குருப்பெயர்ச்சி பலன்கள் மீனம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Meena Rasi 2018
குருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2018 (Guru Peyarchi 2018 – Meena Rasi)
மீன ராசி
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 25ந்தேதி சரியான ஆங்கிலம் 11.10.2018 அன்று வியாழக்கிழமை குருபகவான் துலாம் ராசியிலிருந்து பெயர்ச்சியாகி விருச்சிக ராசியில் பிரவேசிக்கறார்.
மீனம் காலபுருஷனின் மோட்ச ஸ்தானம்.
கடைசி ராசி.காலபுருஷனுக்கு பன்னிரண்டில் சுக்கிரன் உச்சமடைகிறார். எனவேதான் சுக்கிரனுக்கு மட்டும் பன்னிரண்டாம் வீடு மறைவு ஸ்தானம் கிடையாது.இங்கே அசுரகுருவான சுக்கிரன் உச்சமடைகிறார். தேவகுருவான குருபகவான் ஆட்சி பெறுகிறார்.இன்னொரு சுபக்கிரகமான புதன் நீசமடைகிறார்.
மூன்று முக்கிய சுபக்கிரகங்கள் ஆட்சி, உச்சம், நீசம் என்ற வகையில் இந்த ராசியில் சம்பந்தப்படுகிறார்கள்.
இது சுபராசி. இதன் அதிபதி குருபகவான் என்பதால் இந்த ராசியாதிபதிகள் ரொம்ப நல்லவர்கள்.நேர்மையானவர்கள்.ஒரு வரையரைக்குள்,சட்டதிட்டங்களுங்குள்,ஒரு கோட்டுக்குள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற விதிப்படி வாழ்பவர்கள்.
விதின்னா என்ன?? விதிக்கப்பட்டது விதி.
சாலையின் இடதுஓரத்தில் தான் நடந்து செல்ல வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி. காலேஜில் செல்ஃபோன் உபயோகப்படுத்த கூடாது. பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது. இவைகள் எல்லாம் விதி.
இந்த ராசியின் அதிபதி பிராமண கிரகம் என்பதால் இவர்கள் யாரையும் கெடுக்க மாட்டார்கள். யாரையும் கெடுக்காமல் நேர்வழியில் வாழ்பவர்கள். கழுவுற மீனில் நழுவுற மீன்கள். எதிலும் பிடிகொடுக்காமல் தப்பி விடுவார்கள். வாக்கு தரமாட்டார்கள். தந்தால் எப்படியாவது உயிரை கொடுத்தாவது நிறைவேற்றி விடுவார்கள்.
இது நீர்ராசி என்று அழைக்கப்படும். நீர் ராசிகளான மீனம், கடகம்,விருச்சிகத்தில்
சுபக்கிரகங்கள், அமையப்பெற்ற ஜாதகர்கள் ஊர் விட்டு ஊரு,நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் கடல்கடந்து சென்று பிழைக்க கூடிய வாய்ப்பை நீர் ராசிகளில் அமர்ந்த கிரகங்கள் தருவார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன் நீர்கிரகம்.ராசி நீர்ராசி. எனவே இவர்களுக்கு ஐஸ்வாட்டர் ரொம்ப பிடிக்கும். குளிர்ச்சியான கூல்டிரிங்ஸ், ஐஸ்,ஐஸ்கிரீம் போன்றவற்றை மிகவும் விரும்புவார்கள். குளிர்ந்த நீரில் குளிப்பதையே அதிகம் விரும்புவார்கள். அதிலும் கிணறு,ஆறு,கடல் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது இவர்களுக்கு பேரானந்தம்.
மீனராசிக்கு சந்திரன் பூர்வ புண்ணியாதிபதியாக வருவார். ராசிக்கு பஞ்சமாதிபதி ராசியில் வளர்பிறை சந்திரனாக அமர்வது மிகச்சிறப்பு.பூர்வ புண்ணியத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கே இந்த மாதிரியான அமைப்பு கிடைக்கும்.
மீனராசிக்காரர்களுக்கு இதுவரை குருபகவான் எட்டில் அட்டமகுருவாக ராசிக்கு எட்டில் அமர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தார். ஒரு தொல்லை போனா ஒரு தொல்லையை கொடுத்து வந்தார். அரச கோபத்தை சிலர் சந்தித்து வந்திருப்பர்.உறவுகள் பகை.அலைச்சல் ,வீண்விரோதம், நோய் ,கடன்
போன்ற தொல்லைகளை சந்தித்து வந்தீர்கள். தனகாரகன் எட்டில் மறைந்ததால் சிலர் சிட்பண்ட்ஸ்ல, வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்து இருப்பீர்கள். இன்மை எட்டிலே வாலி பட்டமிழந்து போம்படியானதும் என்ற செய்யுள்படி சிலர் பதவிகளை இழந்து இருப்பீர்கள்.
