குருப்பெயர்ச்சி பலன்கள் மேச ராசி 2018 – 2019 | Guru Peyarchi Mesha Rasi 2018

8,621

குருப்பெயர்ச்சி பலன்கள் மேச ராசி 2018 (Guru Peyarchi 2018 – Mesha Rasi)

கால புருஷனுக்கு லக்னமான பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசியில் பிறந்த மேச ராசியினர் வேகமான செயல்பாடுகளை உடையவர்கள். அவசர புக்திக்காரர்கள்.ஒரு காரியம் உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.கடுமையான உழைப்பாளிகள்.உடல் உழைப்பையே பிரதானமாக கொண்ட மேச ராசியினர் முன்கோபத்தையும்,சுறுசுறுப்பையும் உடைய இவர்கள் எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பத்து முறை யோசனை செய்து ஒரு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். சிலர் அவசரப்பட்டு சில வேலைகளை செய்து விட்டு பின்னர் வருந்துவர்.சிலர் வீண்வம்புகளை விலைக்கு வாங்குவார்கள். தைரியசாலிகள்.

மேச ராசியினருக்கு கடந்த பதினொரு மாதகாலமாக குரு ஏழில் நின்று பல நன்மைகளை செய்து வந்தது.குரு ஏழில் நிற்பது மிகுந்த ஏற்றமாகும் .முன்னேற்ற காலமாக இருந்திருக்கும்.”பூபதி ஏழில் நிற்க புனிதன் கீர்த்தி என்று சொல்லு” பண உதவி கிடைத்தல்,சுபகாரியங்கள் ,குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம், பேரும் புகழும் கிடைத்து,சுய முன்னேற்றம் கூடியிருந்து இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடியிருக்கும். இதெல்லாம் உங்கள் சுய ஜாதகத்தில் நடக்கும் திசா புக்திகளுக்கு ஏற்ப அவர் அவர்களுக்கு கூடவோ,குறையவோ நடந்து இருக்கும்.

தற்போது குருபகவான் மேச ராசிக்கு ஏழாமிடமான துலாம் ராசியிலிருந்து எட்டாமிடமான விருச்சிக ராசிக்கு 11.10.2018 க்கு பிறகு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆக போகிறார். வாக்கியப்படி அக்டோபர் நான்காம் தேதி,தமிழுக்கு புரட்டாசி18 க்கு பிறகு பெயர்ச்சி ஆகிறார். சரி மேச ராசிக்கு இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்க போகின்றது.?

குரு முக்கியமாக தனகாரகன்.புத்திரகாரகன்.
அவர் மேசத்திற்கு பாக்கியாதிபதியும் கூட.
குரு தனகாரகன், புத்திரகாரகன் மறையலாமா??

மதி என்று சொல்லப்படக்கூடிய சந்திரனுக்கு எட்டில் குரு வருவது அகடின் மன்னனுக்கு ஆறு ,எட்டு, வியத்தில் கடிலா மதிஎய்திடவே சகடை என்று சொல்லு.அரிட்டம் என்று சொல்லு,தொல்லை என்று சொல்லு.கஷ்டம் என்று சொல்லு. குருவும், சந்திரனும் சஷ்டாஷ்டக தோசத்தில் இருப்பார்கள். வீடப்பா வேதியனும்,மதிக்கு எட்டில் விளங்கவே வெகுபயமாம்.விளைவு போகுமே என்று புலிப்பாணி முனிவரின் கூற்று ஆகும்.

முதலில் பணவிசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் களில் கவனம் அதிகம் தேவை.சிலர் வேலைக்காக அடுத்தவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறலாம்.புத்திரர்களுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். கடன் வாங்க வேண்டிய தேவைகள் அதிகமாகும். சேமிப்பு குறையும்.

எட்டாம் இடத்தில் குரு நிற்பதாலும் ,ஒன்பதாம் வீட்டில் சனி இருப்பதாலும் அவமானங்கள், இடைஞ்சல்கள் அவ்வப்போது ஏற்படும். குரு இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் இடம் பெருகும் என்ற விதிப்படி குருபகவான் எட்டில் இருந்து 12,2,4இந்த வீடுகளை பார்ப்பார்.அதிலும் தன்னுடைய ஐந்தாம் பார்வையால் பண்னிரண்டாம் வீடான தன் வீட்டை தானே பார்த்து விரயங்களை,சுப விரையங்களை அதிகப்படுத்துவார்.

