ரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

1,893

அகழ்வாரை தாங்கும் நிலத்தைப் போன்ற பொறுமையை உடைய ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியின் சின்னம் காளை மாடு. சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை தன் தோள்மேல் சுமக்கும் ரிஷப ராசிக்காரர்கள் தன் தாயின் மீது அதீத பாசம் கொண்டவர்கள். காரணம் மாத்ரு காரகன் என்று சொல்லப்படக்கூடிய மனசுக்காரன் என்று சொல்லப்படக்கூடிய சந்திரன் உச்சம் அடையக்கூடிய ராசி இது என்பதால் இது ஒரு தனி சிறப்பை அடைகிறது. ஒளிகிரகமான ,கண்ணால் காணக்கூடிய ,கண்கண்ட கிரகமான சந்திரன் உச்சம் அடையக்கூடிய ராசியில் பிறந்த நீங்கள் ஏதாவது ஒரு கலையில் வல்லவர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2020

இதுவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச்சனி என்னும் கோட்சாரம் சரியில்லாத காலகட்டத்தில், நீங்கள் அனேகம் துன்பங்களை அனுபவித்து வந்தீர்கள், ஏழரை வருடங்கள் ஏழரைச்சனியில் படவேண்டிய கஷ்டங்களை அஷ்டமச்சனியானது உங்களுக்கு இரண்டரை ஆண்டுகளிலேயே கொடுத்துவிட்டது.
அஷ்டமச்சனி ஒருபக்கம் என்றாலும், அஷ்டம குரு இன்னொருபக்கம் சேர்ந்துகொண்டு, மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதைப்போல இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து வந்தீர்கள்.

“கண்டங்கள் நான்கு, எட்டில் கருதியே சனி, சேய் நிற்க தெண்டங்கள் மிகவுண்டாகும், திரவியங்கள் நாசமாகும். கொண்டதோர் குடும்பம் வேறாகும். குறித்திடும் செட்டு நஷ்டம்.
பண்டுள நாடுவிட்டு நகரம் விட்டு மறுநகரம் ஏகுவானே”

என்ற செய்யுளின் படி கண்டம் என்று சொல்லப்படக்கூடிய எட்டாம் இடத்தில் அஷ்டம சனியாகவும் ,அஷ்டம குருவாகவும், சனியும், குருவும் அமர்ந்து உங்களுக்கு தண்டச் செலவுகள் எனும் மருத்துவ செலவுகளையும் அதன் மூலமாக பற்றாக்குறையை ஏற்படுத்தி அதன் மூலமாக கடனையும், அந்தக் கடனுக்கு சம்பாதிக்கும் காசை எல்லாம் வட்டி கட்டியே நொந்து நூடுல்ஸ் ஆன நேரத்தில் ,அரசு வகையில் பெனால்டி என்று சொல்லப்படும் அபராத தொகையும் சேர்த்து கட்டியது கொடுமையிலும் கொடுமை.

சிலருக்கோ அஷ்டமச்சனி வந்தவுடன் வேலை பறிபோய் விட்டது. இன்னும் சிலருக்கு கொரானாவினால் வெளிநாட்டில் செய்தவந்த வேலை போய் சொந்த ஊர் திரும்ப வேண்டிய நிலை.
வெளிநாடு செல்ல வாங்கிய கடன் ஒருபக்கம், வேலை போய்விட்டதே என்ற கவலை ஒருபக்கம் என கடுமையான மனக்குழப்பத்தை இந்த அஷ்டமசனி மற்றும் அஷ்டம குரு இருவரும் ஏற்படுத்தி தந்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்னும் சிலருக்கோ கடுமையான உறவுகள் பகை. மனைவி பகை, தாய் தந்தை பகை , பிறப்பு பிள்ளை பகை என்று உறவுகள் பிரிவை ஏற்படுத்தி கடும் மனஉளைச்சலை இந்த அஷ்டமசனி மற்றும் அஷ்டம குரு இருவரும் தந்தனர். பொருளாதாரம் அல்லது குடும்பம் இரண்டில் ஒன்று கடுமையாக பாதித்தது.

இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம குருவாக இருந்த குருபகவான் இந்த வருடம் (2020)நவம்பர் மாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒன்றே கால் மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். இது ஒன்பதாம் இடம் ஆகும். குருபகவான் கோச்சாரத்தில் ஒன்பதாம் இடத்திற்கு வருவதை சாஸ்திரங்கள் ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்று சிலாகித்துக் கூறும்.

ஒரு சுபகிரகம் திரிகோணத்தில் இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்கும் என்ற விதியின்படி ஒன்பதாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்த்து உங்களுக்கு வரக்கூடிய அத்துனை பிரச்சினைகளையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் விலக்குகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொல்லாடல் சாஸ்திரத்தில் உண்டு.நம் முன்னோர்கள் மற்றும் ஞானிகள் இதை தங்களது வாழ்க்கையில், அனுபவத்தில் நன்கு ஆராய்ந்து, தெளிந்து சொல்லி இருக்கின்றனர்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்துவிடும். புத்துணர்ச்சி கிடைத்துவிடும். இதுவரை இருந்த நோய் தொந்தரவுகள் அகலும். சுறுசுறுப்பாக நீங்கள் செயல்பட முடியும்.‌

முக்கியமாக பண வரவுகள் மிக நன்றாக இருக்கும். ஏன்னா குருபகவான் தன காரகன் இல்லையா?

மேற்படியான குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு அல்லாமல் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால், தைரியத்தையும், வீரியத்தை மும் அளிப்பதோடு அல்லாமல் பல சகாயங்களையும் அளிக்க தவற மாட்டார். இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவும், நட்பும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

பொதுவாக ராசிக்கு 2 ,5, 7, 9 ,11 போன்ற இடங்களில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் போது உங்களுக்கு குருபலம் கிடைக்கப் பெறும். அந்த குரு பலத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு ஆன்றோர்களும், உறவுகளும், நட்புகளும் போற்ற திருமணம் வெகு விமர்சியாக ஆடம்பரமாக அமோகமாக நடந்து முடியும். குரு பலம் இருக்கும் போது நடக்கக்கூடிய திருமணம் ஆனது வெகு ஈஸி யாக, நல்ல முறையில் இனிதே நடந்தேறும். குரு பலம் என்பது ஒரு தெய்வ பாதுகாப்பாகும்.

இந்த குரு பெயர்ச்சியில் அதிக நன்மைகளை அடையக்கூடிய ராசிகள் எது எது என்று பார்த்தால் ரிஷப ராசி, கடக ராசி, கன்னி ராசி ஆகிய மூன்று ராசிகளும் நல்ல பலன்களை அடைய போகும் ராசிகள் ஆகும். ஏன்னா? குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி, தனது ஐந்தாம் பார்வையாக ரிஷப ராசியை பார்த்து, தனது நேர் பார்வையாக ஏழாம் பார்வையால் கடக ராசியை பார்த்து, தனது ஒன்பதாம் பார்வையாக கன்னிராசியை பார்த்துவிடுவார்.

குருபகவான் ரிஷப ராசிக்கு 5-ஆம் இடமான கன்னி ராசியை பார்ப்பதால் ரிஷப ராசிக்கு குரு பலம் இருப்பதால் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் இனிதே கிடைத்து ,வீட்டில் மழலைச் செல்வம் கிடைக்க இந்த ஒன்பதாம் இடத்து குரு பகவான் உங்களுக்கு அருள் புரிவார்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். உங்கள் கையில் பணம் புரளும். சேமிக்க முடியும். கடனை அடைக்க முடியும். அரசு உதவி, வங்கி கடன் மூலம் தொழில் வளர்ச்சி பெறும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு பெரிய வரமாகும்.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2020

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம் மற்றும் எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்துவந்த ராகு கேதுக்கள் ,உங்களுக்கு சர்ப்ப தோஷத்தையும் ,எல்லாவிதமான முன்னேற்ற தடைகளையும், எடுத்த காரியத்தில் இழுபறிகளையும், தேவையற்ற சங்கடங்களையும், கொடுத்து வந்தனர்.

