தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

1,837

கடந்த 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் திருக்கணிதப்படி சனி பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்து வருகிறார். குரு பெயர்ச்சியை பற்றி நாம் காணும் போதே சனி மற்றும் ஆண்டு கிரகங்களான ராகு-கேதுக்களின் சஞ்சாரத்தையும் நாம் சேர்த்து கணிக்கும்போதுதான் நமக்கு ஓரளவு தெளிவான துல்லியமான பலன்களை அறிய முடியும்.

கடந்த ஐந்து வருடங்களாக தனுசு ராசியினர் ஏழரைச் சனியால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாகவே விருச்சிகம், தனுசு ராசியினர் ஏழரைச் சனியால் ரொம்பவே கஷ்டப்பட்டனர். ஏன்? என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தோமானால் இந்த ராசிகளுக்கு சனி பகவான் ஆதிபத்திய விசேஷம் இல்லாதவராக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்ப உதாரணமாக துலாம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி நடக்கிறது. ஆனால் அவர்களுக்கு சனி பகவான் பெரிய அளவில் கெடுதல்களைச் செய்யமாட்டார். சில சமயம் நல்ல பலன்கள் கூட இருப்பது உண்டு‌. என்ன காரணம்?? சனி பகவான் நான்காமிடமான ஒரு கேந்திரத்திற்கும் ஐந்தாம் இடமான ஒரு திரிகோணத்திற்கும் ஆதிபத்தியம் பெறுவதால்,அவர் துலாம் ராசிக்கு ராஜ யோகாதிபதியாக வருவதால், ஒரு ராஜயோகாதிபதி எந்த நிலையிலும் ஒரு ஜாதகரை கெடுக்கமாட்டார் என்பது ஒரு பொதுவிதி.

நேற்று தனுசு லக்கனம் தனுசு ராசியை சேர்ந்த,விதிக்கும் மதிக்கும் கொடுமையான ஏழரைச் சனியை அனுபவித்து வந்த ஒரு 18 வயது வாலிபன் ஏழரைச்சனியில் தனது தாயையும் தகப்பனை இழந்து, தனது பொருளாதாரத்தை இழந்து, தனது பூர்வீக சொத்துக்களை இழந்து ஊரை விட்டு வெளியூரில் வசிக்கும் ஒரு ஜாதகத்தை பார்க்க நேரிட்டது.

ஏழரைச் சனியும் நடந்து, தசா புத்தி சரியில்லாத அமைப்பும், ஏழரைச் சனி நடக்கும்போது 6, 8,12ஆம் அதிபதிகளின் தசையும் சேர்ந்து நடக்கும் போது மேற்படியான விதிக்கும், மதிக்கும் ஏழரைச் சனி, அதாவது லக்னம் ராசி இரண்டுமே தனுசு என்றாகி, லக்னம் ராசி இரண்டிலும் சனி அமர்ந்து லக்னம் ராசி இரண்டுமே இருள் அமைப்பாகி , ஜென்மச்சனி யாகி 2018, 2019, 2020
ஜாதகனை கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது.

ஒரு ஜாதகத்தில் சனி பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து குருவால் பார்க்கப்பட்டு சுபத்தன்மை அடைந்து இருந்தாலும், சனி பகவான் 3, 6, 10, 11 போன்ற ஸ்தானங்களில் சுய ஜாதகத்தில் அமர்ந்து (உபஜெய ஸ்தானங்களில்) நல்ல சாரம் பெற்று சுபத்தன்மை அடைந்து இருந்தாலும், ஏழரைச் சனி நடக்கும்போது லக்னாதிபதி தசை, பஞ்சமாதிபதி தசை, பாக்கியாதிபதி தசைகள் சுபத்தன்மை பெற்று தசையை நடத்தும்போது ஏழரைச்சனியில் சுபவிரயங்கள் இருக்கும்.வீடு கட்டறது, ஓடி ஓடி தோட்டம் வாங்கறது,இடம் வாங்கறது, கார் மாதிரியான வாகனம் வாங்கறது, புரமோசன், பதவி உயர்வு,,கனடா, ஸ்வீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பணக்கார வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிப்பது, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பது போன்ற நல்ல பலன்களும் ஏழரைச் சனியில் நடப்பதுவும் உண்டு.

கடந்த காலத்தில் ஏழரைச்சனியில் ஐந்து வருடங்களாக தனுசு ராசியினர் நன்றாகவே இல்லை.பொருளாதாரம், குடும்பம், தொழில் போன்றவற்றை கடுமையாக பாதித்து வந்தது. 2020 ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் உங்கள் ராசியான தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ந்து விட்டார். இது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானம் ஆகும். போக்கு ஸ்தானம் என்று அழைக்கப்படும். இது பாதச்சனி என்று அழைக்கப்படும்.

