மகர ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

1,630

இதுவரை உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான அயன, சயன, போக ஸ்தானத்தில் சொந்த வீட்டில் ஆட்சி, மூலத்திரிகோணம் வலுப்பெற்ற குரு பகவான் அமர்ந்து சஞ்சாரம் செய்த காரணத்தினால், கடுமையான விரயங்கள் ஏற்பட்டு வரவுக்கு மேல் செலவுகள் ஏற்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கும்.. கடனை ஏற்படுத்தியிருக்கும்.

போதாக்குறைக்கு சனிபகவானும் 12ஆம் இடத்திலும், ஜென்மத்திலும் ஏழரைச் சனியாக சஞ்சாரம் செய்து வந்தார். மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி.

மற்றும் ஜென்ம சனி. இந்த ஜென்மச் சனியில் கடுமையான மன அழுத்தத்தை, மன சஞ்சலத்தை மகர ராசியினர் கடந்த 10 மாதங்களாக அவரவர்களின் வயதுக்கு தக்கவாறு அனுபவித்து வந்தார்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2020

மகர ராசியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த தொழில் ஆரம்பித்து அந்த சொந்த தொழிலில் லாபம் குறைந்த காரணத்தால், லாபமே இல்லாத காரணத்தால் கடந்த 10 மாதங்களாக
கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகினர்.

வயதான மகரராசி பெண்மணிகளின் கணவர்கள் நோய்வாய்ப்பட்டு, அந்த நோயினால் சம்பாதித்த பணமெல்லாம், கையிலிருந்த பணமெல்லாம் மருத்துவத்துக்கே செலவாகி மகர ராசியின் வயதான பெண்மணிகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். ஏழரைச்சனி ஆனது தனக்கு சுற்றி உள்ளவர்களை பாதித்து அதன் மூலம் நமக்கு பாதிப்பை தரும் என்பது நிதர்சனமான உண்மையாகும். வயதான மகர ராசி பெண்களுக்கு அவர்களுக்கே நோய் தொந்தரவுகளை தந்து அந்த நோயினால் அவர்களே கூட கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகினர்.

வாலிப வயதில், பருவ வயதில் உள்ள மகர ராசி இளைஞர்கள் காதலில் ஈடுபட்டு அந்த காதல் பிரேக் அப் ஆகி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். படித்து முடித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் கையில் காசு இல்லாமல் திண்டாடியதை கடந்த இரண்டரை ஆண்டுகளாக காண முடிந்தது.

சிலருக்கு கோர்ட் , கேசு, வம்பு , வழக்குகள் எல்லாம் தசா புத்தி சரியில்லாத அமைப்பாலும், கூடவே ஏழரை சனியும் சேர்ந்து நடந்த காரணத்தாலும் சிறை அல்லது ஜென்மம் எனும் அமைப்பு உருவாகி அவமானம்,அசிங்கத்தால் ஒரு 10க்கு 10 ரூமுக்குள் முடங்கினர். ஏழரைச்சனி+ தசாபுக்தி சரியில்லாத அமைப்பால் கடன்பட்டு ஊரை விட்டு ஓடி விடலாமா?? இருக்கலாமா? போலாமா?? என்றெல்லாம் யோசிக்க தொடங்கிவிட்டார்கள். சிலர் கடனால், கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததை நான் இங்கிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.

ஏழரைச் சனியைப் பற்றி கீழே இருக்கும் செய்யுள் என்ன சொல்லுது அப்படின்னா

“பன்னிரண்டு, ஏழு, எட்டு, ஒன்பான, பத்து ,ஐந்து, நான்கு, இரண்டு ஒன்றில் சனியனே இருந்திட்டால்
தனம், நட்டம், உயிர் சேதமாகும்.
தனிச்சிறை, மானபங்கம்,தன்னறிவாலே மோசம், மனைவிட்டு மாடிவிட்டு மறுநகரம் ஏகுவானே”

இந்த செய்யுள் மிக எளிதாக புரியும் படி உள்ளதால் இதை பெரிதாக விளக்கவில்லை. பொதுவாக இந்த ஏழரைச் சனி, ஜென்மச் சனியில் கடுமையான மன அழுத்தங்கள் இருக்கும். எந்த மாதிரியான மன அழுத்தங்கள் என்றால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னால் உத்திராடம் நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக, (பிறந்த நட்சத்திரமாக) கொண்ட மகர ராசியை சேர்ந்த , ராகுதசை நடந்து கொண்டிருந்த காரணத்தினாலும், அந்த ராகு அமாவாசை சந்திரனின் கடகத்தில் அமர்ந்து தசையை நடத்தி கொண்டிருந்த காரணத்தினாலும் , ஜென்மச் சனி நடந்த கொண்டு இருந்த காரணத்தினாலும் ஒரு பதின்பருவ பையனுக்கு மனநலம் பாதித்து மனசு டாக்டரை பார்த்து வைத்தியம் பார்க்க நேரிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.இது ஒரு சாம்பிள் அவ்வளவு தான்.

