விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

1,672

விருச்சிக ராசிக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து திருக்கணிதப்படி உங்களுக்கு ஏழரைச் சனி விலகி விட்டது. இது பெரிய யோகம். இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.
இங்கே இருந்து நான் பார்க்கும் போது விருச்சிக ராசியினர் ஓரளவு நல்லாதான் இருக்கீங்க.

குருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2020

“ஆறு ,பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்குமாகில்
கூறு பொன், பொருள் மிகவுண்டாம்;
குறைவில்லா செல்வமுண்டாகும்;
ஏறு பல்லக்குமுண்டாம்;
இடம் பொருளே வலுவுண்டாம்;
காறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”

என்ற செய்யுளின் படி விருச்சிக ராசியினர் சிலர் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு கார் பைக் வாங்க கூடிய யோகம் கடந்த 10 மாதங்களாக இருந்தது. வாகனம் வாங்கி விட்டார்கள். விருச்சிக ராசி பெண்களுக்கு நகை வாங்க கூடிய யோகம் கடந்த 10 மாதங்களாகவும், இன்னும் இரண்டு வருடங்களுக்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மொத்தத்தில் அஷ்டலட்சுமி யோகத்தால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகி கொண்டு இருக்கிறது.

கடந்த காலங்களில் குருபகவான் உங்களுக்கு இரண்டாமிடத்தில் பல நன்மைகளை அளித்து வந்தார். விருச்சிக ராசியினர் யாரும் கடந்த ஒரு வருட காலமாக ஜோதிடம் பார்க்க வரவில்லை. கோட்சாரம் நன்றாக இருப்பதால் வரக்கூடிய அத்துணை பிரச்சனைகளையும் சமாளித்துக் கொண்டார்கள்.

இதுவரை சனி பலம் இருந்தது ‌. குருபலம் இருந்தது. அடுத்து இந்த வருடம் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு 2020 நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் ஒன்றேகால் மணி சுமாருக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த இடம் உங்கள் விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடமாக வரும். இது குரு பகவானுக்கு அவ்வளவு உகந்த இடம் அல்ல.

“தீதிலொரு மூன்றில் துரியோதனன் படை மாண்டதும் “என்று வரும். குரு பகவான் மூன்றாம் இடத்தில் வரும்போது துரியோதனன் போரில் தோல்வியுற்றான் என்று செய்யுள் சொன்னாலும் என்னுடைய கணிப்புப்படி இந்த வருடம் உங்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாகவே இருக்கும் என்று நான் கணிக்கிறேன்.

காரணம் நான் ஏற்கனவே சொன்னபடி ஏழரைச் சனி உங்களுக்கு முடிந்துவிட்டது பெரிய வரப்பிரசாதம். சனி பகவான் மூன்றாமிடத்தில் உபஜெய ஸ்தானத்தில் உங்களுக்கு பல சகாயங்களை வாரி வழங்குகிறார். சனிபகவான் உங்களுக்கு காரிய வெற்றிகளை உடனுக்குடன் தருகிறார். மூன்றாவது மனிதர்களால் பலசப்போர்ட்டுகள் உதவிகள், ஆதாயங்கள் கண்டிப்பாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் சனிபகவானோடு குருபகவான் இணைவது மிக மிக நல்ல வாய்ப்பாகும்.

குரு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து 7-ம் இடமான மனைவி ஸ்தானத்தை பார்த்து விடுவதால் திருமண வயதில் உள்ள ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் நடந்து விடும். இதுவரை 2,8 ம்மிடத்தில் இருந்து கடுமையான சர்ப்ப தோஷத்தை தந்து வந்த ராகு கேதுக்கள் ஒன்று ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி ஏழில் இருக்கும் ராகு,குரு பகவானின் பார்வையை பெறுவது யோகம். சனி பகவான் உபஜெய ஸ்தானத்தில் மூன்றாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் இந்த ராசி யோகாதிபதிகளின் சாரங்களில் சஞ்சரிப்பது, மேற்படி குருபகவான் சூரியன், சந்திரன், செவ்வாய் நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும் யோகம்.

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
காதலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காதல் வெற்றி பெற்று அந்த காதல் திருமணத்தில் முடியும்.

குருபகவான் தனது நேர் பார்வையாக ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தகப்பனாரின் ஆரோக்கியம் மேம்படும். தகப்பனாரின் ஆதரவு உதவிகள் கிடைக்கப்பெறும்.

