2020 to 2022 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ஏன் இவ்வளவு லேட்டுன்னு கேட்டகாதீங்க.
உண்மையை சொல்லனும்னா இன்னைக்கு(23.9.20) காலையில் 10.40 க்கு தான் திருக்கணிதப்படி ராகு கேது பெயர்ச்சி.

ஆறு மாதத்துக்கு முன்னரே யூட்யூபிலும், பத்திரிகைகளிலும் பலர் ,ராகு ,கேது பெயர்ச்சியில் கோடிஸ்வரராகும் ராசிகள் என மிகைப்படுத்தி எழுதிவிட்டார்கள்.

திருநாகேஸ்வரத்திலும் வாக்கியப்படி ராகு ,கேது பெயர்ச்சி ஆகிவிட்டது.

இந்த வருடம், தினசரி ராசி பலன் பார்ப்பதை ,மக்கள் வெறுத்தே விட்டனர் என்றும் உறுதியாகக் கூறலாம்.

காரணம் ,புதுவருடம் எப்படி இருக்கும் என்று கணித்த ஜோதிடர்கள் பலர் இன்று வரை வைச்சு செய்யப்படுகின்றனர்.புது வருட பலனை சொல்லி பல்பு வாங்கினர்.
இதில் மக்களின் அறியாமையும் உள்ளது. ஒரு நாலு வரிகள் அதைப்பற்றி பார்த்துவிட்டு அடுத்து, பலனுக்கு செல்லலாம்.

பொதுவாக கிரகங்கள் அனைத்தும் தினசரி ஒரு குறிப்பிட்ட தூரம் நகர்கின்றன .அதை வைத்துதான் கோச்சார பலன் எனும் தினசரி ராசிபலன் சொல்லப்படுகிறது.
இதை வைத்துக்கொண்டு வார ராசிபலன் ,மாத ராசிபலன் ,நட்சத்திர ராசி பலன் என பத்திரிக்கைகள் விற்க வேண்டும் என்பதற்காக பலர் எழுதுகின்றனர்.
இதில் கடலில் பெருங்காயத்தை கலந்த அளவிற்கு மட்டுமே பலன் இருக்கும். இது தான் உண்மை.

850 கோடி மக்கள் வாழும் ,இந்த உலகில் ,ஒவ்வொரு ராசியிலும் ஏறக்குறைய 70 கோடி பேர் தோராயமாக இருப்பார்கள்.
இவர்களுக்கு எல்லாம் ஒரே பலன் பொருந்துமா என்றால் நிச்சயமாக பொருந்தாது. உண்மைதானே.

காலையில் டிவியில் வந்து ,கலர்,கலராக ரீல் விடுவதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அதே நேரத்தில் ஒரு தனிமனிதன்,தனது தினசரி கோட்சார பலனை நிச்சயம் கணிக்க முடியும்.
அதற்கு ஓரளவு ஜோதிட அறிவும் வேண்டும்.

ஆனால், இங்கு மிகைப்படுத்தப்பட்ட, வணிக நோக்கிலான பலன்களே பலரால் பகிரப்படுகிறது. தினசரி அவரவர் ராசிக்கான கோச்சாரப் பலன் , அன்றைய நாளின் நட்சத்திரம், திதி,குறிப்பிட்ட நேரத்திற்கான ஹோரை, தற்போதைய பெரும் கிரகங்களான சனி ,குரு ,ராகு கேதுவின் சஞ்சார நிலை , தங்களது சுய ஜாதகத்தில் நடக்கும் திசா,புத்தி ,அந்தரம் ,சூட்சமம் பிராணன்,தேகம் ஆகியவற்றை தினசரி அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தின் மூலம் அறிந்தால் மட்டுமே, அன்றைய கோச்சார பலனை நாம் துல்லியமாக பெற முடியும் .இதற்கு கண்டிப்பாக ஜோதிட அறிவு வேண்டும்.

ஒருகாலத்தில் ,ஓடிச்சென்று, வாரம் தவறாமல் ராசிபலன்களை படித்தவன்தான் என்ற முறையில் இதை கூறுகிறேன். அவரவர் சுய ஜாதகமே 75% பேசும். 100% கணிக்க என்னால் மட்டுமல்ல எந்த ஜோதிடராலும் முடியாது. அந்த 25% கடவுளின் பங்கு.

சரி வாருங்கள் ,ராகு ,கேது பெயர்ச்சி பலன்களை துல்லியமாக, சுருக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக ராகு கேதுக்கள் 3 9, 6,12, 4,10, 5,11 ஆகிய இடங்களில் ராசிக்கு இருக்கும் பொழுது, நல்ல பலன்களை செய்யும் என்பது பொது விதி.(இதிலும் விதி விலக்குண்டு)

பொதுவாக ராகு ,கேதுக்களுக்கு தனி வீடுகள் இல்லை .தான் நின்ற வீட்டின் அதிபதி போல் ராகு கேதுக்கள் செயல்படும் என்பது பொதுவிதி.

சுப தொடர்புகளை பொறுத்து பலன்கள் மாறும்.

இன்று ராகு ,கேது பெயர்ச்சியின் போது ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் பெயர்ச்சி ஆகின்றனர்.