இதெல்லாம் கடந்த காலங்கள். கடந்த காலத்தில் ஏழரைச் சனியோடு, விரைய குருவும் சேர்ந்து மேற்கண்ட அனுகூலமற்ற பலன்களை இரட்டிப்பாக்கி நீங்கள் சமாளிக்கவே முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டீர்கள்.

இன்னும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே உங்களுக்கு இந்த கஷ்ட காலங்கள். வரக்கூடிய நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் ஒன்றேகால் மணி சுமாருக்கு குரு பகவான் விரய ஸ்தானமான தனுசு ராசியில் இருந்து விலகி, உங்களுடைய ஜென்ம ராசியான மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

இது ஒரு அற்புதமான அமைப்பாகும். ஏன்னா? மகர ராசியின் ராசி நாதன் சனி பகவான் ஆவார். அவர் அங்கேயே ஆட்சி பெற்று வலுவாக உள்ளார்.ராசிநாதன் ஆட்சி பெற்று வலுவாக இருப்பது ஒருவகை யோகம். மேற்கண்ட சாதகமற்ற பலன்களை நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.மேலும் வரக்கூடிய கார்த்திகை மாதம் 5-ஆம் தேதி (20.11.2020)குரு பகவான் உங்கள் ராசிநாதனான சனி பகவானுடன் இணைந்து சனியை சுபத்தன்மை படுத்துவதால் அடுத்த ஒரு பதிமூன்று மாதங்களுக்கு குருவாலும் ,சனியாலும் உங்களுக்கு அனேகம் நன்மைகள் இருக்கும்.
என்னதான் உங்கள் ராசிநாதன் ஆட்சி பலம் பெற்றாலும் அவர் சுபத்தன்மை அடைவது ரொம்ப ரொம்ப முக்கியம்.சனிபகவானுக்கு மிக அருகில் இருக்கும் குரு பகவான், சனி பகவானுடன் இணைந்து உங்கள் ராசிநாதனுடன் இணைந்து உங்கள் ராசிநாதனை சுபத்தன்மை படுத்துவதால் அடுத்து ஒரு 13 மாதங்களுக்கு உங்களுக்கு ஏழரைச் சனியின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கும்.

மேலும் இங்கிருக்கும் குருபகவான் 5 ,7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் இந்த மூன்று இடங்களும் குருவால் சுபத்தன்மை அடைவதால், குறிப்பாக ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடங்களான திரிகோணங்கள் சுபத்தன்மை அடைவதால் உங்களுக்கு தெய்வபலம் மிகுந்திருக்கும். உங்களுக்கு ஒரு தெய்வ பாதுகாப்பு கிடைத்துவிடும். இந்த தெய்வ பாதுகாப்பு மூலமாக நீங்கள் ஏழரைச்சனியை சமாளித்து விடுவீர்கள்.

குருபகவான் ராசியில் அமர்ந்து 5,7, 9 ம் இடங்களை பார்ப்பதால் புத்திர வகையில் உதவி,புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம், குழந்தைகள் மூலமாக மேன்மை, குழந்தைகள் மூலம் ஆதாயம், நண்பர்கள் மூலம் ஆதாயம், அனுகூலம், கோர்ட் கேஸ் வழக்குகளில் வெற்றி, திருமணம் போன்ற சுப காரியங்கள், கணவன் மனைவி அன்னியோன்னியம், பெரிய மனிதர்கள் தொடர்பு, பேங்க் லோன் கிடைத்து தொழில் வளர்ச்சி மேலோங்குதல், பூர்விக சொத்தில் உள்ள வில்லங்கங்கள் மற்றும் வழக்குகள் விலகுதல், மகான்கள் குருமார்கள் ஆசி கிடைக்க பெறுதல் போன்ற நல்ல பலன்களை அடுத்த பதின்மூன்று மாதங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உங்கள் ராசிநாதன் சுபத்தன்மை அடைவதால் உங்களுக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பு, மரியாதை ,அந்தஸ்து கௌரவம் அனைத்தும் கிடைத்துவிடும்.

குருபகவான் தான் இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்தை பலப்படுத்துவார் என்பதாலும்” குரு பார்க்க கோடி நன்மை “என்பதாலும் குருவின் பார்வையால் அடுத்த ஒரு பதின் மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு மிக மேன்மையான நல்ல பலன்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை சனிபகவானின் 3, 7, 10-ஆம் பார்வையால் உங்களுக்கு பெரும் இன்னல்கள், தொல்லைகள் ஏற்பட்டிருக்கும்.தற்போது குருபகவான் சனியுடன் இணைந்து சனி சுபத்தன்மை படுவதால் அடுத்த பதின்மூன்று மாதங்களுக்கு சனியின் பார்வையால் உங்களுக்கு நன்மைகள் இருக்கும். கெடுதல்கள் இருக்காது.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2020

ராகு பகவான் உங்கள் மகர ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு, 23 ந்தேதி , செப்டம்பர் மாதம், 2020 ஆம் ஆண்டு முதல் மிதுன ராசியில் இருந்து,ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி சஞ்சாரம் செய்து வருகிறார். இது ராகு பகவானுக்கு உகந்த இடமாகும்.வரக்கூடிய நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் ராகு பகவானுக்கு குருபகவானின் பொன்னொளி பார்வை, அருள் பார்வை கிடைக்க இருப்பதால் உங்கள் ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் மிகச்சிறந்த நல்ல பலன்களை தரும்.