இரண்டாம் இடமான குடும்ப சனி, பாத சனியில், ஏழரைச் சனியில் பட்ட துன்பங்கள் வெகுவாக குறையும் என்று பொதுவாகச் சொல்லப் பட்டுள்ளது. அது ஓரளவு உண்மைதான். 2017, 2018, 19 இந்த காலங்களில் ஜென்மச்சனியில், பட்ட கஷ்டங்கள்,துன்பங்கள், அவமானங்கள், மன அழுத்தங்கள் நிச்சயமாக இந்த இந்த குடும்பச்சனியில் இருக்காது. கடந்த பத்து மாதங்களாக இந்த பாத சனியால் பொருளாதாரம் பாதிப்பை தந்தது. தன விஷயங்களில் வெகுவாக தடுமாற்றம் ஏற்படுத்தியது. கடந்த 10 மாதங்களாக வாக்குத் தவற வேண்டி ஏற்பட்டது. கடந்த பத்து மாதத்தில் 5 மணிக்குயாருக்காவது பணம் தரேன்னு வாக்கு கொடுத்து இருந்தீங்கங்கனா 5 மணிக்கு பணம் கையில் இருக்காது. உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திருக்காது. அவர உட்கார வைத்து விட்டு அக்கம்பக்கத்துல,பக்கத்து வீட்டுல அங்கிட்டு இங்கிட்டு புரட்டி பணத்தை தருவதற்குள் போதும் போதுமுனு ஆகியிருக்கும் ‌.

கடந்த 10 மாதங்களாக கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு இருக்கும். கடந்த பத்து மாதங்களாக.வாக்கில் சனி,நாக்கில் சனி அமர்ந்து உங்கள் வார்த்தையால் சண்டை சச்சரவு ஏற்பட்டு அது போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். தன நஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும். வயதானவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்கள்,கண் அறுவை சிகிச்சை போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் அனுபவித்து வந்திருப்பீர்கள்.ஆனால் அதெல்லாம் இனி இருக்கவே இருக்காது. ஏன்னா??

இரண்டாம் இடத்தில் இதுவரை சனி தனித்து பாவத்தன்மையோடு இருந்தார். ஆனால் இனி இவருடன் குரு இணைவதால் குடும்பாதிபதி குடும்ப ஸ்தானம் சுபத்தன்மை அடைவதால்
குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும்.தன வரவுகள் திருப்தியாக இருக்கும். நாணயம் ஏற்படும். வாக்கு பலிதமாகும்.உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கும்.

இதெல்லாம் குருபகவான் சனியோடு இணைவதால் உண்டாகும் நல்ல பலன்களாகும். குடும்ப ஸ்தானம்,துடுப்பாடிய தி சுபத்தன்மை அடைவதால் உண்டாகும் நல்ல பலன்களாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2020

கடந்த ஒரு வருட காலமாக குரு பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று, சொந்த வீட்டில் வலுவாக சஞ்சாரம் செய்து வந்ததால் ஏழரைச் சனியை நீங்கள் வெகுவாக சமாளித்து விட்டீர்கள்.

உங்கள் ராசிநாதன் குருபகவான் வலுவாக இருந்ததால் கடன், நோய்,எதிரி, வம்பு,வழக்கு, அவமானம் அசிங்கம் போன்றவற்றை நீங்கள் எளிதாக கடந்து விட்டீர்கள். எதையும் சமாளித்து கொண்டீர்கள்.தற்போது வரக்கூடிய 2020 நவம்பர் மாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை பகல் மணி ஒன்றே கால் மணிக்கு குருபகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாமிடமான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

உங்கள் ராசிநாதனான குரு பகவான் மகர ராசியில் நீசம் அடைவது,உங்கள் ராசிநாதன் நீசம் அடைவது உங்களுக்கு அவ்வளவு நல்லது இல்லை. குரு பகவான் உங்களுடைய ராசிநாதன் மட்டும் அல்லாது அவர் பொது தன காரகன் ஆவார். அவர் புத்திர காரகனும் ஆவார். அறிவு காரகனும், ஜீவன காரகனும் ஆவார். போக காரகனும் ஆவார். இவ்வளவு சிறப்புகளை தன்னகத்தே வைத்துள்ள குருபகவான் கோடி தோஷங்களை நீக்கும் குரு பகவான், மகர ராசியில் நீசம் அடைவது குரு பகவானின் சிறப்புகளை பெருமைகளை வெகுவாக குறைக்கும்.

