குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021 - கன்னி ராசி

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

கடந்த மூன்று வருடங்களாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் பெரிய அளவில் நன்மைகளை தரவில்லை. அர்த்தாஷ்டம சனி தொழிலில், வேலையில் குடும்பத்தில் பிரச்சினைகளை தந்து வந்தார். கடந்த காலங்களில் குரு பகவான் மூன்றாம் மற்றும் நான்காம் இடம் என்று சாதகமற்ற அனுகூலமற்ற இடங்களில் சஞ்சாரம் செய்து வந்ததால் கடந்த 3 வருடங்களாக கன்னி ராசிக்காரர்கள் நன்றாகவே இல்லை.

குருப்பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2020

வரக்கூடிய கார்த்திகை மாதம் 5ஆம் தேதி திருக்கணிதப்படி சரியான ஆங்கிலம் 20 . 11 . 2020 அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இது உங்களுக்கு உங்கள் ராசிக்கு 5ஆம் இடமாகும். இது பூர்வீக புண்ணியஸ்தானம் ஆகும். இது குரு பகவானுக்கு மிகவும் உகந்த இடமாகும்.

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் 5-ஆம் இடத்திற்கு வர இருப்பது உங்களுக்கு ஒரு பெரும் பாக்கியமாகும். அவர் மகரராசியில் ஐந்தாம் அதிபதியுடன், ஐந்தாம் இடத்துடன் சம்பந்தப்படுவது யோகம். அதுமட்டுமில்லாமல் அங்கு இருக்கும் குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்து விடுவார். உங்கள் ராசியை குரு பகவான் பார்த்து விடுவதால் உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்துவிடும். புத்துணர்ச்சி கிடைக்கும். சுறுசுறுப்பாக எடுத்த காரியத்தை டக், டக் என்று முடித்து விடுவீர்கள். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைக்கும் . பெரிய மகான்கள் தொடர்பு கிடைக்கும் . பணம் படைத்தவர்களின் தொடர்பு கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்

ஐந்தில் இருக்கும் குருபகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் ராசியையும் ஒருசேர பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 1,5, 9 போன்ற திரிகோணங்கள் வலுத்து இருப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக 2021 இருக்கப் போகிறது. பணம் பல வகையிலும் வந்து பையை நிரப்பும். இதுவரை வரவே வராது என்று நினைத்து,காந்தி கணக்கில் எழுதிவிட்ட பணம் கூட நீங்களே எதிர்பாராத வண்ணம் உங்களுக்கு கிடைக்கப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வரவே வராது என்று நினைத்த பணம் கூட வந்து விடும்.

குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்து விடுவதால் நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் இந்த மூன்றையும் இன்னும் ஒரு பதிமூன்று மாதத்திற்கு எதிர்பார்க்கலாம். இந்த குரு பெயர்ச்சியில் அதிகமாக நன்மையை அடையக்கூடிய ராசிகள் எதுவென்று பார்த்தால் 1)ரிஷபம் 2)கடகம்3) கன்னி4) மீனம் 5) தனுசு இந்த ராசிகள் மிகச்சிறந்த நல்ல பலனை அடைய போகும் ராசிகள் என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து கையில் பணம் தங்கும். வேலை இருந்தால் தானே கையில் பணம் வரும்? இந்த ராசி நேயர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைத்துவிடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். . வியாபாரம் விருத்தி அடையும். தொழில் சிறக்கும்.

கடந்த காலத்தில் ஏதாவது வம்பு, வழக்கு, வியாஜ்ஜியம், கோர்ட்,கேசு,போலீஸ் ஸ்டேஷன் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து நீங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க அல்லது உங்களுக்கான உரிமைகளை நீங்கள் நிலைநாட்டிட இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு உதவும்.

தசா புத்தி நன்றாக இல்லாத பட்சத்திலும், இந்த குரு பகவானின் பார்வை பலத்தால் நீங்கள் எதையும் சமாளித்துக் கொள்வீர்கள். தசாபுக்தி நன்றாக இருப்பவர்களுக்கு இடம் வாங்கலாம், சொத்து வாங்கி போடலாம், நகை எடுக்கலாம். இதுக்கெல்லாம் பணம் வேணுமே குருபகவான் 1,5,9 ஐ பார்ப்பதால் இந்த இடங்களுடன் சம்பந்தப்படுவதால்
பணம் வந்துவிடும். குருபகவான் தன காரகன் இல்லையா?? மிக முக்கிய பலனாக குருபலன் காரணமாக, திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் வெகு விமர்சையாக, ஆடம்பரமாக, அமோகமாக நடந்து முடியும்.

திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் குருவின் அருளால் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தாண்டவமாடும். மொத்தத்தில் கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் அவர் அவர்களின் வயதுக்கேற்ப நடைபெறும். விவசாயிகளுக்கு செலவுகள் குறைந்து,விளைச்சல் அதிகமாகி,விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

கன்னி ராசி அரசியல்வாதிகளுக்கு அரசியலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . மக்களிடம் நல்ல பெயர் புகழ் அந்தஸ்து வெற்றி கிடைக்கும். வெற்றி வாய்ப்பைப் பெற்று பதவிகள் கிடைக்கப் பெறுவர். இந்த ராசி மாணவர்கள் நன்கு படித்து கல்வியில் தேர்ச்சி பெறுவர். எதிர்பார்த்ததைவிட 15, 20 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கப்பெறுவர் . பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு நகை எடுக்க கூடிய யோகம் உண்டாகும்.