தற்போது உங்கள் ராசியாதிபதியான குருபகவான் ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு வரப்போகின்றார்.இது மிகவும் அற்புதமான ஒரு அமைப்பாகும். ஒன்பதாம் இடம் குருபகவானுக்கு மிகவும் உகந்த இடமாகும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில குரு.அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி என்ற பழமொழி ஒன்று உண்டு.
“தாமென செல்வமொடு குதிரை உண்டாம்:
தழைக்குமே குடைதர்மதானம் ஓங்கும்:
நாமென தாய், தகப்பன் புதல்வராலே நன்மையுண்டாம்:அருமையொடு பெருமை உண்டாம்
செலவுகள் குறைந்து உபரி பணம் மிச்சமாகும். பேங்க்ல பணம் சேமிக்கற அளவுக்கு பணம் வரும். வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு தானம் தர்மம் செய்யும் அளவுக்கு பணம் வரும்.
பேரும் ,புகழோடும் வாழ்வார்கள்.
குருபகவான்தான் உங்கள் ராசியாதிபதி.
அவர் ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பார்.ராசியாதிபதி உங்கள் ராசியை பார்த்து உங்களை வலுப்படுத்துவார். உங்கள் தோற்றபொலிவு கூடும். ஒரு பத்து வயது குறைஞ்ச மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பீர்கள். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் சமுதாய அந்தஸ்து உயரும்.உங்கள் மதிப்பு மரியாதை கூடும். நீங்கள் யாருனு ஒரு பத்து பேருக்கு தெரியும்.
இதுவரை நோய்தொல்லையில் அழுந்தியவர்கள் குரு ராசியை பார்ப்பதால் நோய் தொல்லைகளிலிருந்து குருவின் பார்வையால் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். டாக்டரே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் உடல்நிலை முன்னேற்றம் தரும்.
குருபகவான் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் இளைய சகோதர ஆதரவு காரிய வெற்றிகளை தருவார். குருவால் பல சகாயங்கள் இருக்கும். குருபகவான் ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு ஐந்தை நீர்ராசியில் இருந்து நீர் ராசியான கடகத்தை பாரவையிடுவதால் புண்ணிய நதிகளில் நதிகளில் நீராட க்கூடிய வாய்ப்புகள் தானாக அமையும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். நல்ல குரு அமையப்பெற்று வித்தைகளில் பாண்டித்தியம் பெறுவீர்கள்.
குலதெய்வ வழிபாடு மிகச்சிறப்பாக அமையும். குழந்தைகளுக்கு பேர்வைக்கறது,தாய் மாமன் மடியில உட்கார வைத்து குலசாமி கோவிலில் முடியெடுப்பது,காதுகுத்துவது,போன்ற சுபவிஷேஷங்கள் மிகச்சிறப்பாக நடக்கும். தெய்வ பக்தி மேலோங்கும். தெய்வ அனுகூலம், தெய்வ பாதுகாப்பு உங்களுக்கு உண்டு. குருபலம் வந்து விட்டதால் திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலர்களுக்கும் திருமணம் இனிதே நடந்து விடும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ராஜபூஜிதை உண்டாகும். அரசாங்க உதவி கிடைக்கும். பேங்க்ல லோன் போட்டா லோன் கிடைத்துவிடும்.
கல்வி கடன்,வீட்டுக்கடன்,தொழில் கடன் என யாருக்கு என்னகடன் தேவையோ அது பேங்க் மூலம்கிடைத்துவிடும்.பெரிய மனிதர்கள் சப்போர்ட்,உதவி கிடைக்கும். ரோட்டில் போறவன்கூட ஒருஉதவி செஞ்சுட்டு போவான்.
குருபகவான் சந்திரனுக்கு ஒன்று ,ஐந்து, ஒன்பதில் அமரப்பெறும்போது அது குருச்சந்திரயோகம் என்று அழைக்கப்படுகிறது. புலிப்பாணி முனிவர்
“கூறப்பா இன்னுமொன்று பகரக்கேளு
குமரனுக்கு குருச்சந்திர பலனை கேளு
சீறப்பா செம்பொன்னும் மனையும் கிட்டும்.
செனித்ததொரு மனைதனிலே தெய்வம் காக்கும்.
கூறப்பா கோதையரால் பொருளும் சேரும்
குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்சம் உள்ளோன் என்கிறார்.