குரு பகவான் கடந்த காலத்தில் மகர ராசியில் அதிசாரமாக நீசம் பெற்ற காலத்தில், உலகத்தில் கொரனா என்னும் வைரஸால் கடுமையான பொருளாதாரத் தட்டுப்பாடு, வேலை இழப்புகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

உங்கள் ராசிநாதன் நீசம் பெற்ற காரணத்தால் நீங்கள் உங்கள் ராசிநாதனான குரு பகவானை வலுப்படுத்தக்கூடிய முறையான பரிகாரங்களை செய்து கொள்வது ரொம்ப அவசியம் ஆகும். குரு ஸ்தலமான ஆலங்குடி, திருச்செந்தூர் சென்று உங்களுடைய ஜென்ம நட்சத்திரமன்று அங்கு ஒரு ரெண்டு மணி நேரம் தங்கிவிட்டு,அமர்ந்து விட்டு வருவது பரிகாரமாகும். பக்கத்தில் இருக்கும் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டாடை அணிவித்து, மஞ்சள் நிற மாலை அணிவித்து, கொண்டக்கடலை மாலை போட்டு, இரண்டு நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும்.

தற்போது குருபகவான் மகர ராசியில் உலகத்துக்கே நீசம் பெற்று இருந்தாலும், உங்கள் ராசிக்கு என்னவோ 2-ஆம் இடமான தன, குடும்ப ஸ்தானத்தில் வீட்டிருப்பதால் இது குரு பகவானுக்கு மிகவும் பிடித்த இடம்.உன்னதமான இடமாகும்.குரு பகவான் நீசம் பெற்றதால் கொஞ்சம் நல்ல பலன்கள் குறையுமேயன்றி முழுவதுமாக குறையாது.

குரு பதினொன்று, ஏழு, ஒன்பான், கூறும்
ஐந்து இரண்டில் நிற்க
திருமகள் கடாட்சம் உண்டாகும்;
தீர்த்த யாத்திரை உண்டாகும்:
சுபகாரியங்கள் உண்டாகும்;
மேலிடத்து அனுகூலம் உண்டாகும்;
தாய், தந்தை உதவிகள் உண்டாகும்;
அருமையோடு பெருமையும் உண்டாகும்;

என்ற எளிமையான செய்யுளின் அர்த்தம் உங்களுக்கே விளங்கும் என்பதால் அதை அதிகம் விளக்க வில்லை.

குரு பகவான் இரண்டாம் இடத்தில் வந்து சனியுடன் இணைவதால் சனியால் வரக்கூடிய துன்பங்களை, தொல்லைகளை,கஷ்டங்களை நீக்கி விடுவார்.

குரு பகவான் 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் இரண்டாம் இடத்து அதிபதியான சனியுடன் இணைவதால்,குடும்பாதிபதி சனி சுபத்தன்மை அடைவதால் குடும்பத்திலிருந்த வம்பு வழக்குகள் பிணக்குகள் நீங்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 10 மாதங்களாக பொருளாதாரத்தில் இருந்த சுணக்கங்கள் நீங்கும்.

கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் குடும்ப ஒற்றுமையை தந்துவிடுவார்.இரண்டாமிடத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்கு குரு பலம் இருப்பதால் திருமணம் ஆகாத தனுசு ராசியினருக்கு திருமணம் இனிதே நடந்து விடும்.குழந்தை வேண்டி தவமாய் தவம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் இனிதே கிடைத்துவிடும்.

குருபகவான் இரண்டாம் இடமான சர ராசியில் இருந்து எட்டாம் இடமான சாதனையை பார்ப்பதால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்திற்கு மேல் வெளிநாட்டு வேலை கிடைத்து விடும். குரு பகவான் இரண்டாமிடத்தில் நீசம் பெற்றிருப்பதாலும், அவர் ஆறாம் இடத்தை பார்வை செய்வதாலும், பேங்கில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தொழில் கடன், வாகன கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் கிடைத்து உங்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

சிலர் கடன்பட்டு வீடு வாங்குவர். சிலர் கடன் வாங்கி திருமணம் செய்வர். சிலர் கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைப்பர்.ஆக மொத்தத்தில் 2 லிருந்து தனது ஐந்தாம் பார்வையால் ஆறாம் இடத்தைப் பார்க்கும் குருவால் கடனை கொடுத்து யோகத்தை தரும். சுபக் கடன்கள் இருக்கும்.

தனுசு ராசியை சேர்ந்த ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற வாக்கால் பிழைப்பவர்களுக்கு இது யோகமான காலம் ஆகும்.ஏனென்றால் இரண்டாமிடம், இரண்டாமிடத்து அதிபதி குருவால் சுபத்தன்மை அடைகிறார்.

