்தை, உறவினர்கள், நண்பர்கள், வாகனம், கட்டிடங்கள், சந்தோசம் இவைகளை எல்லாம் நான்காம் இடத்தை கொண்டு அறியலாம்.

ஒரு ஜாதகத்தில் நான்கு கேந்திரங்கள் உண்டு. இந்த நான்கு கேந்திரங்களும் ஒரு பெரிய கட்டிடத்தை நான்கு பில்லர்கள் தாங்கி பிடிப்பதை போல, ஒருவர் ஜாதகத்திற்கு பலம் சேர்க்கிறது என்றால் அது மிகையல்ல ஒரு யோகமான ஜாதகத்தில் நான்கு கேந்திரங்களும் வலுப்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கேந்திரங்களில் இரண்டாம் கேந்திரம் இந்த நான்காம் இடமாகும். நாம் உலகத்திற்கு வர முழுமுதல் காரணமாக இருந்த, அன்னையை பற்றி தெரிந்து கொள்ள இந்த நான்காம் இடத்தை தான் நாம் காணவேண்டும். தாயின் பெருமையை பற்றி எவ்வளவு சொன்னாலும் தகும்.

“தாயிற் சிறந்த கோவிலுமில்லை”

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்க்கே முதலிடம். தெய்வமெல்லாம் தோற்று போய் விடும் தாயின் அன்புக்கு முன்னால் தாய் இல்லாமல் இந்த உலகத்தில் யாருமே இல்லை. வாய் இல்லா பிராணிகள் கூட அழைக்கும் ஒரு மந்திர சொல் அம்மா. அப்பேர்ப்பட்ட கண்ணால் காணும் வாழும் தெய்வத்தை பற்றி அறிந்து கொள்ள கேந்திரங்களில் இரண்டாம் கேந்திரமான இந்த நான்காம் வீட்டை வைத்திருக்கிறார்கள் நமது ஞானிகள். இதிலிருந்தே இந்த வீடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

நான்காம் இடமும், மாதுர் காரகன் சந்திரனையும், நான்காம் அதிபதியையும், கடக ராசியையும் கொண்டே நாம் தாயாரின் நிலையை பற்றி கணிக்க முடியும். பொதுவாக நான்காம் இடத்தின் பலம் மற்றும் பலவீனம் பற்றி தெரிந்து கொள்ள நான்காம் அதிபதி, மாதுர் காரகன் சந்திரன், வாகன, சுக, வீடு காரகனான சுக்கிரன், பூமிகாரகனான செவ்வாய், வித்தை காரகனான புதன் இவர்களை கொண்டு நான்காம் பாவத்தின் பலம் மற்றும் பலவீனத்தை அளவிட முடியும்.

தாயார்

ஒருவருக்கு நான்காம் இடமும், மாதுர் காரகன் சந்திரன், கடக ராசி, நான்காம் அதிபதி நல்ல முறையில் அமைய நல்ல தாயாரை அவர் அடைய முடியும். தாயின் அன்பை அவர் பெற முடியும். நான்காம் இடத்தில் நான்காம் அதிபதி ஆட்சி பெற்று, நான்குக்கு எட்டாமிடம் வலுத்தால் ஜாதகரின் தாயார் நீண்ட ஆயுளோடு இருப்பார்.

மனை(வீடு)

நான்காம் பாவகம் வீட்டையும் குறிக்கும். வீடுன்னு சொன்னாலே உடனே நமக்கு யார் நமக்கு ஞாபகத்திற்கு வரனும்?
சுக்கிரன். அடுத்து பூமிக்காரகனான செவ்வாய். நான்காம் இடத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகம் இருந்து, நான்காம் அதிபதியும் திரிகோணங்களில் அமைந்து, சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம் போன்ற யோகங்களும் ஜாதகத்தில் அமையப்பெற்று, அதாவது செவ்வாய் சுபத்தன்மை அடைய சுக்கிரனும் நல்ல முறையில் அமைய நல்ல வீடு அதுவும் அழகான வீடு கிடைத்து விடும். இந்த அமைப்போடு நான்கு + பத்தாமாதி பரிவர்த்தனை ஆக
அல்லது சேர்க்கை பெற வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட அமைப்பில் சுக்கிரன் வலுவாக அமைய வாகன சுகமும் ஜாதகருக்கு அமைந்து விடும். 2, 12 க்குடையவர்கள் சேர்க்கை பெற்று கேந்திரங்களில் அமையவும் பெரிய அரண்மனை போன்ற வீடு கிடைத்து விடும். நாலுகால் பொருளுக்கும் சுக்கிரன் தான் காரகத்துவம் வகிக்கிறார். லக்னாதிபதி நான்காம் இடம் சென்று அது ஆட்சி உச்சமாக அமைய ஜாதகன் சுகத்தை அனுபவிக்க மட்டுமே பிறந்தவன்.

