மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

2,036

சனி, ராகு, கேது போன்ற ஆண்டு கிரகங்களின் பெயர்ச்சி பலனையும் உள்ளடக்கிய பதிவு நேர்மையான குணத்தை கொண்ட,, யாரையும் கெடுக்காத, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய மீன ராசி நேயர்களே, கழுவுற மீனில் நழுவற மீன் என்று சொல்லப்படக்கூடிய மீன ராசியில் பிறந்த நீங்கள் எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளாமல் திறமையாக சாதுரியமாக தப்பித்துக் கொள்வீர்கள்.

உங்களுடைய ராசிநாதன் பொதுச்சுபர் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். அவருடைய குரு பெயர்ச்சி மீன் ராசியினருக்கு எப்படி இருக்கப் போகிறது என்று நாம் காணும் போது கடந்த 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி முதல் சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து 11 ம் இடத்துக்கு மாறி அற்புதமாக சஞ்சாரம் செய்து வருகிறார். இதுவரை உங்கள் ராசிக்கு சனி பகவான் 11-ஆம் இடத்தில் லாபஸ்தானத்தில் மிக நல்ல முறையில் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த இடம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த இடம் ஆகும். இந்த ராசியில் இருக்கும் நட்சத்திரங்களும் மீன ராசிக்கு யோகத்தைச் செய்யும் யோகாதிபதிகளின் சாரங்களாகும்.

இவ்வாறு 11-ஆம் இடத்தில் சனி நல்ல முறையில் சஞ்சாரம் செய்து வரும் அதே வேளையில் லாபஸ்தானத்தில் வரும் 2020 நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவானும் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது மீன ராசிக்கு ஒரு பொற்காலமாகும். செய்யுள் என்ன சொல்லுது அப்படின்னா?

“ஆறு பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்குமாகில் கூறு பொன் பொருள் மிகஉண்டாம்;
குறைவில்லா செல்வமுண்டாகும்;
ஏறு பல்லக்குமுண்டாம்;
இடம் பொருளே வலுவுண்டாம்;
காறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”

என்ற செய்யுளின் படி சனிபகவான் பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது நல்ல தனவரவுகள் இருக்கும் . பொன் பொருள் சேர்க்கை எல்லாம் மிக உண்டாகும். வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும் . நகை எடுக்க கூடிய யோகம் உண்டாகும். உபரி பணமிச்சமாகி சேமிக்க முடியும். வீடுவாசல் கட்டி நன்றாக பிழைக்க முடியும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2020

“மன்னவன் பதினொன்றில்
ஒரு மன்னர் சேவை
வாகனங்கள் உண்டாகும். அன்றும் பொன் பொருள் சேரும் தாயே”

என்ற செய்யும் படி குரு பகவான் 11-ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் போது அரச சேவை உண்டாகும். பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். அரசு உதவி கிடைக்கும .பேங்க்ல லோன் கேட்டால் லோன் கிடைத்து விடும். பணம் படைத்தவர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், குரு நிலையில் உள்ளவர்களின் தொடர்பு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

வருமானம் பல வகையில் வந்து பையை நிரப்பும். வருமானம் அதிகரித்து செலவுகள் குறையும்.பதினொன்றாம் இடம் சுபத்தன்மை அடைவதால் முதல் வாழ்க்கை சரியாக அமையாமல் முதல் வாழ்க்கையில் தோல்வி கண்டு, கோர்ட்டில் முறையாக விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்துக் கொண்டு இருக்கும் மீன ராசி நேயர்களுக்கு மறுமணம் இனிதே நடைபெற்று இரண்டாம் வாழ்க்கை (second Life) நன்றாக இருக்கும்.

வரவே வராது என்று நினைத்த பணம் எல்லாம் வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். பழைய பாக்கிகள், நிலுவையில் உள்ள பணம் வசூலாகும்.

பதினொன்றாம் இடம் கடன் நிவர்த்தி ஸ்தானம் என்பதால் கடன் தீரும். பதினொன்றாம் இடம் நோய் நிவர்த்தி ஸ்தானம் என்பதால் பதினொன்றாம் இடத்தில் இருக்கும் குருவும் சனியும் நோயை தீர்ப்பார்கள். 11ஆம் இடம் வியாஜ்ஜிய நிவர்த்தி ஸ்தானம் என்பதால் இதுவரை பலகாலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உங்களுடைய உரிமைகளை, உங்களுக்கான நியாயத்தை பெற முடியும். நியாயம் கிடைக்கும்.

குரு பகவான் 11-ஆம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரை புத்திரபாக்கியம் இல்லாத மீன ராசி நேயர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள், தொல்லைகள், கஷ்டங்கள் ,வாய்க்கால் தகராறு , வரப்பு தகராறு, பாதை தகராறு அனைத்தும் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த பாகப்பிரிவினை நடந்து உங்களுக்கான சொத்தின் பாகம் உங்களுக்கு கிடைத்துவிடும். குலதெய்வ வழிபாடு, குரு நிலையில் உள்ள பெரியோர்கள், ஞானிகள் சந்திப்பு நிகழும்.

குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் ராசிக்கு மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். நீங்கள் தைரியத்துடன், உற்சாகத்துடன் , சுறுசுறுப்பாக இருக்க மூன்றாமிடத்தை பார்த்த குருபார்வை உங்களுக்கு உதவி செய்யும். பேங்க்ல அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியும். காரிய வெற்றி ஏற்படும்.பல சகாயங்களை குரு பார்வை பெற்று தரும்.

குருபகவான் தனது 9ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் இனிதே நடந்துவிடும். திருமணம் ஆன தம்பதியர் தங்களுக்குள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள். கூட்டு தொழில் செய்யலாம். புதிய முயற்சிகளை எடுக்கலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய கிளைகளை தொடங்கலாம். முக்கியமாக காதல் வெற்றியை தரும். நண்பர்கள், காதலி, மனைவி இவர்களின் மூலமாக ஆதாயங்கள் இருக்கும். பிடித்த காதலன், பிடித்த காதலி மனைவியாக வருவாள்.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் மீன ராசி 2020

ராகு பகவான் கடந்த 2020 செப்டம்பர் மாதம் 23 ந்தேதி முதல் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருவதாலும் அவருக்கு குருபகவானின் பார்வையும் இருப்பதால் அந்நிய மனிதர்கள், வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், வேற்று மொழி பேசுபவர்கள் இவர்களின் உதவி கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். கேதுபகவானும் அவருக்கு பிடித்த விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்வதும் மேற்கண்ட நல்ல பலன்களை அதிகரிக்கும்.

மொத்தத்தில் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் மிக அற்புதமாக இருப்பதால் மீன் ராசியினருக்கு இது ஒரு பொற்காலம் ஆகும் . இன்னும் மூன்று வருடங்களுக்கு நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது . எனவே “காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் “என்ற பழமொழிக்கேற்ப இன்னும் மூன்று வருடங்களில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். நேரம் நன்றாக இருக்கும் போதே சேமித்து வைத்துக்கொண்டால் நேரம் சரியில்லாத போது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்டு கிரகங்களில் அற்புதமான சஞ்சாரத்தால் குரு பலத்தால் , சனி பலத்தால் , ராகு பலத்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். வேலை கிடைத்து கையில் பணம் புரளும். ரோட்டில போறவன் கூட ஏதாவது உதவி செய்து விட்டு போவான். ஏன்னா உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நேரம் நன்றாக உள்ளபோது என்ன செய்தாலும் ஜெயிக்கும். தொட்டது துலங்கும். அஷ்டலட்சுமி யோகம் கிட்டும்.

வியாபாரிகளுக்கு பேங்க் லோன் கிடைத்து தொழில் வளர்ச்சி மேலோங்கும். வியாபாரம் தழைக்கும். நல்ல விசுவாசமான வேலைக்காரர்கள் இப்போது உங்களுக்கு கிடைப்பார்கள். தொழிலில் லாபம் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பணி நிரந்தரம் , போனஸ் கிடைக்கும்.

பெண்களுக்கு நகை எடுக்கும் யோகம் உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை, அந்நியோன்யம் சிறப்பாக இருக்கும்.
இந்த ராசி பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள்.

அரசியல்வாதிகள் வெற்றி மேல் வெற்றியை குவிப்பார்கள்.வட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் ஆவார். எம்.எல் ஏவாக இருந்தவருக்கு மந்திரி பதவி கிடைக்கும். இதற்கு முன் மந்திரியாக இருந்தவர் முக்கிய மந்திரி ஆவார். இந்த ராசி அரசியல் வாதிகள் மக்களிடையே நன்மதிப்பை பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு விவசாயத்தில் லாபம் மிகுந்து காணப்படும். தண்ணீர் வசதி நன்றாக இருக்கும். நீங்கள் செய்யும் பயிர் நன்கு விளைந்து கூடுதல் விலைக்கு விற்கும். பதினொன்றாம் இடத்து சனி தோப்பு துறவுகளை உண்டு பண்ணுவார். நீரோடும் பூமி ,வயல் வாய்க்கால் வாங்கக்கூடிய யோகம் சிலருக்கு உண்டு. இந்த ராசி விவசாயிகள் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வற்றாத தண்ணீர் கிடைத்துவிடும். கிணறு , போர்வெல்லில் நன்றாக தண்ணீர் வரும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More