2019 குரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி

4,787

2019 ஆம் ஆண்டு நவ கிரகங்களில் முழு சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஐப்பசி 18 தேதி பின்னிரவு ,நவம்பர் மாதம் 5ம்தேதி அதிகாலை 5 .17 மணிக்கு திருக்கணிதப்படி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

Mithuna Rasi Guru Peyarchi Palan 2019

மிதுன ராசி பலன்கள் – 67/100

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு 7க்குடையவராகவும், 10-க்குடையவராகவும் வருவார்.

மிதுனராசிக்காரர்களுக்கு கடந்த தீபாவளிக்கு பிறகு கடன் சார்ந்த பிரச்சினைகளும், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாக இருந்திருக்கும்.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதுபோல் கடன் சிலருக்குக் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும்.

மருத்துவ செலவுகளும் கூடி இருக்கும்.

செய்தொழிலில் புது போட்டியாளர்கள் உருவாகி லாபத்தைக் குறைத்து இருக்கும்.

தற்போது கோட்சாரத்தில் ராசிக்கு ஏழாம் இடத்தில், குரு தன்னுடைய ஆட்சி மூலத்திரிகோண வீடாகிய தனுசில் அமர்ந்து லாபஸ்தானத்தையும், இராசியையும், கீர்த்தி ஸ்தானத்தையும் பார்ப்பதால் இந்த நாள் வரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்த உங்கள் மனது புது புத்துணர்ச்சி பெறும்.

கடனை அடைக்க புதிய வழிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

அதே நேரத்தில் இன்னும் சில மாதங்களில் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.

புதிய முதலீடுகளை மிகக் குறைவான அளவு செய்வதே நல்லது. சிறந்தது.

தொழிலை விரிவாக்கம் செய்ய இது சரியான நேரம் அல்ல.

ஏழாம் இடம் என்பது நண்பர்களைக் குறிக்கும் இடம் என்பதால் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

அதே நேரத்தில் புது நண்பர்களிடம் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களின் ஆலோசனையை கேட்பதில் கவனமாக இருங்கள் ஏனென்றால் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது.

எவ்வளவுதான் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பராக இருந்தாலும் கண்டிப்பாக ஜாமீனுக்கு கையெழுத்து இட வேண்டாம்.

குரு ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள்.

ராசியில் இருந்து இதுவரை எதிர்மறை எண்ணத்தை செயல் படுத்திக் கொண்டிருந்த ராகுவை, குரு இனி பார்ப்பதால் ராகுவின் எதிர்மறை பலன்கள் இருக்காது.

ஏற்கனவே கட்டுரையில் குறிப்பிட்டது போல சனியின் ஆதிக்கத்திற்கு முன்பு குருவின் ஆதிக்கம் பெரிய அளவு செல்லுபடி ஆகாது என்பதால் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

01 – 6 – 2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மற்றபடி இந்த குருபெயர்ச்சி மிதுன ராசிக்கு பணவரவில் உள்ள பாடத்தை கற்று கொடுக்கும்.

மிதுன ராசிக்கு 2020ஆம் ஆண்டு மிதமான பலன் தரும் ஆண்டாகவே இருக்கும்.

பரிகாரம்

மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் மதுரை மீனாட்சி, சொக்கரை தினசரி வழிபடவும். திருச்செந்தூர் ஒருமுறை சென்று வர திருப்பங்கள் உண்டாகும். ஆலங்குடி குரு பகவானை ஒரு முறை தரிசனம் செய்யவும்.

காலபைரவரை தினசரி வழிபடவும்.

குல தெய்வ வழிபாடும் சிறப்பை கொடுக்கும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More