கடந்த மூன்று வருடங்களாக உங்களுக்கு கோட்சாரம் அமைப்புகள் சுத்தமாக சரியில்லை ‌.ஆண்டு கிரகங்களான குரு பகவான் ,சனி பகவான், ராகு, கேது இந்த நான்கு கிரகங்களும் உங்களுக்கு சாதகமற்ற ,அனுகூலமற்ற பலனையே தந்து வந்தனர். தற்சமயம் கடந்த 23. 9. 2020 ல் திருக்கணிதப்படி பெயர்ச்சியான ராகு ,கேதுக்கள் உங்கள் ராசிக்கு 1 மற்றும் ஏழாமிடத்தில் முறையே சஞ்சாரம் செய்கின்றனர்.

இது ஏற்கனவே சஞ்சாரம் செய்து வந்த 2, 8 காட்டிலும் எவ்வளவோ பரவாயில்லை. அதுமட்டுமல்ல உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவானுக்கு 20. 11 .2020 முதல் குரு பகவானின் அருட்பார்வை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே ராகு இருக்குமிடம் அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் ரிஷப வீடு. அது சுபவீடு. அவருக்கு தேவகுருவான குரு பகவானுடைய பார்வை கிடைக்க இருப்பது ரொம்ப விசேஷம் ஆகும். இருக்கும் வீட்டை சொந்த வீடாக கொள்ளும் ராகு பகவான் சுக்கிரபகவானாகவே மாறி உங்கள் ராசிநாதன் ஆகவே பலன் தர தொடங்குவார். எனவே ராகு பகவான் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் ராகு பகவான் திருமணமாகாத ஆண் பெண் இருவருக்கும் திருமண காரியங்களை நடத்தி வைப்பார்.

ஏழாம் வீட்டில் இருக்கும் கேது பகவான் உங்களுக்கு சில சாதகமற்ற அனுகூலமற்ற பலன்களை தர காத்துக் கொண்டு இருப்பதால் கேது பகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். வெள்ளிக்கிழமை பத்தரை மணிக்கு மேல் 12 மணிக்குள் வரும் ராகு காலத்தில் பிரத்தியங்கரா தேவிக்கு இரண்டு நெய் விளக்கு போட்டு வருவது பரிகாரம் ஆகும். அருகில் இருக்கும் புற்று கோயில்களுக்கு சென்று பால் அபிஷேகம், நெய்விளக்கு போட்டு வருவது பரிகாரமாகும்.

உங்களுக்கு அஷ்டமச் சனி விலகிவிட்டது பெரிய வரப்பிரசாதமாகும். அஷ்டம குரு அஷ்டம கேது விலகி இருப்பது கூடுதல் போனஸ் ஆகும். எனவே வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய ஆண்டாகவும் திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணமாகக்கூடிய ஆண்டாகவும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியத்தை தரக்கூடிய ஆண்டாகவும், தொழிலில், வேலையில், படிப்பில், அந்தஸ்தில், முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாகவும் நிச்சயமாக 2021 இருக்கப்போகின்றது என்பது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.

கடன் தீர கூடிய ஆண்டாக, வேலை, தொழில் ,குடும்பம் போன்றவற்றில் இந்த பிரச்சனைகள் தீர கூடிய ஆண்டாக நிச்சயமாக 2021ம்ஆண்டு இருக்க இருக்கப்போகின்றது. அதற்கான அஸ்திவாரங்கள் 2020 நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்க இருக்கிறது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More