குருபகவான் தனது 5ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுவதால் தகப்பனாரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் தகப்பனாரின் உதவிகள், சப்போர்ட்,ஆதரவு கிடைக்கும். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல குருமார்கள் கிடைத்து விடுவார்கள். சிலருக்கு மந்திர சித்தி கிட்டும். ஆன்மீக துறையில் உள்ளவர்களுக்கு மிக மேலான அதிஅற்புதமான காலமாகும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை பார்த்து விடுவதால், முதல் வாழ்க்கையில்,முதல் திருமண வாழ்க்கை சிக்கலாகி பஞ்சாயத்து பிரச்சனை, கோர்ட், கச்சேரி என்று ஏறி விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் இனிதே நடந்து இரண்டாம் திருமண வாழ்க்கை மிக நன்றாக அமையும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைத்து வாழ்க்கை சிறக்கும். சிலருக்கு அக்கா பெண்ணை மணக்கும் வாய்ப்பு கிட்டும்.

இவர்களுக்கு ஏற்படும் நோய்கள் என்று பார்த்தால் வயிற்று பிரச்சனை ஏற்பட்டு தீரும். குருபகவானின் பார்வையால் எதையும் சமாளித்துக் கொள்ளலாம்.

தானென்ற செல்வமோடு குதிரை உண்டாம்:
தழைக்குமே குடை தர்ம தானம் ஓங்கும்;
நாமென தாய் தகப்பன்,புதல்வராலே
நண்மையுண்டாம்;
அருமையோடு பெருமையும் உண்டாகும்;

என்ற எளிமையான செய்யுள் இந்த குருபகவானின் பெயர்ச்சியை பற்றி சிலாகித்துக் கூறுகிறது.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி 2020

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவான் தொழிலில்,வேலையில், உத்தியோகத்தில் வியாபாரத்தில் தொல்லைகளை அளித்து வந்தார்.

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்துக்கு சனி, ராகு தொடர்பு இருந்து வந்தது. இது 10-ஆம் இடத்துக்கு நல்லதல்ல. திருக்கணிதப்படி. 2020, செப்டம்பர்,23 ந்தேதி முதல் ராகு பகவான் 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது சுக்கிரனின் வீடு. இங்கிருக்கும் ராகுவுக்கு குரு பார்வை வேறு கிடைக்க இருக்கிறது. . இங்கு இருக்கும் ராகுவால் உங்களுக்கு ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொதுவாகரிஷப வீட்டில் இருக்கும் ராகு உங்களை பெருமளவில் கெடுக்க மாட்டார். ஒரு கெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடியாத ஒரு அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம்தான். குறிப்பாக ராகு பகவானின் பெயர்ச்சியால் வேலை தொழில் வியாபாரம் போன்றவற்றில் இருந்த சுணக்கங்கள், முட்டுக்கட்டைகள் தடைகள் விலகும். இதுவரை கடுமையான அலைச்சலை தந்து வந்த ராகு கேதுக்கள் விலக இருப்பது பெரிய யோகம்.

அதேபோல நான்காமிடத்தில் தாயார், மனை,மாடு,கொடுக்கல் வாங்கல் போக்குவரத்து, செய்தொழில் போன்ற நான்காமிடத்தில் அமர்ந்த கேது இதுவரைக்கும் சுகத்தை கெடுத்தார். கல்வியை கெடுத்தார். தாயாரின் உடல் நிலையில் தொந்தரவுகளை தந்தார். சிலருக்கு வீடு கட்ட ஆரம்பித்து அந்த வேலை பாதியில் நின்றது. வாகனத்தில் அடிக்கடி செலவு வைத்தது.

இதெல்லாம் போன 2020 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை தான். தற்போது கேது பகவான் நான்காம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு ராசி அதிபதி புதன், பஞ்சமாதிபதி சனியின் சாரங்களின் வழியாக செல்ல இருப்பது பெரிய யோகம். பொதுவாக பாவிகள் 3, 6, 12ல் மறைந்து பலனை தர வேண்டும்.

இதுதான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது. கேது பகவானால் உங்களுக்குபல சகாயங்கள் கிடைக்கப் பெறும். வேற்று ஜாதியினர், வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பொதுவாக ஆண்டு கிரகங்களான குரு பகவான்,சனி பகவான்,கேது பகவான், ராகு பகவான் இவர்களின் சஞ்சாரம் மிகச் சிறப்பாக இருப்பதால் அடுத்து வரக்கூடிய பதிமூன்று மாதங்களும் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கப்போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த ராசியினர் மிகமிக நல்ல அனுகூலமான சாதகமான முன்னேற்றமான நல்ல பலன்களை அனுபவிப்பார்கள் என்று கூறி உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது.

Blog at WordPress.com.

%d