சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Simha Rasi Rahu Ketu Peyarchi 2019)
இதுவரை முறையே 12,6 ல் இருந்த ராகு கேதுக்கள் தற்போது 11,5 க்கு மார்ச் மாதம் 7ந்தேதி காலையில் பெயர்ச்சி அடைய போகின்றார்கள்(திருக்கணிதப்படி)
இதுவரை ராகு கேதுக்கள் இருந்த இடங்கள் நல்ல இடங்கள் தான். பாவக்கிரகங்கள் 6,12 ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் கெட்ட கிரகங்கள், பாவக்கிரகங்கள் மறைந்து அவர்களால் கெடுபலன்கள் இல்லாத நல்ல நிலமை.
ஒரு கெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடியாத நிலையில் இருப்பதே நமக்கு யோகம் தான். அவர் நல்லதும் செய்ய வேண்டாம் ,கெட்டதும் செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதும். கிராமங்களில் சொல்வார்கள். டேய் நீ உபகாரமே செய்ய வேண்டாம். உபத்திரத்தை கொடுக்காமல் இருந்தாலே போதுமானது என்பார்கள். அதுபோல தான் இதுவும்.
இதை ஏன் சொல்றேன் அப்படினா ஸ்வர்வபானு என்ற அரக்கன் தேவாமிர்தத்தை அருந்தும் போது தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை அருந்தி விட்டான்.இதை சூரிய, சந்திரர்கள் மகாவிஷ்ணுவிடம் காட்டி கொடுத்து விட்டார்கள். உடனே மகாவிஷ்ணு கோபம் கொண்டு அவருடைய தலையை தனது சக்கராயுதத்தால் வெட்டி விட்டார்.
அவருடைய உடல் தலை வேறு,உடல் வேறு என்று இரண்டானது.இவர்கள் இரு உடல்கள் என்றாலும் உயிர் என்னவோ ஒன்றுதான்.
அவர் அமிர்தத்தை அருந்தி விட்டதால் அவருக்கு இறப்பு ஏற்படவில்லை.. மனித தலையோடு பாம்பு உடலும்,பாம்பின் தலையோடு மனித உடலாகவும் மாறிப்போனது. இவர்களே ராகு ,கேதுக்கள் …இவர்கள் பின்னாளில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரக அந்தஸ்தை அடைந்தனர் என்பது புராண வரலாறு. இதை சுருக்கமாக சொல்லி உள்ளேன்.
அதனால் தன்னை காட்டி கொடுத்த சூரிய சந்திரர்களை கடும் பகைவர்களாக எண்ணும் ராகு,கேதுக்கள் கடக,சிம்ம ராசிகளுக்கு பெரிய அளவில் நன்மைகளை செய்ய மாட்டார்கள். அதனால் தான் கடக,சிம்மத்தில் இவர்கள் பகைஷேத்திரம் பெறுகிறார்கள். கடக ,சிம்மத்தில் ராகு கேதுக்கள் பகை என்ற ஸ்தான பலமில்லாத நிலையை அடைவார்கள்.
என்றாலும் பன்னிரண்டாம் வீட்டை காட்டிலும் பதினொன்றில் ராகு எந்த ராசிக்கும் நன்மைகளை செய்ய கடமைப்பட்டவர்.அதனால் பதினொன்றாமாம் இடத்து ராகுவால் உங்களுக்கு நன்மைகள் அனேகம் இருக்கும்.
பதினொன்றில் இருக்கும் ராகுவால் லாபங்கள் இருக்கும். வெற்றிகள் கிடைக்கும். காரிய ஜெயங்கள் உண்டாகும். திருமணம் நடந்து பிரிந்து விவாகரத்து ஆன தம்பதிகளுக்கு மறுமணம் ராகுவால் நடந்து புதிய நல்ல வாழ்க்கை உண்டாகும். தாராளமான பணவரவுகள் இருக்கும். தொழில் நல்ல முறையில் நடந்து வரும்.