நான்காம் அதிபதியும், பதினொன்றாம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள, இரண்டு, நான்காம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள, நான்காம் அதிபதியும், பாக்கியாதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்வது மிகச்சிறந்த அமைப்பு. இந்த பரிவர்த்தனையில் நீசம், பகை இருக்கக்கூடாது. லக்னாதிபதியும், நான்காம் அதிபதியும் பரிவர்த்தனை செய்து கொள்ள மிக்க நன்மை உண்டாகும்.

வித்தை

நான்காம் இடம் வித்தை ஸ்தானம் ஆகும். வித்தைனாலே புதனுக்கு தான் முதலிடம். நான்காம் இடமும், நான்காம் அதிபதியும், புதனும் வலுத்திருந்தால் அவர்கள் பட்டப்படிப்பு படிப்பது உறுதி. இரண்டாம் இடம் ஆரம்ப கல்வியையும், நான்காம் இடம் பட்டப்படிப்பையும் குறிக்கும்

“விளையும் சூரியனும், புதனும் விரும்பியே எட்டு, நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாவான்”

புதனும் சூரியனும் இணைந்து இருவரில் ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்று நான்கு, ஒன்று, எட்டில் அமையப்பெறும்போது அது நிபுண யோகத்தையும், கல்வி, செல்வம், வீடு, பதவி போன்ற பாக்கியங்களை தரும்.

“கதிரொடு புந்தி கூடி
களித்திட உதித்த மாந்தர்
நிதிமிக படைத்தோர்
மற்றும் நீதியில் மேலோர்
கல்வி மதிநலம் படைத்தோர்
எங்கும் மாபுகழ் பெற்றோர்”

இந்த புதாதித்ய யோகம் என்ற நிபுணயோகம், ஒன்று, நான்கு, எட்டில் அமையப்பெற்று அந்த சூரியன், புதன் இருவரில் ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்று இவர்கள் இருவரையும் குருபகவான் பார்வையிட, அல்லது பத்தாம் அதிபதி பார்க்க இந்த யோகத்தில் பிறந்த ஜாதகன் நிலத்தில் நல்ல பூபதி போல இருப்பான். அரசனைப்போல வாழ்வான். காலேஜ் எல்லாம் போய் பட்ட படிப்பு படிப்பான். நல்ல நேர்மையான வழியில் நல்ல சம்பாத்யம் செய்வான். இந்த உலகத்தில் பேரும் புகழையும் அடைவான்.

நான்காம் பாவத்தில் பத்துக்குடையவன் அதிபலம் பெற்று நிற்கும் போது புதையல் யோகம் கிடைக்கும். கால, தேச, சுருதி, யுக்தி வர்த்தமானம் படி காலத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டியிருப்பதால் தற்காலத்தில் இந்த புதையல் யோகமானது ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை போன்றவற்றால் லாபத்தையும் பணத்தையும் அடையலாம் என்று கூறலாம்.

கேந்திரங்களில் மிக முக்கியமான இந்த இரண்டாம் கேந்திரத்தில் சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் அவர்கள் சுபத்தன்மை பெறவேண்டும். முக்கியமாக இந்த ஸ்தானத்தில் நீசம், பகை, அஸ்தமனம், வக்கிரம் பெற்ற கிரகங்கள் இந்த நான்காம் பாவத்தில் அமரக்கூடாது. நிற்கவும் கூடாது. அதேபோல இந்த வீட்டதிபதியும், சுக்கிரன், மற்றும் செவ்வாய், புதன் போன்ற நான்காம் இடத்தின் காரக கிரகங்களும் பகையோ, நீசமோ, வக்கிரமோ, அஸ்தமனமோ, 6, 8, 12 அதிபதிகள் சேர்க்கையோ பார்வையோ பெறவே கூடாது. அப்படி அமைந்தால் நான்காம் இடத்தின் மேன்மைகள் குறையவே செய்யும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More