தந்தையின் சுயார்ஜித சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கப்பெறும். அதில் மிக முக்கியமான” புத்திர பாக்கியம்” எனும் பாக்கியம் குருவின் அருளால் கிடைக்க பெற்று மகிழ்ச்சி கடலில் நீந்துவீர்கள். குடும்பம் எனும் பாக்கியமும் கிட்டும்.

குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் லாபம் கூடும். பண வரவுகள் திருப்தியாக இருக்கும். அரசு வகை உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் செய்யலாம். கிளைகள் ஓபன் பண்ணலாம். தொழிலை விரிவுபடுத்தலாம்.

மூத்த சகோதரியின் உதவி கிடைக்கும். சிலருக்கு மூத்த சகோதரியின் மகளை திருமணம் செய்ய வாய்ப்பு கிட்டும். முதல் வாழ்க்கை தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த வருடம் மறுமணம் ஏற்பட்டு வாழ்க்கையில் வசந்தம் வீசும்.

மொத்தத்தில் குரு பகவான் உபஜெய ஸ்தானத்தில் சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு சாதகமான, நல்ல, அனுகூலமான பலன்களே ஏற்படும் என்று நான் கணிக்கிறேன். சனிபகவானால் பெருமளவு நன்மைகள் இருக்கும் விருச்சிக ராசியினருக்கு,மூன்றாம் இடத்து குருவால் ஏற்படப்போகும் தீமைகள் குறைவே. மூன்றாம் இடத்து குரு பகவானின் கெடுபலன்கள் மூன்றாம் இடத்து சனிபகவானால் ஈடு கட்டப்படும். குறிப்பாக நல்ல பலன்களே மிகுந்து காணப்படும்.

குருபகவான் தான் இருக்கும் இடத்தை காட்டிலும், அவர் பார்வை படும் இடங்கள் புனிதம் அடையும், வளரும், பெருகும் என்ற அடிப்படையில் குருபகவான் தான் இருக்கும் மூன்றாம் இடத்தில் இருந்து ஏழாம் இடம், ஒன்பதாம்இடம், லாபஸ்தானம் மூன்றையும் பார்ப்பதால் இந்த மூன்றும் இடங்களும் வலுத்து விடும். இந்த மூன்று இடங்களும் சுபத்தன்மை அடைந்து விடும்.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2020

இதுவரை விருச்சிக ராசிக்கு 2,8 ம் இடங்களில் அமர்ந்து கடுமையான சர்ப்ப தோஷங்களை திருமண தடைகளை அளித்துவந்த ராகு,கேதுக்கள் திருக்கணிதப்படி கடந்த 23 செப்டம்பர் மாதம் 2020 முதல் உங்கள் ராசிக்கு ஒன்று மற்றும் ஏழாம் இடங்களில் முறையே சஞ்சாரம் செய்து வருகிறார்கள்.

இதில் ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானுக்கு நவம்பர் மாதம் இருபதாம் தேதிக்குப் பிறகு குருபகவானின் அருள் பார்வை கிடைக்க இருப்பதால், திருமண தடைகள் எல்லாம் விலகி திருமணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் ஏழில் சுக்கிரனின் வீட்டில் இருக்கும், குரு பார்வையைபெறக்கூடிய ராகு பகவான் நவம்பர் 20 ந்தேதி முதல் சுபகாரியங்களை நடத்தி வைப்பார்.

கூட்டு தொழில் மூலம் வெற்றி கிடைக்கும். லாபம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மைகளை தரும். வீட்டில் உறவினர்கள் வருகை அதிகரித்து அதன் மூலமாக சந்தோஷமும், குதூகலமும் ஏற்படும்.

விருச்சிக ராசியில் அமரும் கேது நல்லவர். ராசியில் அமரும் கேது அபரிவிதமான ஞானங்களை உங்களுக்கு அருள்வார். கேது ஞான மோட்ச காரகன் ஆவார். ராசியில் அமரும் கேது, ஒன்பதாம் இடத்தைப் பார்க்கும் குரு பகவான் இவர்களின் பலன்களைக் கூட்டி கழித்து பார்க்கும் போது ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மகான்களை சந்திக்கும் பாக்கியங்கள் சிலருக்கு கிட்டும். பொதுவாகவே விருச்சிக ராசிக்கு கேது பகவானால் நன்மைகள் அதிகம் இருக்கும். இதுவரை இருந்த 2,8 இடங்களை காட்டிலும், தற்போது இருக்கும் ஒன்று, ஏழாம் இடம் எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்லலாம்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More