குரு பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்.இதுவரை ஏழரைச் சனியால் வேலை இல்லாமல், கையில் காசில்லாமல் திண்டாடி வந்தவர்களுக்கு, வீட்டில் தாய் தகப்பனால் தண்டச்சோறு என்று பெயரெடுத்து வந்தவர்களுக்கு, குருவின் 9-ம் பார்வையால் தொழில் ஸ்தானம் வலுத்து சுபத்தன்மை அடைந்து, வேலை இல்லாத பட்டதாரியான அவர்களுக்கு, வேலை கிடைத்து அவர்களும் சமுதாயத்தில் ஒரு மதிப்பு, மரியாதையோடு, சுயமரியாதையோடு வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் குரு பகவான் 6-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் ஒருசேர பார்ப்பதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை யும், வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் சிறக்கும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த ராசி பெண்களுக்கு இது அருமையான பொற்காலம் ஆகும். நீங்கள் நினைத்தபடி தனிக்குடித்தனம் சென்று கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். மாணவர்கள் நன்கு படித்து கல்வியில் தேர்ச்சி பெறுவர்.குரு பகவான் 6-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் பார்வை செய்வதால் படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துவிடும். விவசாயிகள் இந்த வருடம் நல்ல மகசூலை அடைந்து லாபம் பெறுவர்.

உங்கள் ராசிநாதனான குரு பகவான் நீசம் பெற்று இருந்தாலும் அவர் சனியுடன் சேர்ந்து நீசபங்கம் பெறுவதாலும் என்னதான் அவர் நீசம் பெற்று இருந்தாலும் அவருடைய பார்வையால் கண்டிப்பாக நல்ல பலன்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.உங்கள் ராசி நாதன் நீசம் பெற்றிருந்தாலும் அவரால் வரக்கூடிய நன்மைகள் சற்று குறைந்தாலும் முழுவதுமாக குறைய வாய்ப்பில்லை. முக்கியமாக ஏழரைச் சனியால் வரக்கூடிய துன்பங்கள் கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் எதிர்காலத்தில் ரொம்பவே குறைவு என்பதோடு மட்டுமல்லாமல், சனி குருவால் சுபத்தன்மை அடைவதால் ஏழரைச் சனியின் பாதிப்பு வெகுவாகவே குறைந்துவிடும்.

உங்களுக்கு நடக்கும் தசா புத்திகள் நல்ல தசாபுக்திகளாக இருக்கும்பட்சத்தில் இன்னும் நல்ல பலன்களை, மேன்மையான பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2020

இந்த வருடம் 2020 செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டார். கேது பகவான் உங்கள் ராசியில் இருந்து 12-ஆம் இடத்திற்கு ஷிப்ட் ஆகி விட்டார். பொதுவாக ராகு கேதுக்கள் 6, 12ஆம் இடத்தில் அமர்வது பெரிய யோகம்.

கொடியவர்கள் 3, 6, 12 இல் மறைந்த பலனை தர வேண்டும் என்ற பொது விதியின்படி ராகு கேதுக்கள் 6 12ல் மறைந்து கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் உங்களுக்கு மேலான ராஜ யோகத்தை தர காத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒருகெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடியாத ஒரு அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம்தான். ஆறாம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் ஆறாம் இடத்தை கெடுப்பார். ஆறாம் இடமான கடன், நோய், எதிரி, வம்பு வழக்கு,அவமானம்,அசிங்கம் கேவலம் போன்ற அனைத்தையும் கெடுப்பார்.

பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் விரயங்களை, தண்டச் செலவு களை, நஷ்டங்களை வெகுவாக குறைப்பார். இதுவரை ஒன்று, ஏழாம் இடங்களில் இருந்து கடுமையான தார தோசங்களை, திருமண தடைகளை, திருமணம், குடும்பம் போன்ற விஷயங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடும்பத்தில் கடுமையான குழப்பங்கள், வழக்கு, விவகாரம் போன்றவற்றை தந்து வந்த ராகுகேதுக்கள் விலகியிருப்பது பெரிய யோகம். இந்த ராகு கேது பெயர்ச்சி யின் காரணமாக குடும்பத்தில் ஒற்றுமை, கணவன் மனைவி அன்னியோன்யம், திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடப்பது, வழக்கு வியாஜ்யங்களில் வெற்றி, கடன் தீருவது போன்ற நல்ல பலன்களை 6, 12 ம்மிடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் தனுசு ராசியினருக்கு தருவார்கள். மொத்தத்தில் சனியால், குருவால்,ராகு கேது போன்ற ஆண்டுகிரகங்களால் இந்த ஆண்டு அதிகமாக நன்மைகளை அடையப் போகும் ராசிகளுல் தனுசும் ஒன்று.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More