லக்னம் என்ற முதல் பாவம்

லக்னம் என்பது சூரியனை மையமாக கொண்டு கணிக்க படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்டு ராசி கணிக்கப்படுகிறது.ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் பூமியின் எந்த பாவகம் சூரியனுக்கு உதய பாகமாக இருந்ததோ, எந்த பாவகம் கிழக்கே உதயமாகின்றதோ அந்த பாவகத்துக்கு லக்னம் என்று பெயர்.

லக்னம் என்பது ஜாதகனை குறிக்கிறது.
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானமாகும். அதேபோல லக்னாதிபதி, லக்னம் வலுவாக இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்பதான் நீங்கள் வலுவாக இருக்க முடியும்.

ஒரு ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்து, சூரியனும் வலுவாக இருக்கும் பட்சத்தில், ஜாதகனும் வலுவாக பணக்காரனாக இருப்பான். அது எவ்வளவுக்கு எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவோ இருப்பான். (இங்கே சூரியன ஏன் குறிப்பிட்டேன் என்றால் சூரியன் ஆத்ம காரகன் என்பதால் அவர் லக்னத்துக்கும் முழுபொறுப்பு எடுத்து கொள்கிறார்)

இங்கே உங்களுக்கு ஒரு சூட்சமத்தை சொல்லி விடுகிறேன். சூரியன் ஆத்ம காரகன். உயிர் காரகன்.சந்திரன் உடல் காரகன். எனவே தான் லக்னத்தில், ராசியில் சனி இருக்கும் போது உங்களுக்கு நன்மைகள் நடப்பதில்லை. ஏன் என்று சிந்தித்தோமானால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சனி ஜென்ம பகைவர் என்பதால் ராசியில், லக்னத்தில் இருக்கும் சனி நன்மைகளை செய்வதில்லை. லக்ன, ராசிகளுக்கு சூரிய, சந்திரர்கள் காரகர்கள்.

லக்னம் என்பது தானாக, சுயமாக இயங்கி பன்னிரண்டு பாவகத்திலும் ஊடுருவி, அத்துணை பாவகங்களையும் இயக்குகிறது. லக்னாதிபதி எந்த பாவகத்துக்கு செல்கிறாரோ, அல்லது எந்த பாவாதிபதியுடன் இணைகிறாரோ அந்த வீட்டின் பலனை, அந்த பாவாதிபதியின் பலனை வாழவைப்பார்.

லக்னாதிபதி லக்னத்தில் இருப்பது நல்ல வலிமையான அமைப்பு. ஜாதகர் நல்ல வலிமையுடன் இருப்பார். நல்ல ஆயுள் பலத்தோடு, நல்ல தோற்றத்தை அடைந்து, நல்ல செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, நல்ல உயர்குலத்தில் பிறப்பு போன்றவைகளை லக்னாதிபதி சுபகிரகமாக இருந்து, லக்னத்தில் ஆட்சி பெற, நல்ல பலன்களை ஜாதகன் அடைவான்.

லக்னாதிபதி குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் போன்ற சுபகிரகமாக இரண்டில் இருந்தால் ரொம்ப நல்லது. நல்ல தனவரவுகளையும் அதிர்ஷ்டங்களையும், கல்வி பொன், பொருள் சேர்க்கைகளையும் அடைவார்.
லக்னாதிபதி சுபக்கிரகமாக இரண்டில் இருந்து எட்டை பார்க்க நல்ல ஆயுள் பலம் கிடைக்கும். சரி சனி, செவ்வாய் போன்ற பாவகிரகங்களாக அமையும் பட்சத்தில்
சுபகிரகங்களின் தொடர்பை பெற்று சுபத்தன்மை அடையவேண்டும். சுபத்தன்மை அடையாமல் லக்னாதிபதி சனி, செவ்வாயாக இருக்கும் பட்சத்தில் மனைவியிடம் போகும் பணம் அவ்வளவு தான். குடும்ப ஒற்றுமையும் இருக்காது.
அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். குடும்பம் வறுமையில் இருக்கும்.

லக்னாதிபதி மூன்றில் அமைந்து சுபத்தன்மை பெற ஜாதகன் சுயமுயற்சியால் முன்னுக்கு வருவான். மூன்றாம் இடம், பத்தாமிடம், சனி சுபத்தன்மை அடைய நிறைய ஆளடிமை வைத்து சொந்த தொழில் புரிய முடியும். லக்னாதிபதி மூன்றில் இருந்து, மூன்றாம் அதிபதி அதிபலம் பெற ஜாதகரை காட்டிலும் இளைய சகோதரன் வலிமையோடு இருப்பான். ஜாதகன் இளைய சகோதரனின் கட்டுப்பாட்டில் இருப்பார்.

