மூன்றாம் பாவம்

மூன்றாமிடத்தைக் கொண்டு எதையெல்லாம் அறிய முடியும் ????

மூன்றாமிடத்தைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், தைரியமான பேச்சு, தைரியம், கீர்த்தி, சகாயம், காது, ஆள் அடிமை, அணிகலன்கள், போகம், சாப்பிடும் பாத்திரம், வெற்றி, சிறு தூர பயணங்கள், இவற்றையெல்லாம் மூன்றாமிடத்தை கொண்டு அறியலாம்.

இது உபஜெய ஸ்தானங்களில் ஒன்றாகும். உபஜெய ஸ்தானங்கள் 3, 6, 10, 11 இவைகள் உபஜெய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும்.

பொதுவாக இந்த 3, 6, 11 ம் பாவங்களில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேதுக்கள் அமரப்பெறும்போது நற்பலன்களை தரும் என்பது ஜோதிட விதி. பாவக்கிரகங்கள் மேலே குறிப்பிட்ட பாவங்களில் அமரும் போது அவைகள் சுபகிரகங்கள் திரிகோணங்களில் இருந்தால் என்ன பலன்களை தருமோ, அந்த பலன்களை இந்த உபஜெய ஸ்தானங்களில் அமரும் பாவகிரகங்கள் நல்ல சாரம், சுபகிரகங்கள் பார்வை பெறும் போது கண்டிப்பாக தருகிறது.

இந்த மூன்றாம் இடம் பாவத்பாவ விதிப்படி எட்டுக்கு எட்டாக வரும்.
இந்த மூன்றாம் பாவத்தில் பாவக்கிரகங்கள் பகை, நீசம் பெறாமல் நல்ல முறையில் அமர்ந்தால் நல்ல ஆயுள் பலம் கிடைத்து விடும்.

“அட்டமத்தோன் அதற்கு எட்டோன் திட்டமுடன் கேந்திர திரிகோணமேறில் ஆயுள் தீர்க்கம்” அட்டமாதிபதியும், அதற்கு எட்டான மூன்றாம் அதிபதியும் கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமைய நல்ல ஆயுள் தீர்க்கமாக அமையும் என்பது பொருள்.

லக்னாதிபதி எந்த வீட்டுக்கு செல்கிறாரோ அந்த வீட்டை வாழவைப்பார் என்ற விதிப்படி லக்னாதிபதி மூன்றுக்கு சென்றால் இளைய உடன்பிறப்புக்கு நன்மை அளிப்பதோடு தன்னுடைய சுய உழைப்பால் முன்னேற்றத்தை அடைவார். “தன் கையே தனக்குதவி” என்ற பழமொழிக்கு ஏற்ப “உழைப்பே உயர்வு தரும்” என்ற வாக்கிற்கு இணங்க தன் சுய முயற்சியால் கடுமையாக உழைத்து சுய முயற்சியால் முன்னேறுவார்.

இந்த மூன்றாம் பாவம் முக்கியமாக இளைய சகோதரனை பற்றி குறிப்பிடுவதால் இந்த பாவகம் நன்றாகவும், சகோதர காரகன் செவ்வாயும் சுபத்தன்மை பெற்று, நல்ல ஸ்தானங்களில் அமைய, மேசம், விருச்சிக ராசிகளில் பாவர்கள் அமராமல் சுபர்கள் அமர்ந்து அல்லது சுபர் பார்வையோடு இருக்க நல்ல சகோதரர்கள் அமைவார்கள். அவர்களின் உதவியும், அன்பும், பாசமும் ஜாதகருக்கு கிடைக்கும். சகோதரர்களும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

நல்ல சகோதரர்கள் அமைய மேசமும், விருச்சிகமும் கெடக்கூடாது என்பது விதி. மேச விருச்சிகத்தில் சனி, ராகு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நல்ல சகோதரர்கள் அமைவதில் சிக்கல்கள் உண்டாகும். நல்ல சகோதரர்கள் அமைய செவ்வாய் சுபத்தன்மை அடைய வேண்டும். செவ்வாய் குருவின் வீடான தனுசு, மீனத்தில் இருக்கலாம். ரிஷப துலாத்தில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் பார்வையை பெற்று இருக்கலாம். செவ்வாய் புதனின் பார்வையை, சேர்க்கையை பெறக்கூடாதுங்க. ஏன்னு கேட்டிங்கன்னா புதனும், செவ்வாயும் பகை கிரகங்கள்.

