ராசி நாதன் சுக்கிரன் ராசிக்கு 10ல் அமர்ந்திருக்க தொடங்கும் இந்தாண்டு குரு பகவானும் சாதகமான நிலையில் இருப்பதால் நன்மையான பலன்கள் அதிகம் பெறுவீர்கள்.
சனி 7ல் இருந்து ராசியை பார்ப்பது மற்றும் இந்தாண்டு துவங்கும் அஷ்டம சனி காலம் (8ம் இடம் ) காரிய தடை, தாமதம் போன்றவற்றை தந்தாலும் குருவின் அனுகூலமான பார்வை ஜென்ம ராசி, வெற்றியை குறிக்கும் 11ம் இடம், பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் இடங்களில் படுவதால் சூரியனை கண்ட பனிபோல் தீய பலன்கள் குறைந்து மேன்மையான பலன்களை வருடத்தின் முற்பகுதியில் பெறுவீர்கள்.
பலருக்கு தொழில், வேலையில் புதிய இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபார தொடர்பான பயணங்கள் அதிகம் ஏற்படும், வெளிநாடு வேலை முயற்சி உடையவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
தேவைக்கேற்ற தன வரவு சிறப்பாக இருக்கும், புதிய கடன்கள் எளிதாக கிடைக்கும். மூத்த சகோதரர்கள் மற்றும் அன்னிய நபர்களால் அனுகூலம் உண்டு. தொழில், வியாபார தொடர்பான பயணங்களால் மேன்மை ஏற்படும். சிலருக்கு பூர்விக ( தந்தை ) வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சுமுகமாக முடிந்து சொத்துக்கள் கிடைக்கும்.
நீண்ட நாள் செல்ல நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கும், குலதெய்வ, இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்து வருவீர்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நலம். தொழில், வியாபாரத்தில், புதிய முதலீடுகளில் கூட்டு தொழிலில் , புதிய நண்பர்கள், வாடிக்கையாளர்கள், தொழில் பங்குதார்கள் இவர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
வெளிநாடு தொடர்பு வர்த்தகம், பங்கு சந்தை முதலீடு, தொழில் விரிவாக்கம், புதிய வாகனம், வீடு , நிலம் வாங்குவது பணம் கொடுக்கல், வாங்கல், ஒப்பந்த பத்திரங்கள் போன்றவற்றில் கையெழுத்திடும் பொழுது ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து செய்வது நலம்.
அவசரப்பட்டு பிறருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்த்தல். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் எண்ணங்களில், செயல்களில் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய நேரமிது. செயலில் வேகத்தை குறைத்து விவேகத்தை கடை பிடித்தால் எதிர்பாரா நஷ்டம், இழப்புகளை தவிர்க்கலாம். காரியங்களில் தாமத வெற்றிகள் கிடைக்கும்.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், முதியோர், உடன் ஊனமுற்றோர்களுக்கு உணவு, உடை போன்ற இயன்ற உதவிகளை செயவது சிறந்த பலன்களை தரும்.