லக்னாதிபதி சுக ஸ்தானத்தை அடைந்தால் ஜாதகன் சுகத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவர் ஆவார். லக்னாதிபதியே சந்திரன், சுக்கிரனாக அமைந்து சுகஸ்தானத்திலேயே வீற்றிருக்க உலக சுகங்கள் எத்தனை உள்ளதோ அத்தனையையும் ஜாதகன் ஒன்று விடாமல் அனுபவிப்பார். பாவகிரகமாக இருந்தாலும், சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்தாலும், பாவர்களுடன் சேர்க்கை பெற்றாலும் இது பொருந்தாது.

லக்னாதிபதி ஐந்துக்கு செல்ல, பஞ்சமாதிபதி லக்னத்துக்கு வர அல்லது லக்னாதிபதியும் ஐந்தாம் அதிபதியும் இணைந்து லக்னத்தில் அமர ஜாதகன் போன ஜென்மத்தில் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த ஜென்மத்தில் உத்யோகம், அரசபதவி, பட்டம், பதவி, புகழை அடைந்து இந்திரனுக்கு ஒப்பாக ராஜமரியாதையுடன் வாழ்வான்.

லக்னாதிபதி ஆறாம் வீட்டுக்கு சென்று, அல்லது ஆறாம் அதிபதியுடன் கூடி நின்று, நோய் காரகன் ஆட்சி, உச்சம் பெற்று அதிபலமும் பெற, ஆறாம் அதிபதி தசை நடைபெறும் போது, மனக்கவலை, பணக்கஷ்டம்,உடல் கஷ்டம், வம்பு, வழக்குகள்,
வீடு தேடிவந்து நீதிமன்ற வழக்குகளால் அல்லல் பட நேரிடும்.

ஆறாமாதிபதியை விட லக்னாதிபதி, அதிக வலுப்பெற கடன், எதிரி, வம்பு, வழக்கு இவைகளை வெற்றி கொள்ள முடியும். இவைகளை சமாளிக்க முடியும்.

ஐந்தாம் அதிபதி + ஏழாம் அதிபதி இணைந்து லக்னம்,ராசி, லக்னாதிபதியுடன் சம்பந்தப்படும்போது காதல் திருமணம் ஏற்படும். லக்னாதிபதி ஏழில் இருந்து லக்னத்தை பார்க்க மனைவி நீங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டாள். ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்து ஏழைப்பார்க்க நீங்கள் மனைவியின் காலடியில் மனைவியின் கட்டளைக்கு காத்திருப்பீர்கள். சுபக்கிரகமாக இருக்கும் பட்சத்தில் மனைவிக்கு பயந்தமாதிரி நடிப்பீர்கள். பாவகிரகமாக சனி, செவ்வாய் போன்ற பாவகிரகங்களாக இருக்க, மனைவியிடம் உங்களுக்கு பயம் இருக்கும்.

லக்னாதிபதி எட்டுக்கு செல்ல நல்ல ஆயுள் பலத்தையும், அட்டமாதிபதி லக்னத்துக்கு செல்ல நல்ல ஆயுள் பலத்தோடு அடிக்கடி கண்டங்களையும் ஏற்படுத்துவார்.

லக்னாதிபதியும், பத்தாமாதிபதியும் இணைந்து கேந்திர திரிகோணங்களில், நல்ல இடங்களில் அமைய, லக்னாதிபதியும், பத்தாமாதிபதியும் பரிவர்த்தனை அடைய,
லக்னாதிபதி பத்துக்குசெல்ல அல்லது பத்தக்குடையவன் லக்னத்துக்கு வர இந்த ஜாதகன் நல்ல தொழில் காரன். தொழிலாவே மாறிடுவான். தொழில் தான் இவன். இவன்தான் தொழில் .இவனுக்கு தொழிலுக்கு அப்புறம் தான் மனைவிமற்றும் பிள்ளைகள் எல்லாம்.
இவன் கூட்டு தொழில் செய்தால் பத்துப்பைசாவுக்கும் கணக்கு கேட்பான். இது கூட்டாளியை, தொழில் பங்காளியை எரிச்சல் அடைய வைக்கும்.

லக்னாதிபதியும், லாபாதிபதியும் இணைந்து நல்ல இடங்களில் அமைய , லக்னாதிபதியும், லாபாதிபதியும் பரிவர்த்தனை செய்துகொள்ள ஜாதகன் லாபத்தை மட்டுமே அடைய பிறந்தவன்.

லக்னாதிபதியும், விரையாதிபதியும், ஞான மோட்ச காரகனும் இணைந்து சுபத்தன்மை பெற ஜாதகனுக்கு இப்பிறவியே கடைசிபிறவியாகும்.

