யோகமுள்ள மனைவி யாருக்கு?

செவ்வாய் பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சுப கிரகமாக இருந்து உச்ச, ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து இயற்கை சுப கிரகங்களான குரு பகவானால் பார்க்கப்பட்டு நின்று பாவர் தொடர்பின்றி இருக்க, இதேபோல லக்கனம், இரண்டாம் இடம், ஏழாம் இடம் மற்றும் எட்டாம் இடம் ஆகியவற்றில் பாவ கிரக தொடர்பின்றி அந்த வீட்டு அதிபதிகளும் மற்றும் களத்திர காரகன் சுக்கிரன் பகவானும் பலம் பெற்றிருக்க யோகம் உள்ள மனைவி வாழ்க்கை துணையாக அமைவாள். திருமண நேரத்தில் உகந்த யோக திசையும் நடப்பில் இருக்க வேண்டும்.

யோகம் உள்ள மனைவி அமைவதற்கு சோதிட நூல்களில் உள்ள பாடல்கள் மற்றும் அதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

“பெரிய ஜோதிட சில்லறைக் கோவை’ என்னும் நூலில் உள்ள பாடல்

“பொன்னவன் புதனும் சந்திரன் புகரும் ஏழிடத்திருந்தால் கன்னிகை தனை மணப்போன் கல்வியும் பொருளும் வாய்த்து மன்னவன் போலிருப்பான் மங்கையை மணம்புரிந்து பொன் பொருள் பூஸ்தியோடு அன்பாய் பொருந்தி வாழச்செய்வாரே”

ஏழாம் இடத்தில் இயற்கை சுபரான குரு, புதன், சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் போன்ற கிரகங்கள் அமர்ந்துள்ள நல்ல பெண்ணை மணந்தவன் கல்வியும் செல்வமும் பெற்று மன்னவன் போல் வாழ்வான்.

“உதயத்தில் வெள்ளியும் ஒரு மூன்றில் கணிதனும் ஈருரெண்டில் அரசனும் பலமாகி நிற்கும் பாவையரை வாழ்க்கை துணையாக கொண்டவன் வாழ்வினில் வசந்தம் வாழ்வு தேடி வரும்”

பாடல் விளக்கம்

ஒருவர் ஜாதகத்தில் லக்கனத்தில் சுக்கிரனும், மூன்றாமிடத்தில் புதனும், நான்காம் இடத்தில் குரு பகவான் கொண்ட அமைப்பு பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் வாழ்வினில் வசந்தங்கள் தேடி வரும்.

“வளர்பிறை அம்புலி சுகமேறி உச்சம் பெற இவளை அரசன் அசையாமல் நோக்கும் கிரகநிலை உடைய பாவையை மணந்த மன்னவன் மகுடம் சூடி மகிழ்வான்”

விளக்கம்:-
வளர்பிறை சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெற்று நிற்க குரு பகவானின் பார்வையினை பெற்ற அமைப்பினை உடைய பெண்ணை மணந்தவன் மன்னவன் போல் வாழ்வான்.

“வளர்பிறை மதி லக்கனத்தில் உதயமாக பகலவன் லாபமேறி உச்சநிலை மோனத்தில் அமர
கர்மத்தில் கணியனை கொண்ட பாவையை மணந்த மணாளன் மன்னனுக்கு நிகரானவன் மாசில்லா மைந்தன்”

பாடல் விளக்கம்:- அரசனுக்கு நிகரான புகழ்பெற விரும்புவோர் லக்கனத்தில் பூரணச்சந்திரன், லாபத்தில் அதாவது பதினொன்றாமிடத்தில் சூரியன் உச்சமாக இருந்து பத்தாம் இடத்தில் புதன் அமர்ந்து உள்ள பெண்ணை மணப்பான்.