சிலருக்கு சுயஜாதகத்தில் 12,2,7ம் அதிபதிகள்,சுக்கிரன் தசை நடக்கும் போது அல்லது அவர்கள் புக்திகள் நடக்கும் போது அவர்களுக்கு திருமணத்தை பண்ணி வைப்பார். சிலருக்கு நான்காம் அதிபதி+
திசாபுக்திகள் நடக்கும் போது குரு கோட்சாரத்தில் நான்காம் வீட்டை பார்ப்பதால் இதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவர்களுக்கு சொந்த வீடு கிடைத்துவிடும்.

சுபர்கள் எட்டில் இருக்கலாம் என்ற விதிப்படி குரு நல்ல ஆயுள் பலத்தை அளிப்பார். மேலும் குரு எட்டில் இருந்து இரண்டாம் வீட்டையும் பார்ப்பதால் வருமானத்தை கொடுத்து விரையங்களை தருவார்.குரு சனியின் நட்சத்திர பாதத்தில் சஞ்சரிக்கும் போது சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்களையும்,வெளிநாட்டு பயணங்களையும் தருவார். குருபகவான் புதனின் நட்சத்திர காலில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் அவ்வளவு நன்மைகளை தராது கடன் வாங்க வேண்டிய அவசியம் வரும்.

இன்மை யெட்டிலே வாலி பட்டம் இழந்து போம்படியானதும் என்ற செய்யுளின்படி சிலர் தங்களது வேலையை விட்டு விடுவர்.அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளை அனுசரித்து போக முடியாது. கெட்ட பெயர்கள் ஏற்படும். எச்சரிக்கை தேவை.அஷ்டம குரு ரொம்ப மோசம்.

உங்களுக்கு (மேச ராசியினருக்கு)குருவின் வக்ர காலமான11.4.2019 முதல் 11.8.2019 வரை மிகச்சிறந்த காலகட்டங்களாகும்.
ஏனெனில் இந்த காலகட்டங்களில் குரு வக்ரம் ஆகின்றார். எனவே ஒரு கிரகம் கெட்ட இடங்களில் இருந்து வக்ரம் பெறும் போது கெட்ட பலன்களை செய்யாது என்ற விதிப்படி உங்களுக்கு அந்த காலங்கள் அமோகமான காலங்கள் ஆகும்.

அதேபோல உங்களுக்கு ராகு நான்காம் இடத்திலும் ,கேதுபகவான் பத்தாம் இடத்திலும் இருந்து அலைக்கழிப்பை கொடுத்து வந்த நிலையில் திருக்கணிதப்படி 6.3.2019 க்கு பிறகு ராகு கேதுக்கள் முறையே 3,ஒன்பதாம் இடங்களுக்கு சென்று ராகுவால் ஆதாயங்களையும், ஒன்பதாம் இடத்து தனுசு வாழராசியிலிருக்கும் சனி+கேதுவால் ஆன்மிக பயணங்களும் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

ஜனன ஜாதகத்தில் குருபகவான் நல்ல இடங்களில் அமரப்பெற்று தற்போது நல்ல தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நன்மைகளை செய்யும். வெளிநாடு செல்ல கூடிய வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.

பொதுவாக எட்டாம் இடத்து குருவால் உறவுகள் பகை,பணவிரையம்,அபகீர்த்தி,சங்கடங்கள், குழந்தைகளால் மனவருத்தம், குழந்தைகளுக்காக மருத்துவ செலவினங்கள் குடும்ப ஒற்றுமை குறைவு போன்ற கெட்ட பலன்கள் ஏற்படும் என்பதால் பரிகாரமாக உங்கள் ராசிநாதனான முருகப்பெருமானை வழிபாடு செய்வதும், முருகப்பெருமானுக்கு செவ்வரளி, சிவப்பு கலர் பட்டு எடுத்து சாற்றி வழிபாடு செய்வதுவும்,திருச்செந்தூர், ஆலங்குடி சென்று வழிபாடுகளை செய்து வர எட்டாம் இடத்து குருவால் வரக்கூடிய தொல்லைகளை குறைக்கும். குறையும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More