சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடம் என்னும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்து வந்தார். இது குரு பகவானுக்கு மிகவும் பிடித்த வீடு. உகந்த இடமாகும். புண்ணிய காரகன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று மிகவும் வலுவாக உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருந்தது மிகப்பெரிய யோகம்.
குருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2020
தற்போது 2020 நவம்பர் மாதம் 20ஆம் தேதி குருபகவான் ஐந்தாம் இடமான தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சிஅடைய இருக்கிறார். இது உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாக வரும். இது குரு பகவானுக்கு அவ்வளவு உகந்த இடம் அல்ல.
வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா
“பத்துடன், மூன்று, நான்கு, பன்னிரண்டு, எட்டோடு உறவு மத்தமம் ஆறில் ஒன்றில் மன்னவன் இருந்த காலை நித்தமும் அலைச்சல் உண்டாகும். நிட்டூர வாத பித்தம், பெற்றவன் கேடும் பிறப்பு பிள்ளை பெண்சாதி பகையுமாவார்”
என்ற செய்யுளின் படி ஆறாம் இடத்தில் வரும் குரு பகவான் உங்களுக்கு கடுமையான அலைச்சல்களை தருவார்.
டக் டக்கென்று உறவுகள் பகையாகும். சிம்மராசி தகப்பனாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கடன் வாங்க வைப்பார். சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொதுவாக குருபகவான் தன காரகத்துவம் பெறுவதால் இவர் நீசம் அடைவது அவ்வளவு நல்லது அல்ல.
பொதுவாக உங்கள் இராசிக்கு குரு பகவான் ஐந்தாம் இடம், மற்றும் எட்டாம் இடத்துக்கு ஆதிபத்தியம் பெறுவார். இந்த இடம் பணபர ஸ்தானங்களில் வரும். குருபகவான் தன காரகன் வேறு. இவர் நீசம் அடைவது பணவரவுகளில் தடையை ஏற்படுத்தும்.
பண வரவுகளில் தடையை ஏற்படுத்தி பற்றாக்குறையை தந்து கடன் வாங்க வைக்கும்.
குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு ஆதிபத்தியம் பெற்று புண்ணிய காரகனுமாகி ஆறாமிடத்தில் நீசம் அடைவதால் சிலருக்கு பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனி குடித்தனம் சென்று விடுவீர்கள். வயதானவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருக்கும். ஏன்னா ஆறாமிடம் அடிவயிற்றை குறிக்கும். அவர்களுடைய பிறப்பு ஜாதகத்தில் சுய ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் பாவிகள் அமையப் பெற்றிருந்தால் இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு சிறுநீரகத்தில் கல், அடைப்பு, தொற்று போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு.
சிலருக்கு விரும்பத்தகாத இடத்திற்கு பணியிட மாற்றம் இருக்கும். உங்கள் அலுவலகத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருங்கள். பகலில் பார்த்து பேசு. இரவில் அதுவும் பேசாதே என்ற பழமொழியை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி சுமக்க நேரிடும்.
என்னதான் குரு பகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் சஞ்சாரம் செய்து வந்தாலும் குரு பார்க்கும் இடமெல்லாம் பெறுகும், வளரும் என்ற அடிப்படையில்
குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தைப் பார்த்து விடுவதால் திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும். குடும்ப ஒற்றுமை இருக்கும். மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவர். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
குரு பகவான் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், ராஜ்ய ஸ்தானத்தை பார்த்து விடுவதால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைத்துவிடும். ஆனால் வேலையில் மட்டும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். சிம்மராசி அரசியல்வாதிகளுக்கு இது ஒருவகையில் நல்ல காலம் தான். சிலர் கடன்பட்டு வீடு வாங்குவர். சிம்ம ராசி மத்திம வயது பெண்களுக்கு நோய் தொந்தரவுகள் இருக்கும்.
மகரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முறையே உத்திராடம், திருவோணம், அவிட்டம் என்று சிம்ம ராசிக்கு யோகாதிபதிகளின் சாரங்களே இருப்பதாலும், இவர்கள் உங்கள் ராசிநாதன் சூரியனின் நண்பர்கள் என்பதால் பெரிய அளவில் கெடுதல்கள் எதுவும் இல்லை. குரு பகவான் 12-ஆம் இடத்தை பார்த்து விடுவதால் சிலருக்கு இந்த வருடம் வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
சனிபகவான் ஆறாமிடத்தில் ஆட்சி பலம் பெற்று சஞ்சரிப்பதால், குருவுடன் சேர்ந்து சுபத்துவம் ஆக இருப்பதால் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல ஆண்டாக 2021 நிச்சயம் இருக்கப்போகிறது. சனி பகவான் 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயங்களை, தெண்டச்செலவுகளை குறைப்பார். ஆக மொத்தம் நல்லதும் கெட்டதும் கலந்த கலவையாக இந்த வருடமும் அடுத்த வருடமும் இருக்கப் போகிறது.
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி 2020
கடந்த 2020 செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி திருக்கணிதப்படி ராகு பகவான் மிதுனத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகி விட்டார். இது உங்கள் ராசிக்கு பத்தாம் இடமாகும். ராகு பகவான் தனித்து 10ல் அமர்வது தொழிலைக் கெடுக்கும் ஒரு அமைப்பாகும்.
கிரகங்கள் இடத்துக்கு இடம் தங்களை மாற்றிக் கொள்ளும் என்ற விதிப்படி பத்தாம் இடத்தில் அமரும் ராகு பகவான் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து குருவால் பார்க்கப்படுவது தொழிலை கெடுக்காது.
தொழில் நன்றாகவே இருக்கும். ஆனால் அலைச்சலை கொடுக்கும். அலைச்சலுக்கு தகுந்த லாபமும் இருக்கும். ஓடிக்கிட்டே இருக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு, டிவியில் வேலை செய்பவர்களுக்கு, சாராயக் கடைகள்,பார் நடத்துவது, கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கு இந்த வருடம் அபரிதமான லாபம் கிடைக்கும்.
கேது பகவான் நான்காமிடத்தில் சஞ்சாரம் செய்வது தாயார், மனை, மாடு, கொடுக்கல், வாங்கல், போக்குவரத்து போன்றவற்றில் இடைஞ்சல்களை தொல்லைகளைத் தரும். உங்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும். மாடு கன்றுகள் பலிதம் இல்லாத நிலையை நான்காம் இடத்தில் இருக்கும் கேது பகவான் தருவார்.
நான்கு, பத்தாமிடத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் இடமாற்றத்தை, வேலை மாற்றத்தை, உத்தியோக மாற்றத்தை நிச்சயம் தருவார்கள். வீடு கட்டும் சில சிம்ம ராசி நேயர்களுக்கு வீடு தடைப்பட்டு தடைப்பட்டு குரு பகவானின் அருளால் இனிதே முடிந்து விடும். மொத்தத்தில் நான்காமிடத்தில் இருக்கும் கேது பகவான் நான்காமிடத்தில் இருக்கும் உயிர் காரகம் அல்லது பொருள் காரகம் இரண்டில் ஒன்றை நிச்சயம் பாதிப்பார்.
ஆறாமிடமான உபஜெய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் நட்சத்திர சாரத்தில் இருக்கும் சனிபகவானும், இன்னொரு உபஜெய ஸ்தானமான பத்தாம் இடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் சாரத்தில் நிற்கும் ராகு பகவான் சிம்ம ராசிக்கு அளவற்ற நற்பலன்களை வாரி வழங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
சனிபகவானின் சஞ்சாரத்தால் சிலருக்கு பொன் பொருள் சேர்க்கையும், லட்சுமி கடாட்சமும், வாகனம் வாங்க கூடிய யோகங்களும், இடம், பொருள் வாங்கக்கூடிய யோகங்களும், காரிய வெற்றிகளையும், இந்த உபஜெய ஸ்தானங்களில் இருக்கும் பாவ கிரகங்கள் தருவார்கள் என்று கூறி ஆறாம் இடத்தில் இருக்கும் குரு பகவானின் கெடுபலன்கள், ஆறில் இருக்கும் சனியால் நிவர்த்திக்கப்படும் என்று கூறி குருபகவானின் பார்வையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முக்கிய பலனாக வேலை கிடைத்துவிடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிட்டும் என்று கூறி சிம்ம ராசிக்காரர்கள் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று சொல்லப்படும் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானை சாந்தப்படுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டு வருவதும், தன்வந்திரி பகவானை வழிபட்டு வருவதும் பரிகாரமாகும்.
Comments are closed.