மூன்றாம் இடத்தில் நீசம், பகை பெற்ற கிரகம் இருக்க, மூன்றாம் இடத்து அதிபதியும் 6, 8, 12 ல் மறைய, மூன்றாம் இடத்து அதிபதி ராகுவுடன் 8 1/2 டிகிரிக்குள் இணைய, செவ்வாயின் வீடுகளான மேச விருச்சிகத்தில் பாவர்கள் அமரப்பெற அல்லது சனியின் பார்வையை அந்த ராசிகள் பெற, மூன்றில் வக்கிர சனி அமைய சகோதர இழப்பு, சகோதரர்கள் ஒற்றுமை குறைவு, சகோதர பகை, போன்ற கெட்ட பலன்கள் ஏற்படும்.வாழ்வில் தோல்வி ஏற்படும். அவருக்கு துணிவு இருக்காது. கோழை. செல்வநிலையும் சீராக இருக்காது.

மூன்றாம் இடத்தில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்து, அந்த வீட்டதிபதியும் கேந்திர திரிகோணங்களில் அமைய
செவ்வாயும் பலம் பெற்று சுபத்தன்மை அடைய இவர்களுக்கு காரிய வெற்றியும், சகாயங்களும், தைரியமும், நல்ல ஆளடிமையும் கிடைக்க பெற்று சகோதர ஒற்றுமையோடு, நல்ல ஆயுள் பலத்தோடு நல்ல வாழ்க்கையை ஜாதகர் வாழ வழி வகுக்கும்.

மூன்றாம் இடத்ததிபதி ஸ்திர ராசி, ஸ்திர நவாம்சம் அமையப்பெற்று, அவர் இருக்கும் வீட்டின் அதிபதியும் பலம்பெற
செவ்வாயும் ஆட்சி உச்சம் பெற்று சுபத்தன்மை பெற்று லக்னம், மற்றும் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ள காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை பணிகளில் பணியாற்ற முடியும்.

இந்த இடம் வீரத்தையும், ஆண்மையையும் பற்றி குறிப்பிடுவதால் இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் ஆண்மைக்குறைவு,
சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு இந்த ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பி இருப்பர்.
மனோபலமும் குறைவாகவே இருக்கும்.

இந்த இடம் பலம் பெற,தொலைதொடர்பு, போன், மற்றும் தபால் மூலம் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். இந்த இடத்ததிபதி, சனியும் , இந்த இடமும் சுபத்தன்மை பெற்று பத்தாமிடம் வலுத்தால் நிறைய ஆள் அடிமைகளை கொண்டு ஜாதகர் தொழில் மூலம் நன்கு சம்பாதிப்பார். ஆனால் இந்த இடம் கடுமையாக பாதிக்கப்பட்டால் ஜாதகரே அடிமைத்தொழில் செய்ய வேண்டி வரும்.

ஜாதகனுக்கு சகாய ஸ்தானாதிபதி பலம் பெற்று தசையை நடத்தும் போது சகோதர்களுக்கு நன்மையும், ஜாதகருக்கு சகோதரர்களால் நன்மையும் தைரியத்தோடு, ஆற்றலும், மன வலிமையும், அந்த தசையில் போன் மூலம் நல்ல தகவல்களும், வந்து சேரும்.
பயணங்கள் வெற்றி கரமாக அமையும். பலம் குறைந்தால் மேலே சொன்ன பலன்கள் அப்படியே உல்டாவாக நடக்கும்.

Blog at WordPress.com.

%d