எந்த ஒரு யோகத்தையும் அடைய, அந்த யோகம், லக்னம், லக்னாதிபதியுடன் சம்பந்தப்படும்போது அந்த யோகம் ஒன்றுக்கு பத்தாக பலனைதரும் என்று கூறி, எந்த யோகத்தையும் அடைய லக்னம், லக்னாதிபதி வலுவாக இருக்கவேண்டும் என்று கூறி

லக்னம் என்பது டிரான்ஸ்பார்மர் மாதிரி. அங்கிருந்து தான் எல்லா இடங்களுக்கும் மின்சாரத்தை எடுத்து செல்ல முடியும். அதுபோல லக்னம் என்பது சுயமாக இயங்கி அத்துணை பாவங்களிலும் ஊடுருவி, அத்துணை பாவங்களையும், லக்னமே இயக்குகிறது என்று கூறி, லக்னம் என்ற முதல் புள்ளி நன்றாக அமைய வேண்டும். இந்த லக்னம் என்றபிள்ளையார் சுழி யாருக்கு எல்லாம் நன்றாக உள்ளதோ அவர்களே வாழ்க்கையில் உயருகிறார்கள். அவர்களே பணக்காரர்கள். அவர்களே லட்சாதிபதிகள். அவர்களே கோடீஸ்வர்கள்.

எந்த ஒரு பாவகத்துக்கும் அந்த பாவகத்துக்கு 1, 5, 9 போன்ற இடங்களில் அந்த பாவகத்துக்கு திரிகோணாதிபதிகள் அமரும் போது அந்த பாவகம் வலுப்பெறும். எனவே லக்னத்திற்கு 1, 5, 9ல் இயற்கை சுபர்கள் அல்லது லக்ன சுபர்கள் அமர லக்னம் வலுப்பெறும். அதன்மூலம் ஜாதகரும் வலுவாக இருப்பார். அதன்படி லக்னத்திற்கு 6, 8, 12 ல் பாவிகள் அமர லக்னம் பாதிக்கப்பட்டு அதன்மூலம் ஜாதகரும் பாதிக்கப்படுவார். எனவே லக்னத்திற்கு 6, 8, 12 ல் பாவர்கள் அமரக்கூடாது.

குருச்சந்திர யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், பஞ்சமஹாபுருஷ யோகங்கள், கஜகேசரி யோகம் போன்ற யோகங்கள் லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும் போது மட்டுமே அந்த யோகங்களின் முழுப்பலனை ஜாதகன் அடைய முடியும் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

லக்னாதிபதியோடு, லக்னத்தோடு சுபர்களின் பார்வை, சுபர்களின் தொடர்பை பெறாத சூரியன், செவ்வாய் சம்பந்தப்படும்போது
முடி கொட்டுவது, சீக்கிரம் இளமையில் முடி நரைப்பது போன்ற பலன்களை ஏற்படுத்தி இவர்களை சதா கவலையில் ஆழ்த்தும்.
சூரியன், செவ்வாய் பாவத்தன்மை பெற்று லக்னத்தோடு, லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது விந்து துரித ஸ்கலிதம் ஆகிவிடும். அதுவும் ஜாதகரை கவலைகொள்ள வைத்துவிடும்.

சுபத்தன்மை பெற்ற ராகு, குரு, புதன் போன்றவர்கள் லக்னத்தோடு, லக்னாதிபதியோடு சம்பந்தப்பட நல்ல உயரமான தோற்றத்தோடு பார்க்க கம்பீரமாக இருப்பர்.

சனியும், செவ்வாயும் பாவத்தன்மை பெற்று லக்னம், லக்னாதிபதியோடு சம்பந்தப்படும்போது குள்ளமாக இருப்பார்கள். சராசரிக்கும் குறைவான உயரத்தில் இருப்பவர்கள் யாருனு பார்த்தா அவர்கள் ஜாதகத்தில் பாவர்களான சனியும், செவ்வாயும் பாவத்தன்மை பெற்று லக்னத்தோடு சம்பந்தப்பட்டு இருப்பார்கள்.

லக்னத்தோடு, லக்னாதிபதியோடு குரு, சனி, கேது மூன்றும் சுபத்தன்மையோடு சம்பந்தப்படும் போது அவர் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்து, ஆன்மிகத்தில் பேரும் புகழையும் அடைந்து பலருக்கும் குருவாக இருப்பார்.இவரை பலர் தங்களது ஞானகுருவாக ஏற்றுக்கொள்வார். இவர் உலகமெங்கும் இறைவனின் பெருமையை எடுத்து கூறி உள்நாடு, வெளிநாடுகளிலும் உலகப்புகழ் பெறுவார்.

லக்னாதிபதி நின்ற வீட்டுக்கு உடையவன் ஆட்சி உச்சமாக, லக்ன கேந்திரங்களில் அமைய ஜாதகன் பர்வத யோகத்தை அடைந்து பஞ்சாயத்து அளவில் தலைவர், கவுன்சிலர், சேர்மன், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை அடைவார்.

லக்னத்திற்கு 6, 7, 8 ல் குரு, புதன், சுக்கிரன் போன்ற நைசிர்க்கிக சுபர்கள் அமைய லக்ன அதியோகம் என்ற அதியோகம் அமைந்து ஜாதகன் மந்திரி, சேனாதிபதி,கலெக்டர் போன்ற மாவட்ட அளவில் பதவிகளை பெறுவான் என்றும், நல்ல குணங்களையும், நீண்ட ஆயுளையும் பெற்று எதிரிகளை வென்று, நல்ல சுகபோகங்களை, அநேக பாக்கியங்களையும் அடைவான்

Blog at WordPress.com.

%d