ராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை?
ஜோதிட துறையில், ஒரு சில விஷயங்களில், ஒரு சில சர்ச்சையான விவாதங்கள் காலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்று திருக்கணித பஞ்சாங்கம் சரியானதா? வாக்கிய பஞ்சாங்கம் சரியானதா?
அதற்கு சற்றும் குறையாமல் மற்றொன்று சர்ச்சையான விஷயம் என்னவென்றால் ராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது, நீசவீடு எது என்பது.
ஒரு சிலர் ராகு விருச்சிகத்தில் உச்சம் என்கின்றனர்.
மற்றொரு சிலர் ராகு ரிஷபத்தில் உச்சம் என்கின்றனர் .
இதில் எதை நம்புவது என்று குழப்பமான சூழ்நிலையில் பலரும் உள்ளனர்.
பொதுவாக ராகு பிரம்மாண்டத்தின் உச்சம்.
இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பார்க்க வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை, நான் ஆராய்ச்சி செய்த ஜோதிட ஆய்வின்படி ரிஷபத்தில் ராகு உச்சம்.
ஏனென்றால்
ராகு புற வாழ்க்கையை நோக்கிச் செல்லும்.
நல்லதோ ,கெட்டதோ அதை மிகைப்படுத்திக் செய்யும்.
அழகு இருக்கும் இடத்தில், அறிவுக்கு வேலை இல்லை. ஆபத்தும் இருக்கும்.
ஏற்கனவே இராகு பிரம்மாண்டம் என்று சொல்லியாகிவிட்டது அதுவும் சுக்கிரனுடைய வீட்டில் ராகு அமரும்போது அதன் காரகங்களை தூக்கி கொடுக்கிறது.
சுப தொடர்பு ராகுக்கு இருந்தால் ஒருநாள் இரவில் கோடீஸ்வரர்கள் என்பது போல் உலக வாழ்க்கையை மாற்றி விடுகிறது.
பணம் வந்தால் மனிதனுக்கு எல்லாமே எளிதில் கிடைத்து விடுமே.
பணத்தைக் கொண்டு புற உலக விஷயங்களை, அதுவும் சுக்கிரனுடைய வீட்டில் ராகு பலமாக இருந்தால் அதன் காரகத்துவத்தை நோக்கியே மனம் செல்லும்.
நடைமுறையிலும் பல ஜாதகங்களை ஒப்பிட்டு இந்த பலன் சொல்லப்படுகிறது.
ராகு, சனியின் பிரதிபலிப்பு.
ரிஷப ராசிக்கு முழு தர்மகர்மாதிபதி மற்றும் யோகாதிபதி் சனி மட்டுமே. முழுமையான யோகத்தைச் செய்யும் கிரகமும் சனி மட்டுமே. யோகம் என்பது புற உலக யோகம் அனைத்தும்
ஆகையால் சனியின் பிரதிபலிப்பாக உள்ள ராகு, ரிஷபத்தில் உச்சம் ஆவதில் எந்த ஆச்சர்யம் இல்லை.
ரிஷபத்தில் ராகு இருந்து தசை நடத்தினால், சுக்கிரன், ராகு சம்பந்தப்பட்ட காரகத்துவங்கள் தூக்கலாக இருக்கும்
நடைமுறையிலும் அது மிகச்சிறப்பாக பொருந்தி வருகிறது.
அதுபோல்
கேது செவ்வாயின் பிரதிபலிப்பு.
கால புருஷனுக்கு எட்டாம் வீடு விருச்சிக ராசி. பொதுவாக எட்டாம் இடம் என்பது மர்ம மற்றும் மறைபொருள் ரகசியங்களை குறிக்கக்கூடிய இடம்.
ரகசியம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியாமல் தெரிந்தவற்றை பொத்தி, பொத்தி வைப்பது.
ராகு கிழக்கு நோக்கி இழுத்தால், கேது மேற்கு நோக்கி இழுக்கும்.
ராகு கேதுக்கள் ஒரே உடலிலிருந்து பிரிந்து இரு உயிர்கள் என்றாலும் இலக்கு என்பது வெவ்வேறாகவே உள்ளது.
ராகு நாம் வாழும் இந்த புறவுலகில் ஆண்டு, அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படும்.
கேது யாருக்கும் இது நிலையான உலகம் அல்ல. நித்தமும் இன்பமாக இருக்க வேண்டும் என்று இவ்வுலகிற்கு பின்னாலுள்ள அக உலகை நோக்கி சிந்திக்கும்.
எட்டாம் இடம் என்பது மறைபொருளை நோக்கி தீவிரமாக ஆராய்ச்சி செய்து அதனை நோக்கிப் தன் பயணத்தைத் தொடருமிடமாகும்.
இப்பொழுது நாம் வாழும் வாழ்க்கை இன்பமான வாழ்க்கை அல்ல. இவ்வுலக வாழ்க்கைக்கு பின்பு உள்ள வாழ்க்கையே இன்பமயமானது என்று மறைபொருளாக உங்கள் காதில் ஓதிக்கொண்டே இருக்கும்.
அதன் மர்மம் மற்றும் ரகசியத்தை நீங்கள் அறிந்தால் அதை நோக்கியே உங்கள் பயணம் தொடரும். மற்ற எந்த விஷயத்திலும் நாட்டம் இருக்காது.
அதுபோல் விருச்சிகத்தில் கேது சுபத்துவம் அடைந்து இருந்தால் நிச்சயமாக ஆன்மீக எண்ணங்களை நோக்கியே அவரது மனம் செல்லும்.
உண்மையான இன்பம் எதுவென்று உணரவைக்கும்.
இதுவும் நான் பல ஜாதகங்களில் ஒப்பிட்டே இந்த பலன் சொல்கிறேன்.
மேற்சொன்னவை என்னுடைய தனிப்பட்ட கருத்து.
இதை ஒப்பிட்டுப் பார்த்த பின்பு உங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
ஓம் நமசிவாய
Comments are closed.