இது இவர்களுக்கு நல்ல வீடுதான்.

ராகு ரிஷபத்தில் உச்சம். விருச்சிகத்தில் நீசம்.கேது விருச்சிகத்தில் உச்சம்.ரிஷபத்தில் நீசம்.)

(இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து உண்டு.இதை பற்றி நான் ஏற்கனவே என்னுடைய Timeline பதிவில் தனியாக பதிவிட்டுள்ளேன் .முடிந்தவர்கள் அதைச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்)

தற்போதைய கோட்சார நிலையில் குரு தனுசிலும், 2 மாதத்தில் குரு மகரத்திற்கு மாறி விடும் என்பதால், மகரத்தில் உள்ள குரு ,சனியை அனுசரித்து பலன்கள் சொல்லப்படுகிறது.

குருவின் பார்வை ராகுவிற்கு கிடைக்கிறது. கேதுவிற்கு இல்லை.

சனியின் பார்வை ராகு ,கேது இருவருக்கும் இல்லை.

பதிவை முடிந்தவரை, என்னால் நேர்மையாக கொடுக்கிறேன்.

மேஷராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

இரண்டில் ராகு .எட்டில் கேது. பொதுவாக சர்ப்ப கிரகங்கள் 2,8 இருப்பது. சுமாரான நிலையே. குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றலாம். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் இருக்கலாம். வாக்கில் ராகு .சில நேரங்களில் பொய் பேசி மாட்டிக் கொள்ள நேரலாம் .பணவரவு தடுமாறும். கேது எட்டில் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது .குருபார்வை ராகு உள்ளதால் ஓரளவு நன்மையான பலனும் உண்டு. தினசரி விநாயகர் வழிபாடு தொல்லைகளைத் துடைத்தெறியும்.

ரிஷப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ராசியில் ராகு .ஏழில் கேது. ராசியில் ராகு உள்ளதால் தேவையற்ற டென்ஷன் , சில நேரங்களில் ராகுவிற்க்கு உண்டான உலக இச்சைகளில் நாட்டம் ஏற்படும்.
ஏழாம் இடத்தில் கேது இருப்பதால் திருமண வாழ்வில் மனைவி மீது சற்று பற்றற்று ,வெருப்புற்று இருக்கும் நிலை உண்டு. நண்பர் வகையிலும் எச்சரிக்கை தேவை. புதிய நட்புகளால் ஏமாற்றம் அடையலாம்.நெருக்கமான நண்பர்களுக்கு கூட ஜாமீன் இட வேண்டாம்.

மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ராசிக்கு 12ல் ராகு பொதுவாக 6 ,12 ஆம் இடங்களில் ராகு கேது நல்ல நிலை. ராகு 12ல் நின்று குருவின் பார்வையைப் பெறுவதால் சிலருக்கு வெளியூர் பயணங்கள் உண்டாகும். ஏற்கனவே அஷ்டம சனி நடக்கிறது என்பதால் வெளியூர் பயணம் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அஷ்டம சனியின் முன் மற்ற கிரகங்களின் தாக்கம் ,பெரிய அளவு எடுபடாது என்பதால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கேது மட்டும் சாதகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளை வணங்குங்கள்.

கடக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் ராகு .ஆறாமிடத்தில் ஐந்தாம் இடத்தில் கேது. லாப ஸ்தானத்தில் ராகு .நல்ல பணவரவு உண்டு. செய்தொழில் செழித்தோங்கும். ஐந்தில் கேது இருப்பதால் புத்திரர்களால் சில நேரங்களில் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படும். கடன்கள் ஓரளவு கட்டுப்படும். வட்டி கட்டி வாழ்க்கை ஓடிய நிலை மாறும். ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு நல்ல பலனே. குழந்தை நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறை தேவை.

சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ராசிக்கு பத்தில் தொழில் ஸ்தானத்தில் ராகு. குரு பார்வையில். புதிய தொழில்கள் ஒரளவு நல்ல லாபத்தை தரும் . புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு உண்டாகும்.லாபமும் உண்டு. 4ல் கேது உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பழுது ஏற்படலாம் .தாயார் உடல்நிலையில் கவனம் தேவை.
சிம்ம ராசிக்கு சிறப்பான பலனே.

கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ஒன்பதில் ராகு மூன்றில் கேது. சகோதரர்களை சார்ந்து இருக்க வேண்டாம். குறிப்பாக இளைய சகோதரம். உங்கள் முயற்சிகள் ஜெயமாகும். பூர்வீக சொத்துக்கள் பிரச்சனையின் பெயரில் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீர்படும். ராகு கேது பெயர்ச்சியினால் ஒரளவு நல்ல பலனே.

துலா ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

எட்டில் ராகு இரண்டில் கேது. எட்டில் அட்டம ஸ்தானத்தில் ராகு வருவது சுமாரான அமைப்பே. சிலருக்கு வெளியூர் பயணங்கள் அமையும்.
டென்ஷன் ,கோபம் ,வம்பு வழக்குகள் சிலருக்கு விபத்துகளுக்கு வாய்ப்புண்டு. இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வாயை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவில் தடுமாற்றம் உண்டு. குலதெய்வ வழிபாடு குலம் காக்கும் சற்று கவனம் தேவை.

விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ஏழில் ராகு லக்னத்தில் கேது. லக்னத்தில் கேது உள்ளதால் ஆன்மீக எண்ணங்கள் தழைத்தோங்கும். அதேநேரத்தில் சில நேரங்களில் பற்றற்ற வாழ்க்கையை மனம் நாடும்.
ஏழில் ராகு இருப்பதால், சில நேரங்களில் ராகுவிற்கு உண்டான காரகத்துவத்தை புதிய நண்பர்களால் மனம் நாடும்.கவனம் தேவை.
கணவன் மனைவி உறவில் சில நேரங்களில் சலசலப்புண்டு. கவனமுடன் இருக்கவும்.
விநாயகர் வழிபாடு வில்லங்கத்தை தீர்க்கும்.

தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ஆறில் ராகு 12ல் கேது. ஏழரைச் சனியினால் பாதிக்கப்பட்ட தனுசு ராசிக்காரர்களுக்கு ஆறாமிடத்தில் ராகு வருவது கடன் சார்ந்த அமைப்புகளை கரைய வைக்கும்.
நோய் மற்றும் எதிரிகளின் நிலைமை கட்டுப்படும். வட்டியை கொடுக்கவாவது வருமானம் உண்டாகும்.
12ல் கேது இருப்பது சிலருக்கு நிம்மதியற்ற உறக்கத்தைக் கொடுக்கும். வாழ்க்கை பற்றிய தெளிவை கொடுக்கும்.
ஏழரைச் சனியின் பிடியில் இருந்தாலும் இந்த ராகு கேது பெயர்ச்சி ஒரளவு நல்ல பலனைக் கொடுக்கும் அமைப்பில் தான் உள்ளது .கவலை வேண்டாம்.

மகர ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

ஐந்தில் ராகு .பதினொன்றில் கேது. முற்றிலும் கோட்சார கிரகங்கள் அனைத்தும் கெட்டிருக்கும் மகர ராசிக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள் ஓரளவு நல்ல பலனைக் கொடுக்கக்கூடிய அமைப்பில் உள்ளது. லாபஸ்தானத்தில் உள்ள கேதுவின் தயவால் பகுதி நேர வருமானம் கிடைக்கும்.
ஏழரை சனியில் ஜென்ம சனி ,ஜென்ம குரு நடைபெற இருப்பதால் எதிலும் அவசரம் வேண்டாம்.
குழந்தைகளுக்காக செலவு செய்யக் கூடிய நிலை உண்டு. சிக்கனமாக இருந்து, சேமிப்பை வளர்த்துக் கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடு விநாயகர் ,துர்க்கை வழிபாடு நிச்சயம் தேவை.

கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

நாலில் ராகு .பத்தில் கேது. சுக ஸ்தானத்தில் ராகு இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை .ஏழரைச் சனியும் ஆரம்பமாகிவிட்டது.
கடன் கொடுப்பது ,ஜாமீன் போடுவது கண்டிப்பாக கூடவே கூடாது. தொழிலிலும் கொஞ்சம் மந்த நிலை காணப்படும்.
கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் சுப கடனாக மாற்றிக்கொள்வது நல்லது.
கண்டிப்பாக தினசரி கடவுள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு நித்திய பூஜைகளை தினசரி தவறாமல் செய்து வரவும் .அதுவே நல்ல பலனையும் பாதுகாப்பையும் கொடுக்கும்.

மீன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

மூன்றில் ராகு .ஒன்பதில் கேது. 12 ராசிகளில் எந்த ராசிக்கு கோட்சார கிரகங்கள் அனைத்தும் சுபமாக உள்ளது என்றால் கண்ணை மூடிக்கொண்டு மீனராசி என்று உறுதியாகக் கூறலாம்.
ஏற்கனவே சனி நல்ல நிலையில் உள்ளார். இப்பொழுது ராகுவும் நல்ல நிலைக்கு வந்துவிட்டார் .குருவும் இன்னும் சில மாதங்களில் நல்ல நிலைக்கு வர போகிறார்.
மிகச்சிறந்த ராஜயோகங்களை பெறக்கூடிய அமைப்பில் ,மீன ராசி முதல் இடத்தில் உள்ளது. சுய ஜாதகம் ஒத்துழைக்கும் பட்சத்தில் நிச்சயமாக நல்ல பலன்கள் மேலோங்கி நிற்கும்.
மீன ராசியை பொறுத்தவரை ஒரே வரி பலன் “இனி எல்லாம் ஜெயமே.”

மேற்கூறிய அனைத்து ராசிகளின் பலன்களும் பொதுப் பலன்களே.
அவரவர் சுயஜாதகத்தின் தன்மைக்கேற்ப பலன்கள் மாறுபடும்.
அதை கணித்து ஆராய அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை, ஆய்வு செய்து பரிசீலனை செய்து கொள்ளுங்கள் .அதுவே துல்லியமான தீர்க்கமான பலனைக் கொடுக்கும்.
ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: