குருப்பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2018 – 2019 | Guru Peyarchi Mahara Rasi 2018
குருப்பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2018 (Guru Peyarchi 2018 – Mahara Rasi)
மகர ராசி
மகரம் சர ராசி.லக்னமும் ராசியும் சரமாக இருக்கும் பட்சத்தில் ஜாதகனுக்கு வெளிமாநில,வெளிநாட்டு வாய்ப்புகள் மிக அதிகம். மகரம் பூமி ராசி என்பதால் இந்த ராசிக்காரர்கள் பூமி பொறுமையை குறிக்கும் என்பதால் இவர்கள் பொறுமையுள்ளவர்கள்.அதாவது தன்னை காயப்படுத்துவர்களையும்,பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருள்களை கொண்டு பூமிக்கு தொல்லை கொடுப்பவர்களையும் கூட பூமியானது பொறுத்து கொண்டு, அவர்களை தாங்கிகொண்டும் உள்ளது. “அகல்வாரை தாங்கும் நிலம்போல” பொறுமை உள்ளவர்கள் மகர,லக்ன, ராசிக்காரர்கள்.
மகரம் வீட்டதிபதி சனீபகவான்.சனி உழைப்பாளிகளை குறிக்கும். இவர்கள் கடும் உழைப்பாளிகள். இவர்கள் பீனிக்ஸ் பறவையை போல எவ்வளவு பெரிய வீழ்ச்சி வந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து விடுவார்கள்.
மகரம் ஆழ்கடலை குறிக்கும். எனவே இவர்கள் மனதில் இருப்பதை மனைவி கூட கண்டுபிடிக்க முடியாது. இவர்களின் ரகசியங்களை மனைவி கூட அறிந்து கொள்ள முடியாது. இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் கூறலாம். ரகசியத்தை கட்டி காப்பாற்றுவார்கள்.
இந்த ராசியில் குருபகவான் நீசமாவதால் அடிக்கடி அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்டு கொண்டே இருப்பார்கள். மகர கும்பத்துக்கு இரண்டுக்குமே ராசியாதிபதி சனிதான்.ஆனால் இவர் மகரத்துக்கு செய்யற அளவுக்கு கும்பத்துக்கு செய்ய மாட்டார். கும்பத்திற்கு அவர் விரையாதிபதியும் ஆவார்.
இப்ப குருப்பெயர்ச்சி மகர ராசிக்கு எப்படி இருக்கும். குருபகவான் தன்னுடைய பகை வீட்டில் இருந்து தன்னுடைய நண்பரான செவ்வாயின் வீட்டுக்கு வரக்கூடிய புரட்டாசி 25ந்தேதி வியாழக்கிழமை சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆக இருக்கின்றார்.
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் குருபகவான் இருந்தார். குருபகவான் பத்தில்
“ஈசனொரு பத்திலே தலை ஓட்டினிலே இரந்து உண்டதும்” என்று வரும்.அதாவது குரு பத்தில் வரும்போது பரமேஸ்வரனே பிச்சை எடுத்தார் என்று நமக்கு மறக்காமல் இருப்பதற்காக முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.அப்ப பத்தில இருக்கறப்ப பதவி போயிருக்கும்.. தொழில் இல்லைனா கையில காசு இருக்காது. கையில காசு இல்லாம சிரமப்பட்டிருப்பீர்கள்.
ஒரு நண்பருக்கு ஜாதகபலன் சொல்லும் போது அட்டமாதிபதி திசை போய்க்கொண்டு இருந்தது.”கண்டோர் ஏசிடவும் கடைதனில் கையேந்திக்கொரு காசுக்கு காத்திருப்பன்.”அதாவது கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் என்று சொன்னேன்.அவர் சொன்னார் ஐயா எனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்குது. இந்த அட்டமாதிபதி திசையில் அம்மா உணவகத்தில் இட்லி வாங்க ஐந்து ரூபாய் இல்லாமல் அங்கு வேலைபார்க்கும் அக்காவிடம் கடன் சொல்லிவிட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன் என்றார்.
குருபகவான் பத்தில் இருக்கும் போது வேலை போகும். அல்லது வேலையில் பிடிக்காத ஊருக்கு இடமாற்றம் தரும்.சிலரை தண்ணிஇல்லாத காட்டுக்கு மாத்தியிருப்பார்கள்.இதெல்லாம் கடந்த ஒருவருட காலங்களாக உங்களுக்கு நடந்து இருக்கும்.
தற்போது மகர ராசிக்கு பதினொன்றாம் பாவத்திற்கு குரு வர இருக்கிறார். பதினொன்றாம் பாவகம் குருபகவானுக்கு மிக உகந்த இடமாகும்.
“மன்னவன் பதினொன்றில்
ஒரு மன்னர் சேவை
வாகனங்கள் உள்ளோன்
அன்று பொன் பொருள் சேரும் தாயே”
குருபகவான் பன்னிரண்டு ராசிகளில் 2,5,7,9,11 இந்த இடங்களில் வரும் போது தான் நன்மைகளை தருவார். தனகாரகன் இன்னொரு பணபர ஸ்தானமான பதினொன்றாம் பாவத்தில் இருப்பது தன மேன்மைகளை தரும் நல்ல அமைப்பாகும்.
குருபகவான் பதினொன்றாம் பாவத்தில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் தன்வீட்டை தானே பார்த்து அந்த வீட்டை வலுப்படுத்துவார். அதாவது தைரியத்தோடு காரிய வெற்றிகளை தருவார். போற காரியத்தில வெற்றி கிடைக்கும். மூன்றாம் இடம் உபஜெய ஸ்தானம் என்பதை மறக்க கூடாது.
அடுத்து அவர் தன்ஏழாம் பார்வையால் ஐந்தாமிடத்தை பார்த்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியத்தை அருளுவார்.குரு புத்திர காரகன் இல்லையா?? மற்ற ஐந்தாமிடத்து காரகத்துவங்களான புண்ணிய நதி நீராடுவது, குலதெய்வ வழிபாடு, குலதெய்வத்திற்கு கிடாவெட்டி பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் முடியெடுப்பது,காது குத்துவது,உங்கள் வீட்டில் வளைகாப்பு சீர் செய்வது ,மகான்களை தரிசினம் செய்வது,குரு ஆசிர்வாதம் கிடைக்க பெறல் போன்ற நல்ல பலன்களை குருபகவான் தருவார்.குரு அதிநட்பு பெற்று ஐந்தாமிடத்தை பார்ப்பது மிகச்சிறப்பாகும்,குரு தான் இருக்கும் வீட்டை காட்டிலும் தான் பார்த்த வீட்டின் பலனைத்தான் அதிகமாக தருவார். குரு பார்க்க கோடிகுற்றம் நீங்கும்.
குருபகவான் ஒருசேர ஐந்தாம் வீட்டையும் ,ஏழாம் வீட்டையும் பார்ப்பதால் ஒருசிலருக்கு இந்த வருடத்திலே திருமணம் நடந்து இந்த வருடத்திலே அழகான ஆண்குழந்தை கிடைத்துவிடும். ஒரே வருடத்துக்குள் குழந்தை. ஏழாம் வீட்டையும் ,ஐந்தாம் வீட்டையும் குரு பார்ப்பதால் காதலால் கசிந்து உருகுவீர்கள். உங்கள் காதல் மனைவியை இந்த வருடத்தில் கண்டு கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் நன்றாக இருக்கும். தாம்பத்ய சுகம் கூடும்.கூட்டு தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபமுண்டு. தொழில் பார்ட்னராலும், லைஃ ப் பார்ட்னராலும் நன்மையுண்டு.
என்னங்க ஐயா எல்லாமே நல்லாதவே சொல்றீங்களே அப்ப ஏழரைச்சனியால பாதிப்பே இல்லையா?? இல்லைனுதான் சொல்லுவேன்.ஏன்??
ஏன்னா உங்கள் ராசியாதிபதி சனி.உங்கள் ராசியாதிபதி உங்களுக்கு எப்படி கெடுதல் செய்வார்??ஏழரைச்சனியானது மேச,கடக,சிம்ம, விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டும் தான் மிக கடுமையான ,கொடுமையான பலன்களை வாரி வழங்குவார்.சூரியன், சந்திரன்,செவ்வாய் இவர்களை தன் ஜென்ம விரோதிகளாகவே பார்ப்பார்.அந்த ராசிக்காரர்களையும்
தன் எதிரி போலவே பார்த்து கொஞ்சம் கூட ஈவுஇரக்கம் பார்க்காமல் அடித்து, துவைத்து, காயப்போட்டு விடுவார். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கும் மத்திமமான கெடுபலன்களை கண்டிப்பாக செய்வார்.
இவருக்கு பக்கவாத்தியத்திற்கு ராகுபகவானும் கூட சேர்ந்துவிட்டால் மரண அடிதான். எந்திரிக்கவே முடியாது. கூட ஏழரைச்சனியில் 6,8,12 அதிபதிகள் தசைவேறு நடந்து விட்டால்,அல்லது சனிதிசையே நடந்து விட்டால் சனி பகவானுக்கு சும்மா “திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி”சாப்பிட்ட மாதிரி தான். எதற்கு கெடுதல்களை செய்யத்தான்!!!
சரி மேட்டருக்கு வருவோம். சனி உங்களுக்கு ராசியாதிபதியாக வருவதால் உங்களுக்கு பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது. ஒரு கெடுபலன்களை தரக்கூடிய கிரகம் கெட்டது செய்யலைனாலே அது நமக்கு நன்மைதானே!!! அம்மா சொல்வார்கள் டேய் உபகாரம் பண்ணலைனாலும் பரவாயில்லைடா !! உபத்திரத்தை கொடுக்காதடா
சனி உங்களுக்கு மற்ற ராசிக்காரர்களை போல் அல்லாமல் உங்களுக்கு தீமைகளை குறைத்து கொள்வார்.மற்ற ராசிக்காரர்களுக்கு தண்டச்செலவுகளை கொடுத்தால் உங்களுக்கு சுபவிரையங்களாக தருவார். அதென்ன தண்டச்செலவு??அதென்ன சுபச்செலவு???
ஒரு தொழிலாளி இருபது வருடங்களாக தன் பெண் பிள்ளையின் திருமணத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பதை போல ஒரு இருபது லட்சங்கள் சேர்த்து வைத்துள்ளார். அவர் குழந்தையின் திருமணத்திற்கு மொத்த பணத்தையும் செலவு செய்து விடுகிறார்.அது அந்த செலவு அவருக்கு வருத்தத்தை தருமா??சந்தோசத்தை தருமா??
ஒருவர் மொத்த savings பணத்தையும் எடுத்து வீடு கட்டி செலவழித்து விடுகிறார் அது அவருக்கு வருத்தத்தை தருமா???இது போன்ற செலவுகள் சுபச்செலவுகள்.
ஒருவர் வைத்தியத்திற்கு ஒரு பத்து இலட்சம் செலவு செய்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அது அவருக்கு சந்தோசத்தை தருமா?
ஒருவர் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு போய் ஒரு ஐந்து இலட்சத்தை இழந்த விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அது அவருக்கு சந்தோசத்தை தருமா??
உங்கள் ராசிக்கு சனி சுபச்செலவுகளாக தருவார். நீங்கள் வீடு கட்டலாம். கல்யாணம் பண்ணலாம். இடம் வாங்கலாம். தோட்டம் வாங்கலாம். காடு வாங்கலாம். ஒரு வக்கீலா பார்த்து ஒரு ஐந்நூறு ரூபாய் பீஸ்கட்டி அதில வில்லங்கம் எதுனா இருக்குதானு பாத்துக்குங்க. ஒரு ஐநூறு ரூபாய்க்கு கஞ்சத்தனம் பண்ணி ஐந்து லட்ச ரூபாய்களை இழக்காதீர்கள்.
