மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது மிதுன ராசிக்கு கண்டிப்பாக பொருந்தும்.
நாய் விற்ற காசு குறைக்காது ! பூ விற்ற காசுமணக்காது ! கருவாடு விற்ற காசு நாறாது என்பது மிதுன ராசிக்காரர்களின் கொள்கை . இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இப்படித்தான் பிழைக்கனும் என்று இல்லாமல் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற கொள்கை உடையவர்கள். மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். புதனின் குணங்களை பிரதிபலிக்கும் இவர்கள் கொஞ்சம் கபட எண்ணம் கொண்டவர்கள் சிரித்து பேசியே எல்லோரையும் மயங்கி விடுவார்கள் இவர்களுக்கு பேச்சுதான் முக்கிய மூலதனம். இது இந்த ராசியை பற்றிய பொதுவான குணங்கள். சுய ஜாதகத்தில் லக்னத்தை பார்த்த கிரகங்கள் மற்றும்இருக்கும் கிரகங்களுக்கு ஏற்பகுணங்கள் வேறுபடும் என்பதை நேயர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2020
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குருபகவான் உங்கள் ராசியை ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று வலுவாக பார்த்ததின் காரணமாக உங்களுக்கு வரக்கூடிய அத்தனை தொல்லைகளையும் கஷ்டங்களையும் குருபகவான் விலக்கிக் கொண்டிருந்தார்.
குருபதி ஏழில் நிற்க, புனிதன், கீர்த்தி என்று சொல்லு. பேர், புகழை எல்லாம் கொடுத்திருக்கும். உங்களுக்கு 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து திருக்கணிதப்படி அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குரு பகவானின் பார்வை பலத்தால் அஷ்டமச் சனியின் பாதிப்பை உங்களால் உணர முடியவில்லை.
இதுவரை ஏழாம் ராசியில், தனுசு ராசியில் இருந்து சஞ்சாரம் செய்துகொண்டு இருந்த குரு பகவான் தற்போது மகர ராசிக்கு எட்டாவது ராசிக்கு, வரக்கூடிய கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி, சரியான ஆங்கிலம் 20. 11. 2020 அன்று பெயர்ச்சி ஆகிறார். கடந்த சில மாதங்களாக மகர ராசியில் சனி சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.சனியோடு குருபகவான் சேர்ந்து அஷ்டம குருவாகவும், அஷ்டம சனியாகவும் இணைந்து உங்களுக்கு பலன் தர இருக்கிறார்கள்.
வருஷாதி நூல் என்ன சொல்லுதுன்னா
“பத்துடன், மூன்று, நான்கு , பன்னிரண்டு,எட்டோடு உறவு
மத்தமம் ஆறில் ஒன்றில் மன்னவன் இருந்த காலை, நித்தமும் அலைச்சல் கேடும்
நிட்டூர வாதம் பித்தம், பெற்றவன் கேடும், பிறப்பு பிள்ளை, பெண்சாதி பகையுமாவார்”
என்றும் மற்றுமொரு எளிய செய்யுள்,
“கண்டங்கள் நான்கு எட்டில் கருதியே சனி சேய் நிற்க, தெண்டங்கள் மிகவுண்டாம்
திரவியங்கள் நாசமாகும், கொண்டதோர் குடும்பம் வேறாகும்: குனிந்திருந்த செட்டு நஷ்டம்,பண்டுள நாடுவிட்டு நகரம் விட்டு மறுநகரம் ஏகுவானே”
இவ்வாறு அஷ்டமசனி, மற்றும் அஷ்டமச்சனி யின் பாதிப்பை விவரிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராசியில் ராகு பகவான் ஜென்ம ராகுவாக வீற்றிருந்து, அவரை சனி பார்த்த காரணத்தால் மிதுன ராசிக்காரர்கள் “குடத்துக்குள் வைத்த விளக்கு போல” நீங்கள் எவ்வளவுதான் திறமைகள் வைத்திருந்தாலும் உங்களுடைய திறமைகள் வெளி உலகத்துக்கு தெரியாமல் ,உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காமல், உங்களை விட திறமை குறைந்தவர்கள் உங்களுக்கு மேல் புரமோசன், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று மேலே மேலே போகும் போது இந்த வேலையை விட்டுவிடலாமா அல்லது வேறு கம்பெனிக்கு மாறிவிடலாமா என்றெல்லாம் உங்களை யோசிக்கத் தோன்றியது மேற்படியான கிரக அமைப்பு.