“உச்ச வீட்டில் மால் அமர்ந்து அது உதயத்தோன் வீடாகி லாபத்தில் அரசன் உச்சமாக கொண்டவளை
மனையாளாக மணந்தவன் மன்னனுக்கு என மாந்தர்க்கு உரையடி தோழி”

விளக்கம்:- புதன் உச்ச வீட்டில் அமர்ந்து அதுவே லக்னமாக அமைந்து லாபாதிபதியான பதினோராம் இடத்தில் குரு உச்சம் பெற்ற அமைப்பைக் கொண்ட பெண்ணை மணந்தவன் மன்னனுக்கு நிகரானவன்.

சாதக அலங்காரம் பாடல்

“எடுத்த பத்தாமதிபதி ஏழிறை கடுத்த மித்திரராகிப் பலனுடன் கொடுத்த உத்தமர் வீட்டினிற் சூழ்ந்திடப் படைத்த பாரியினால் வரும் பாக்கியம்”

பாடல் விளக்கம்:- பத்தாம் ராசி அதிபதியும், ஏழாம் ராசி அதிபதியும் மித்ருவாகி பலம் பெற்று , பலனைத் தரத்தக்க உத்தமர் வீடுகளில் இருக்க அந்த சாதகனுக்கு தன் மனைவியால் மேலான செல்வம் புகழ் கீர்த்தி உண்டாகும் என்று சாஸ்திர வல்லோர் கூறுவர் .

ஜாதக பாரிஜாதம் என்னும் ஆராய்ச்சி நூலில் உள்ள பாடல்

”புந்தியும் குருவும் ஏழில் பொருந்திடப் புனிதப் பெண்டிர்
வந்திடும்நல்ல பிள்ளை வாய்த்திடும்! ஏழில் சுங்கன்
உந்திடப் பாக்யப் பெண்டிர் உதவியாய் ! குளிகன் கேது
சொந்தமாய் ஏழு வாக்கில் தூரத்ரீ ரோடு வாழ்வான்!”

பாடல் விளக்கம்:- புதனும், குருவும் கூடி ஏழாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் உத்தமமான பெண்ணை மனைவியாக அடைவான்.

ஏழாம் ஸ்தானத்தில் சுக்கிரன் நின்றிருந்தால் நல்ல செல்வ வசதியுள்ள குடும்பத்தில் பெண் மனைவியாவாள். மனைவிவழி உதவியும் அவனுக்கு உண்டு.

குளிகனும், கேதுவும் கூடி ஏழாமிடத்தில் நின்றிருந்தால் இழிவான பெண்ணை இல்லாள் ஆக்கிக் கொள்வான்.

“கேந்திரங் களிலே ஏழுக் குடையவன் கெதியாய் வாழ வாய்ந்த நல் சுபரே பார்க்க வந்திடும் ராசி நாதன் சார்ந்திடும் சுபாங்கி சத்தில் தாழ்ந்திட சாத கற்கு ஆழ்ந்த நல் திரியே ஒன்றாய் அமைந்திடும் அறிந்து பாரே”

பாடல் விளக்கம்:- கேந்திர ஸ்தானங்களில் 7க்குடையவன் நன்னிலையில் நின்றிருக்க, அவனை சுபர்கள் பார்வையிட அவன் நின்ற ராசிநாதன் நவாம்சத்தில் சுபர்களின் வீட்டில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் உத்தமமான ஒரு மனைவியை பெற்றிருப்பான்.

சாதக அலங்காரம் என்னும் நூலில் இருந்து பாடல் எண் 700

“கொள்ளும் நற் களத்தி ராதிகா குருவுடன் கூடி யாவும் தெள்ளிய பார்வை முற்றும் திடமும் தலன்உற் யாவும் மெள்ளவே பிருகு தானும் வெகுதிட மாக் உன்னால் ஒன்றிய தான தர்மம் உள்ளவள் வருவாள் தானே!”

பாடல் விளக்கம்
7க்குடையவன் குருவுடன் இணைந்திருக்க அல்லது நல்ல ஸ்தானங்களில் குருவின் பார்வையைப் பெற்றிருக்க , சுக்கிரன் நன்கு பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகனின் மனைவி தானங்களும் இதர அறங்களும் செய்கின்ற உத்தியாக இருப்பாள்.

Blog at WordPress.com.

%d