இதுவரை உங்கள் சொல்படி கேட்காத உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். குழந்தைகளின் உதவி ,மேன்மை அவர்களின் மூலம் ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும்.இதுவரை ஆறாம் இடத்தில் அமர்ந்து, ஆட்சி பெற்ற வலுத்த குரு பார்வையை பெற்று கடுமையான கடன், நோய், வம்பு வழக்குகளை தந்து வந்த ராகு பகவான் , 5-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகியிருப்பது முன்பு இருந்த ஆறாம் இடத்தை காட்டிலும் ஐந்தாமிடம் நல்ல இடம்தான் என்பதில் சந்தேகமேயில்லை.

கேது பகவான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்தார். இவர் கடந்த 23 செப்டம்பர் மாதம் முதல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு ஷிப்ட் ஆகிவிட்டார். இந்த இடம் கேது பகவானுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும். 3 ,6, 10 ,11 இந்த மூன்றும் உபஜெய ஸ்தானங்களாகும். இந்த உபஜெய ஸ்தானங்களில் பாவிகள் இருப்பது திரிகோணங்களில் சுபக்கிரகங்கள் இருந்தால் என்ன மாதிரியான நல்ல பலன்கள் இருக்குமோ அந்த மாதிரியான நல்ல பலன்களை இந்த உபஜெய ஸ்தானங்களில் இருக்கும் பாவ கிரகங்கள் தருவார்கள்.

எனவே கேது பகவானால் உங்களுக்கு வெற்றிகள் இருக்கும். உபஜெய ஸ்தானம் என்பது வெற்றி ஸ்தானம் ஆகும். எடுத்த காரியத்தை உங்களால் சீக்கிரம் முடிக்க முடியும்.வேற்று ஜாதி வேற்று மதம் ,வேற்று நாட்டினர், வேற்று மொழி பேசுபவர்கள் இவர்களால் உங்களுக்கு நன்மைகள், ஆதாயங்கள் , லாபங்கள் நிச்சயமாக இருக்கும்.

பொதுவாக அடுத்த பதிமூன்று மாதங்களுக்கு குரு பகவானின் பார்வை பலத்தாலும், லாப கேதுவாலும், உங்கள் ராசிநாதனின் பலத்தாலும் எதையும் சமாளித்துக் கொள்வீர்கள். அடுத்த பதின்மூன்று மாதங்களுக்கு சுபவிரயங்கள் இருக்கும். வீடு கட்டலாம். இடம் வாங்கிப் போடலாம். வரும் செலவுகளை ,சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளலாம். அடுத்த பதிமூன்று மாதங்களுக்கு ஏழரைச்சனி போலவே தெரியாது. அடுத்த வருடமும் உங்களுக்கு குரு பலம் இருக்கும் என்பதால் எளிதாக ஏழரைச்சனியில் ஜென்ம சனியை கடந்து சென்று விடுவீர்கள். பொதுவாக உங்கள் ராசிநாதன் சனிபகவான் என்பதால் உங்களுக்கு சனிபகவானால் பெரிய கெடுதல்கள் எதுவும் நடந்து விடப்போவது இல்லை. விருச்சிக,தனுசு ராசிக்காரர்களை போல மகர ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி யின் பாதிப்பு இருக்காது.சில வாழ்க்கை பாடங்கள், அனுபவங்கள் மட்டுமே ஏழரைச்சனியில் இருக்கும்.

40 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு பொங்கு சனி என்பதால் அவர்களுக்கு இந்த ஏழரைச்சனி பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.பொங்கு சனி நடப்பவர்களுக்கு கூடுதல் நன்மைகள், நற்பலன்கள் கூட ஏற்படுவதுமுண்டு. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இந்த ராசிக்கார பெண்கள் அதிகம் விட்டு கொடுத்து செல்ல குடும்ப ஒற்றுமை ஏற்படும். இந்த ராசி அரசியல் வாதிகள் கொஞ்ச காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. இந்த ராசி அரசியல் வாதிகள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள்.விவசாயிகள் அதிக செலவு(முட்டுவலி) இல்லாத பயிர்களை பயிரிடுவது ரொம்ப ரொம்ப நல்லது . இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் லாபம் குறைந்து காணப்படும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More