லாப ஸ்தானம்
பதினொன்றாம் பாவத்தை கொண்டு செய்தொழிலால் வரக்கூடிய லாபம், மூத்த சகோதர ஸ்தானம், இளைய மனைவி, கிணறு,கடன் நிவர்த்தி, மனோ துக்க நிவர்த்தி,ராஜாங்க அனுகூலம், ஆசைகள், அபிலாசைகள் நிறைவேறுமா? என்பதை தெரிவிக்கும் பாவம் பதினொன்றாம் பாவம். வஸ்திராபரணங்கள், சினிமா, நாடகதொழில் போன்றவற்றை பதினொன்றாம் இடம் கொண்டு அறிய முடியும்.
இது வெற்றிகளை குறிக்கும் உபஜெய ஸ்தானங்களில் ஒன்றாகும். உபஜெய ஸ்தானங்கள் என்பது 3, 6, 10, 11 ஸ்தானங்கள் ஆகும். மற்றவைகள் அபஜெய ஸ்தானங்கள் ஆகும். இந்த பதினொன்றாம் பாவத்தில் பாவர்கள், சுபர்கள் என எந்த கிரகம் இருந்தாலும் நன்மைகளை தரும். கோட்சாரங்களில் கூட பதினொன்றாம் பாவத்தில் எந்த கிரகம் வந்தாலும் அது நன்மையை தராமல் போவதில்லை.
உடனே சர லக்னங்களுக்கு பதினொன்றாம் பாவத்தில் கிரகங்கள் இருக்கலாமா? என்ற உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. சர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பதினொன்றாம் பாவகம் பாதகஸ்தானமாக வரும். பாதகாதிபதி பாதகத்தில் ஆட்சி பெற்றால் தான் பிரச்சினை. மற்ற கிரகங்கள் 11ல் இருக்கலாம்.
இரண்டாம் அதிபதியும், லாபாதிபதியும் இணைந்து நல்ல இடங்களில், கேந்திரம், திரிகோணங்களில் அமைய அல்லது இரண்டு பதினொன்றாம் அதிபதிகள் பரிவர்த்தனை யாக மஹா பாக்கிய யோகம் ஏற்படும். நல்ல தனபுழக்கம் ஏற்படும்.
ஒன்பது, பத்துக்குடையவர்கள் இருவரும்இரண்டு, பதினொன்றாம் இடங்களில் அமர்ந்து சந்திரன் பாக்கியத்தில் அமர்ந்து, பௌணர்மி யோகத்தில் பிறந்த ஜாதகன் பிறந்தது முதலே செல்வந்தனாக இருப்பான். இது இந்திர யோகம் என்றழைக்கப்படும்.
ஐந்தாம் அதிபதி + பதினொன்றாம் அதிபதி பரிவர்த்தனையாகி ஐந்தில் சந்திரன் அமர உலகப்புகழ் கிடைக்கும். தைரியசாலிகள். ஆனால் இவர்கள் பலமாக அமைய வேண்டும். இதற்கு நாகேந்திர யோகம் என்று பெயர்.
சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பதினொன்றாம் பாவத்தில் சுபத்தன்மை பெற்று அமர திருமணத்திற்கு பிறகு, மனைவி வந்த பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம், பொருளாதார விருத்தி ஏற்படும்.
இரண்டாம் அதிபதி பதினொன்றாம் பாவத்தில் சுபத்தன்மை பெற்று காணப்பட வட்டி வாங்கி சம்பாதிப்பார். அதாவது பைனான்ஸ் எனும் கொடுக்கல் வாங்கல் தொழிலில் லாபம் ஏற்படும். நான்காம் அதிபதி பதினொன்றாம் பாவத்தில் இருக்க வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
லாபாதிபதியும், பாக்கியாதிபதியும் ஆட்சி உச்சமாக நல்ல ஸ்தானங்களில் அமரப்பெறும்போது பூர்வ புண்ணிய பலத்தால் பேரும் புகழோடும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்.
சூரியனும் + குருவும் கூடி பதினொன்றாம் பாவத்தில் வலுத்து சுபத்தன்மை பெற அரசனுக்கு இணையாக, அரசனுக்கு என்னவெல்லாம் சௌரியங்கள் இருக்குமோ அத்தனையும் ஜாதகனுக்கும் கிடைக்கும்.
லாபஸ்தானத்தில் ஒரு உச்சனிருந்து, சுக்கிரனும் கூட அந்த வீட்டுக்கு உடையவன் 4, 7, 9, 10 ல் சுபத்தன்மை பெற 48 வயதுக்கு மேல அரசனாவான் அல்லது ஞானியாவான்.
பதினொன்றாம் பாவம் வெற்றிகளை குவிக்கும் பாவம் என்று சொன்னோம். இதுவே ருண, ரோக, கடன், சத்ரு நிவர்த்தி ஸ்தானமும் ஆகும். சுப பலன் பதினொன்றாம் பாவத்தில் ஓங்கி இருக்க ,பதினொன்றாம் இடத்தில் சுபக்கிரகம் இருந்து அது அதிக சுபத்தன்மை பெற அவருடைய தசாபுக்திகளில் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு குறையும். வழக்குகளில் வெற்றி தரும். கடன் தொல்லை தீரும். கடன் தீரும் அளவுக்கு வருமானம் வரும்.
முக்கியமாக இது இளைய மனைவி ஸ்தானம் ஆகும். ஏழாமிடம், ஏழாமாதிபதியும் வலுக்குறைந்து, பதினொன்றாம் இடம் , பதினொன்றாம் அதிபதி வலுக்க இளைய மனைவி எனப்படும் இருதார அமைப்பு ஏற்படும். பதினோன்றாம் இடம், பன்னிரண்டாம் இடத்தில் பாவிகள் உச்சமாக கண்டிப்பாக இருதாரம் ஏற்படும்.
பதினொன்றாம் இடம் நீர் ராசியாக இருந்து சந்திரன், சுக்கிரன் பதினொன்றாம் பாவத்தில் அமரப்பெறும்போது குரு மங்கள யோகம், சந்திரமங்கள யோகம் போன்ற யோகங்கள் ஜாதகத்தில் அமையப்பெற்று நல்ல நிலமும், அந்த நிலத்தில் நல்ல நீர்வசதியான கிணறு, போர்வெல் அமையும். யாருடைய நிலத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும் இவருக்கு வயலில் தண்ணீர் பிரச்சினை வராது.
லாபாதிபதியும், குடும்பாதிபதியும் 6, 8, 12ல் மறைந்து பகை, நீசம் பெற இவர்கள் வறுமையிலும், சோகத்திலும், மனக்கவலையோடு, நித்திரையின்றி, தோல்வியை மட்டுமே சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். வெற்றி என்பது இவர்கள் கனவில் மட்டுமே சாத்தியம்.
இது பதினொன்றாம் பாவத்தை பற்றிய சிறுதுளி மட்டுமே.