குருசந்திர யோகம் உள்ளபோது குருவும், சந்திரனும் ராசிக்கு யோகர்களாக உள்ள போது ஜாதகன் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பான்.சொந்த வீடு கிடைக்கும்.
குடியிருக்கும் வீட்டில் தெய்வம் இருந்து காப்பாற்றும் என்கிறார். பெண்களின் சொத்துக்களும்,பெண்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும் என்கிறார் .மேலும் பேரும் புகழும் கிடைக்கும் என்கிறார் புலிப்பாணி முனிவர்.
சரிங்க குருப்பெயர்ச்சி ok. சனி,கேது,ராகு வின் சஞ்சாரங்களால் ஏற்படும் பலன்களை பற்றி நீங்கள் கூறவேயில்லேயே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சனிபகவான் தற்போது பத்தாமிடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார். பத்தில ஒரு பாவியாவது பழுதாவது இருக்கலாம் என்ற விதிப்படி பத்துல சனி இருக்கலாம். சனி பத்துல இருந்து பன்னிரண்டாம் வீட்டை அதுவும் தன்வீட்டை தானே பார்ப்பதால் கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். பிரிந்த கணவன் ,மனைவிகள் ஒன்று சேருவார்கள். திருமணம் போன்ற சுப விரையங்கள் குடும்பத்தில் ஏற்படும்.
3,,6,10,11 போன்ற இடங்கள் உபஜெய ஸ்தானங்கள் என்றுஅழைக்கப்படும். உப ஜெய ஸ்தானங்களில் பத்து,பதினொன்றாம் பாவகங்கள் சிறப்பான நல்ல பலன்களை தரும் பாவகங்கள் ஆகும். ஒரு உபஜெய ஸ்தானாதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருப்பது நல்ல பணவரவுகளை தரும்.
பத்தில் இருக்கும் சனி சுபத்தன்மை பெற்றிருப்பதாலும், 6.3.2019 முதல் கேதுவும் சனியுடன் சேர்க்கை பெறுவதாலும் அவருக்கு வீடு கொடுத்த குருபகவான் திரிகோணத்தில் நட்பு பெறுவதாலும் ,லாபாதிபதியே தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதாலும் தொழிலில் லாபங்களும் பணவரவுகளும் இருக்கும்.
சனி பத்தில் இருந்து நான்காம் வீட்டை பார்வையிடுவதால் சிலருக்கு இடமாற்றம் உண்டு. வீடு மாறுவார்கள். தாயார் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். இருசக்கர வாகனங்கள கார் பழுதாகிஅதிக செலவுகள் வைக்கும். வீடு மராமத்து வேலைகள் செய்து அதன்மூலம் விரையங்களை சனிதருவார்.
ஏழாமிடத்தை சனி பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் இந்த ஒருவருட காலமாக அன்னியோன்யம் குறைவாக இருந்திருக்கும்.அதெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியால் சரியாகிவிடும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சனியும்+கேதுவும் இணைந்து பத்தாமிடத்தில் இருந்து குரு ஒன்பதில் இருந்து ராசியை பார்ப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
6.3.2019 க்கு மேல் நாட்டில் ஆன்மீகம் வளரும். ஆன்மீக கட்சிகள் வளரும். தமிழ்நாட்டில் கூட ஆன்மீக கட்சிகள் வலுவாக கால் பதிக்கும். சில பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாட்டில் இருந்து ஆன்மிக கட்சிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கும்.
நாட்டில் ஆன்மீகம் செழித்து வளரும். பல கோவில் கும்பாபிஷேகங்கள் தமிழ்நாட்டில் நடக்கும். ஆன்மீக வாதிகளுக்கு நல்ல காலம் பிறக்க போகுது என்றை சொல்ல வேண்டும்.
ஆன்மீக சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களும் முன்னேறுவார்கள்.
மீன ராசிக்காரர்கள் சிலருக்கு அவர்களுடைய குலதெய்வ கோவில் கட்டும் பாக்கியம் கிட்டும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு ,வெளிமாநில பயணங்கள் அடிக்கடி சென்று வருவது போல இருக்கும். என்ன பத்தாமிடத்தில் இருக்கும் சனியால் தொழிலில் பணம் வந்தாலும் ,வேலையில் திருப்தி இருக்காது. வேலையில் அலைக்கழிப்பு இருக்கும். இருந்தாலும் ராசியாதிபதியான குருவின் பார்வை பலத்தால் ராசியாதிபதி ராசியை பார்ப்பதால் நீங்கள் வரக்கூடிய அத்துணை பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு திருப்புமுனை.turning point என்று கூறி இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு ஏற்றமும் முன்னேற்றம் மட்டுமே உண்டு என்று கூறி
நன்றி வணக்கம்
Comments are closed.