2019 குரு பெயர்ச்சி பலன்கள் மீன ராசி
மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் – 85/100.
மீன ராசிக்கு குருபகவான் ராசி அதிபதியாகவும், பத்தாம் அதிபதியாகவும் வருவார்.
மீன ராசிக்கு இதுநாள் வரை ஒன்பதாம் இடத்தில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த குருபகவான் தற்போது பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.
பொதுவாக பத்தில் குரு பதவியைப் பறிக்கும் என்பது பழமொழி.
ஆனால் தற்போதைய கோட்சாரத்தில் இந்த பழமொழி உங்களுக்கு பொருந்தாது. காரணம் இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதுபோல சனியை விட குரு பலமானவர் அல்ல.
கடந்த இரண்டு வருடங்களாக சனி பத்தில் இருந்து, வதைத்ததைவிட குரு ஒன்றும் கெடுத்து விடமாட்டார். சனி பத்தில் இருந்தபோது தொழில் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து எத்தனை பேர். வேலையில் இருந்து திடீரென விலக்கப்பட்டோர் எத்தனை பேர் என ஒரு பட்டியலே போடலாம்.
மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஜீவனம். ஜீவனத்திற்கு அடிப்படைத் தொழில். உத்யோகம் புருஷ லட்சணம் அல்லவா.
பத்தில் சனி இருந்தபோது மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கியவர் திடீரென வேலையை இழந்தார். நேற்று வரை ஒன்றரை லட்சம் சம்பளம். இன்று 10 பைசா வருமானம் இல்லை.
மலையையே பார்த்துவந்த உங்களுக்கு மடு ஒன்றும் பெரிய விஷயமல்ல. இன்னும் சில மாதங்களில் சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி மிக மிக மிக நல்ல அமைப்பு.
குரு பகவான் 10-ம் இடத்திற்கு வருவதால் வேலையில் சில ஏற்ற இறக்கங்கள் உண்டு. வேலைப்பளு உண்டு. தன் சொந்த வீட்டில் ஆட்சி. அவரால் பெரிய அளவிற்கு துன்பங்கள் இராது.
2020 ஆம் ஆண்டு குருபெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். தொழிலில் இது நாள் வரை இருந்த இடர்பாடுகள் நீங்கும். அனுசரணையான மேலதிகாரிகள் வாய்க்கப் பெறுவர். சொந்தத் தொழிலை அளவோடு முதல் போட்டு ஆரம்பிக்கலாம். தொழிலில் அளவோடு முதலீடு போட்டு விரிவுபடுத்தலாம்.
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்ணோடு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பொருளாதாரம் சிறந்து விளங்கும். பணப்பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு வெளிநாட்டு வேலை யோகமும் உண்டு.
நீண்ட நாட்களாக வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவருக்கு வேலை கிடைக்கும். பணி நிரந்தரம் செய்ய பெறும். அதேநேரத்தில் வேலையில் கெடுபிடிகள் இருக்கும். OT பார்க்க வேண்டியதிருக்கும்.
பத்தில் சனி இருந்தபோது கடுமையாக உழைத்தவர்களுக்கு பலன் கைமேல் காத்திருக்கிறது. ஊதிய உயர்வும், பதவி உயர்வும், போனசும் கிடைக்கப்பெறும்.
குரு தன்னுடைய 5ம் பார்வையால் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிணக்குகள் நீங்கும். தாராளமான பணவரவு உண்டு. ஏழாம் பார்வையால் நான்காம் இடத்தைப் பார்ப்பதால் உடல் நலமாக இருக்கும். வீடு மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய காலகட்டங்கள் இது.
9-ஆம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரும்பிய இடத்தில் இருந்து சுபக் கடன்கள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி ஏமாற்றத்தை போக்கி, ஏற்றத்தைக் பெருக்கி இன்பமாய் வாழ வைக்கும்.
14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.
அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம். இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.
30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பண வரவு அதிகமாகும். 30. 6 .2020 வரை இந்நிலை நீடிக்கும். தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி புத்துணர்ச்சியை தந்து புது வாழ்வை தர காத்திருக்கிறது.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும்.
Comments are closed.