அதிக வட்டி வருதுனு சிட்பண்ட்ஸ்ல பணத்தை போடாம பேங்க்ல பணத்தை போடுங்கள். பேராசை பெரு நஷ்டம்.
இந்த சமயத்தில் புதியதாக தொழில் தொடங்காமல் இருக்கறதை சிறப்பாக செய்யுங்கள். அகல உழுகாமல் ஆழ உழுகனும்.இந்த ஏழரைச்சனியில் யாரையும் நம்ப வேண்டாம்.
இந்த ஏழரைச்சனியில் பலருக்கு வெளிநாடு,வெளி மாநிலம் வெளியூர் போய் வேலை பார்க்க வேண்டிவரும்.
சனி பன்னிரண்டாம் பாவத்தில் குரு வீட்டில் இருக்கிறார்.குருபகவான் நீர் ராசியில் இருந்து இன்னொரு நீர்ராசியான மீன ராசியை பார்த்து விடுகிறார்.
என்னய்யா நீங்கள் சொல்றமாதிரி இல்லைங்க !!நாங்க ரொம்ப கஷ்டபட்றோம்ங்க !!! என்று சிலர் முணுமுணுப்பது என்காதில் கேட்கிறது. ஆமாங்க…கடந்த ஒருவருடமாக உங்களுக்கு டைம் சரியில்லைங்க. கடந்த செவ்வாய் பெயர்ச்சியிலிருந்து பல மகரராசிக்காரர்கள்
என்னிடம் ஆலோசனை கேட்ட வண்ணம் இருந்தனர். பலர் கடுமையான மனக்குழப்பத்தில் வந்தனர். பலர் நோய் தொந்தரவுகளோடு வந்தனர். காரணம் ராசியில் உள்ள ராகு,கேதுக்களால்.மற்றும் ராசியில் உள்ள அழுக்குடை கிரகமான ,பாவக்கிரகமான செவ்வாய்,ராகு,கேதுக்களால் தானுங்க.மேலும் ஆடிமாதம் சூரியன் வேறு ஏழாம் இடத்தில் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்… போதாக்குறைக்கு உங்கள் ராசியில் தான் கிரகணமே நடந்தது.
மகர ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி
நல்லது பண்ணும்ங்கறேன்.உங்கள் ராசியை விட்டு செவ்வாய் வெளியே போய்ட்டா போதுங்கறேன். உங்கள் ராசியை விட்டு கேது வெளியே போய்ட்டா போதுங்கறேன். குருப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம். ஏழரைச்சனியால் வரக்கூடிய தொல்லைகளை குருபகவான் விலக்குவார். திருக்கணிதப்படி 6.3.2019 அன்று உங்கள் ராசியை விட்டு கேது பன்னிரண்டிலும்,ராகு ஆறுக்கும் சென்று இன்னும் நல்ல நல்ல பலன்களை வாரி வழங்க இருக்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ,படிப்படியாக நல்ல காலம் பிறக்க போகுது. சனி பன்னிரண்டில் இருந்து இரண்டாம் பாவகத்தை பார்ப்பதால் வாயில கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாக வரும். அதுனால நீங்கள் யார் என்ன பேசுனாலும் உங்களுக்கு காது கேட்காதுனு நினைச்சுக்கங்க.இந்த ஏழரை சனி உங்களை ஒன்றும் பண்ணாது.
உங்கள் ராசிநாதன் குருவின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடான இரண்டை சுபத்தன்மை பெற்று பார்ப்பதாலும்,குருபகவான் பதினொன்றாம் பாவத்திற்கு வர இருப்பதாலும் ,ராகு கேதுக்கள் 6,12 ல் மறைந்து நல்ல பலன்களை கொடுக்க இருப்பதாலும் உங்களுக்கு இனிமேல் வரக்கூடிய காலம் நல்ல காலம் தான். நல்ல காலம் மட்டும் தான் என்று கூறி
அடுத்து கும்ப ராசியில் சந்திப்போம் என்று கூறி உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்வது
Comments are closed.