பேர் சொல்ல பிள்ளை பிறக்க வேண்டும். பேர் சொல்லும் பிள்ளையும் பிறக்க வேண்டும்.
பெற்ற பிள்ளைகளால் தலைநிமிர்ந்து நடப்போரும் உண்டு. தலைகுனிந்து நடக்கும் பெற்றோரும் உண்டு.
நமக்கு ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கிய காலம் போய், ஏன் இவன் பிறந்தான் பிறக்காமலே இருந்திருக்கலாமே என எண்ணுவோரும் உண்டு.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
பிறக்கும்போது பெருமை கொண்ட அன்னை, தன் மகனை அறிவாளி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பாள்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானத்தை குறிக்கும்.
புத்திர ஸ்தான அதிபதி 6, 8, 12 இந்த இடங்களில் மறைந்தால் பொதுவாக புத்திர தாமதம் ஏற்படும் .
விதி பயனாக 6, 8, 12ல் புத்திர ஸ்தானாதிபதி அமையப்பெற்றவர்கள் ஏதேனும் ஒரு வித முன் கர்ம வினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே.
6, 8, 12 -ஆம் இடம் அசுபஸ்தானம் என்று ஜோதிடத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக எந்த லக்னம் ஆனாலும் புத்திரஸ்தானாதிபதி 6 8 12-ம் இடங்களில் அமர்ந்து, குறிப்பிட்ட லக்னத்திற்கு எதிர்மறையான கிரகங்கள் அதனுடன் இணைந்து இருந்தாலோ, இயற்கை பாவிகளான சனி, ராகு போன்றவற்றுடன் இணைந்து குருவின் பார்வையில் இல்லாமல் இருந்தாலோ, அந்த திசா புக்திக் காலங்களில் பிள்ளைகளால் பிரச்சனை உண்டு.
உதாரணமாக ஐந்தாம் அதிபதி எட்டில் மறைந்தால் பிள்ளைகளால் கோர்ட், கேஸ் தலைகுனிவு போன்றவற்றால் அவமானப்பட வேண்டியிருக்கும். அதுபோல் ஆறாம் இடத்தில் மறைந்து இருந்து திசை நடத்தினால், தன் மகன் வாங்கிய கடனுக்காக, தான் அதை அடைக்க நேரிடும். 12ல் மறைந்தால் தன் குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். அது செலவா, அசுப செலவா என்பதை அவரவர் ஜாதகத்தை கொண்டு தீர்மானிக்க முடியும். சுப செலவு என்பது படிக்கவைப்பது, வேலை வாங்குவது, வேலையை உருவாக்கிக் கொடுப்பது போன்றவற்றை குறிக்கும்.
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு என்ற பாடல் வரிகள் இதற்கு முழுவதுமாக பொருந்தும்.
குருவும் கெடக்கூடாது.
அதுபோல் குழந்தைகள் ஜாதகத்தில் சூரியனும், சனியும் இணைந்து இருந்தாலோ, ஒன்பதாம் வீடு கெட்டிருந்தாலோ தந்தையால் யோகமில்லை.
பெயருக்கு முன் இன்சியல் கொடுக்க மட்டுமே தந்தை என்ற அமைப்பு இருக்கும்.
எவருடைய ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதி கெட்டு இயற்கை பாவிகளான சனி, ராகு போன்றவற்றுடன் இணைந்து, எட்டில் அமையப் பெற்றால் அவர்களுக்கு பிற்காலத்தில் முதியோர் இல்லம் அல்லது வீடுகளிலே அடிமை போன்று இருக்கும் நிலை உண்டு.
அதுபோல் புத்திரஸ்தானாதிபதி ஒன்பதாமிடம், சென்று அமர்ந்து குரு, வளர்பிறைச் சந்திரன் போன்ற சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் அவர்களே பெற்றோரும், உற்றோரும் போற்ற பலரும் பாராட்டும் படியான, தந்தைக்குப் பெருமை சேர்க்கும் மகன்களும் இவர்களே.
குல கௌரவத்தை காப்பவர்களும் இவர்களே.