எட்டாம் இடத்தில் அஷ்டம குருவாக, அஷ்டமச் சனியாக சனியும் , குருவும் சஞ்சாரம் செய்யும் இந்த அமைப்பால் இன்னும் இரண்டு வருட காலத்திற்கு உங்களுக்கு நல்ல பலன் கூறுவதற்கு இல்லை. அதே நேரத்தில் சுய ஜாதகத்தில் வெளிநாட்டு வாய்ப்புள்ளவர்கள் எட்டாம் அதிபதி, 12ஆம் வீட்டு அதிபதி சுபத்தன்மை அடைந்து சர ராசியில் இருந்து தசை நடத்தும்போது கோட்சாரத்தில் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி களான குருவும் சனியும் எட்டாம் இடத்தில் வரும் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் சுபத்தன்மையோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால் சுய ஜாதகம் சப்போர்ட் பண்ணும் ஜாதகருக்கு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தால் ஃபாரின் செல்லக்கூடிய அமைப்புகள் உண்டாகும். வெளிநாட்டில்,வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும்.
சுய ஜாதகத்தில் 6 ,8, 12ஆம் அதிபதிகள் பாவ தன்மை அடைந்து தசையை நடத்தும்போது, இந்த அஷ்டமச்சனி ஆனது உங்களுக்கு தண்டச் செலவுகளை தரும். 50 வயது மேற்பட்டவர்களுக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 25 வயது முதல் 35 வயது உள்ளவர்களுக்கு திருமணம் கடும் முயற்சியின் பேரில் நடக்கும். பள்ளி குழந்தைகள் செல்போன், டிவி விளையாட்டு போன்றவற்றை கொஞ்ச காலம் ஒதுக்கிவிட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் புகழையும் பெயரையும் காப்பாற்ற அரும்பாடு படவேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் வெற்றி வாய்ப்பை இழப்பார்கள். விவசாயிகளுக்கு லாபம் குறைவாக இருக்கும்.
சொந்த தொழில் இந்த அஷ்டமச் சனியில் ஆரம்பிக்கக் கூடாது. அகலக்கால் வைக்க கூடாது. பேராசைப் படக் கூடாது. ஒருவர் 20 வருடமாக கையூட்டு பெற்றுக் கொண்டு வந்திருப்பார். அப்பவல்லாம் மாட்டியிருக்க மாட்டார். ஆனால் இந்த அஷ்டம சனியில் கையும் களவுமாக சிக்கிக் கொள்வார். போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டு ,கேசு என்று பெரிய அவமானமாகி விடும். அஷ்டமச்சனி அவமானம் , அசிங்கங்களை தருவார்.அஷ்டமச் சனி நடக்கும் போது சந்திர தசை சந்திர புத்தி நடந்தால் அதிகமான பொருள் இழப்புக்கள் இருக்கும். இது ஒரு பனிஷ்மெண்ட் காலமாகும். சிலர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பார்கள்.அஷ்டமச் சனி முடிந்த பிறகு குற்றமற்றவர் என்று வெளியுலகிற்கு நிரூபித்து அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவார். செய்தொழிலில் பிரச்சினை இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் அடிக்கடி லீவு போடவேண்டிய தேவை வரும்.
என்னுடைய கர்மாதிபதி தசையில் அஷ்டமச் சனியில் நான் எனது தந்தையை இழந்தேன். ( கர்மம் பண்ற அமைப்பு. ) தாயார் பகை ஏற்பட்டது. இடமாற்றம் ஏற்பட்டது. எனக்கு என் பையனுக்கு, மனைவிக்கு அதிகமான மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்பட்டு மன அழுத்தத்தை தந்தது. பைக்கில் இருந்து இரண்டு முறை கீழே விழுந்தேன். இதெல்லாம் நடந்து முடிந்து தற்போது வாழ்க்கை நல்லபடியாக இறைவன் அருளால் சென்று கொண்டிருக்கிறது. ரிஷப ராசிக்காரர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்பதை இங்கேயிருந்து(ஜோதிடராக) பார்த்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் (மிதுன ராசி)அஷ்டமச்சனியை பார்த்து அச்சப்பட தேவையில்லை. தசாபுக்தி சரியில்லாதவர்களுக்கே இந்த மாதிரியான சாதகமற்ற பலன்கள் நடக்கும். தசாபுத்தி நன்றாக இருந்தாலோ, சுய ஜாதகத்தில் சனி அதிகமான சுபத்தன்மை அடைந்து இருந்தாலோ, சனி உபஜெய ஸ்தானங்களில் அமர்ந்து இருந்தாலோ , குருபார்வையில் இருந்தாலோ உங்களுக்கு அஷ்டமச்சனி யின் பாதிப்பு வெகுவாக குறைந்து விடும். வாழ்க்கையை பற்றிய சில அனுபவ பாடங்களை இந்த அஷ்டமசனி யில் தந்து பணத்தின் அருமையை புரிய வைப்பார்.
இந்த காலகட்டத்தில் எட்டாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் இரண்டாம் இடத்தை பார்த்து குடும்பத்தில் வம்பு வழக்கு, கலகத்தை தந்தாலும் குருவும் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பம் பிரியாது. குருபகவான் இரண்டை பார்த்து விடுவதால் வருமானத்தை கொடுத்து செலவுகளையும் தருவார். இரண்டை பார்க்கக் கூடிய குருபகவான் பன்னிரண்டாம் இடத்தையும் பார்த்து விடுவதால் வருமானமும் வரும் . செலவுகளும் வரும்.
குருவின் பார்வையால் சிலருக்கு சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் இருந்தாலும் அஷ்டமச் சனியால், அஷ்டம குருவால் வீட்டு வேலை தடைப்பட்டு தடைப்பட்டு ஒருவழியாக முடித்து விடுவீர்கள்.
கடன்பட்டு வீடு கட்டுவீர்கள். கடன் வாங்கி பைக், கார் போன்றவற்றை வாங்குவீர்கள். சிம்பிளாக ஒரு 10 லட்சம் ரூபாய்க்கு வீடுகட்டலாம் என்று ஆரம்பித்து 50லட்சத்தில் வந்து முடியும். வீடு பிரம்மாண்டமாக கட்டி முடிப்பீர்கள். ஆனால் கடன் பிரச்சினை வாட்டும்.
பொதுவாக குருபகவான் சனியுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வெகுவாக குறையும். அடுத்த வருடம் 18.11.2021 முதல் குரு 9-ஆம் இடத்துக்கு சென்று விடுவார். எனவே குரு பலம் கிடைத்து விடும். எனவே அஷ்டமசனி யை நீங்கள் மிக எளிதாக கடந்து விடமுடியும்.
அடுத்து வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மற்ற ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி செய்த கெடுதல்களை போல உங்களுக்கு இருக்காது.
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி 2020
பொதுவாக ராகு கேதுக்கள் 6, 12 ஆம் இடத்தில் நல்ல பலன்களை வாரி வழங்குவார்கள்.அதுவும் குறிப்பாக ஆறாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் அந்த இடத்தில் இருக்கும் கடன் நோய்,
எதிரி, வம்பு , வழக்கு இவற்றையெல்லாம் வேறோடு அழிப்பார். நாள்பட்ட வியாதிகள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். வீடு வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
பொதுவாகவே கொடியவர்கள் மூன்று,ஆறு பன்னிரண்டில் மறைந்து பலனை தர வேண்டும். கொடியபாவிகள் தான் இருக்கும் இடத்தை கெடுப்பார்கள்
என்ற அடிப்படையில் கடன், நோய் ,எதிரி வம்பு, வழக்கு ,அவமானம் ,அசிங்கம், கேவலம் , விபத்து, விரயங்கள், தண்டச் செலவுகள் இவற்றை எல்லாம் 6,12ம் இடத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் கெடுப்பார்கள். அப்படினா இவை எல்லாம் இருக்காது என்று அர்த்தம்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நல்லதும் கெட்டதும் இரண்டும் கலந்து நடக்கும். 50/50. மிதுன ராசிக்கு ஒரு 50மதிப்பெண்கள் தரலாம்.
முடிவாக இந்த காலகட்டத்தில் பேராசை படாமல், அகலக்கால் வைக்காமல், யார் என்ன சொன்னாலும் இந்த காதில வாங்கி இந்த காதில் விட்டுவிட்டு. வாயை ஊமையாக வைத்து கொண்டு. தொழிலில் அதிகமான மூலதனம் போடாமலும்,பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருந்தாலும், யாருக்கும் ஜாமீன் , ஸ்யூரிட்டி போடாமலும், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதாலும், கையூட்டு பெறாமல் நேர்மையாக விதிகளுக்கு உட்பட்டு, சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வந்தால் அஷ்டம சனி , அஷ்டம குரு உங்களை எதுவும் செய்யாது என்று கூறி இதற்கு
பரிகாரமாக, உங்கள் ராசிநாதன் புதனின் அதி தேவதையான மகா விஷ்ணுவை வணங்கி வருவது , ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து 2 நெய் விளக்கு போட்டு வருவது,சனிக் கிழமை சனிக்கிழமை பைரவரை சென்று பார்த்துவிட்டு வருவது ,அவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து 2 நெய் விளக்கு போட்டு வருவது மிதுன ராசியினருக்கு பரிகாரமாகும்.
Comments are closed.