“ராகு பதினொன்று மூன்றாம்
இடத்தில் சேரின்
பாகு தேன் பழமும் பாலும்
பற்றாத்தனமும் உண்டாகும்
காரியங்களுண்டாம்
அன்னதானங்களுண்டாம்
வாகு மறுமணமுண்டாம்
வரத்து மேல் வரத்துமுண்டாம்”
என்ற செய்யுள்படி சுக சௌக்கியங்களும், தாராளமாக பணவரவுகளும்,காரிய வெற்றிகளும் ராகுவால் உண்டாகும். வேற்று இனம்,வேற்று சாதி,குறிப்பாக முஸ்லிம் மதத்தினரால் முஸ்லிம் நண்பர்களால் நன்மைகள் இருக்கும்.
கடந்த காலங்களில் உங்களுக்கு எந்த ஒரு நல்லதுவுமே நடந்து இருக்காது. ஏன்னா கடந்த காலங்களில் அர்த்தாஷ்டம சனி,அதைதொடர்ந்து பஞ்சம சனி என்று உங்கள் மனசு வெகுவாக பாதித்து இருக்கும். மனச்சஞ்சலங்களை கொடுத்து இருக்கும். சிலருக்கு வம்பு வழக்குகளால் , பெற்ற பிள்ளைகளால் ,பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்களால் வழக்குகளால் குறைந்த அளவு மனநோயாளி என்றளவில் இருந்திருப்பீர்கள்.
என்ன வாழ்க்கை என்று சலிப்பு தன்மை ஏற்பட்டு இருக்கும். சுயபச்சாதாபம் ஏற்பட்டு இருக்கும். நம்மை போல கஷ்டப்பட்டவங்க யாருமே இல்லை என்று
நீங்கள் புலம்பி தவித்து இருப்பீர்கள். அதற்கு காரணம் பஞ்சம சனி.சில வயதானவர்களுக்கு இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகளை சனி கொடுத்து இருதய அறுவைசிகிச்சை செய்ய வைத்து இருக்கும்.
ஆனால் இனி லாபஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் இந்த நிலைகள் மாறும். இந்த வருட இறுதியில் குருப்பெயர்ச்சியில் குரு ராசிக்கு ஐந்தில் வந்து உங்கள் ராசியை வலுவாக பார்க்க இருப்பதால் உங்கள் அத்துணை பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
மார்ச் ஏழுக்கு பிறகு பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள்,குழந்தைகளால் ஏற்பட்ட மனவருத்தங்கள் தீரும்.கோவில் குளங்களுக்கு சென்று மன அமைதி பெறுவீர்கள். வம்பு வழக்கு கோர்ட் கேசு எல்லாம் முடிவுக்கு வரும்..கணழன் மனைவி ஒற்றுமை ஏற்படும். அன்னியோன்யம் கூடும்.
பணவரவுகளில் இருந்த தடைகள் நீங்கும். மார்ச் ஏழுக்கு பிறகு உங்கள் பிரச்னைகள் பாதியளவு நீங்கும். குருப்பெயர்ச்சி க்கு பிறகு எல்லா பிரச்னைகளும்,கடன் பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
சனி ஐந்தில் இருந்தாலே பூர்வ புண்ணியத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் காலமாகும். அது பிள்ளைகள் வழியில், பூர்வீக சொத்து வழியில் காட்டியிருக்கும்.சனியுடன் கேது இணைவதால் அது புண்ணியமாக மாற வாய்ப்பு இருக்கிறது.கேது செவ்வாயை போல பலன் தருவார் என்ற அடிப்படையில் செவ்வாய் சிம்ம ராசிக்கு சதுர்த்த, பாக்கியாதிபதி என்பதால் சனியால் உங்களுக்கு இனி கெடுதல்கள் இருக்காது.
சனியின் பார்வை லாபத்தில் இருந்ததால் இதுவரை உங்களுக்கு லாபம் இல்லை. இனிமேல் லாபம் உண்டு. சனியின் பார்வை தனத்தில் இருந்ததால் இனிமேல் பணவரவுகள் உண்டு. சனி முக்கியமான தனம்,லாபம்,மனைவி ஸ்தானத்தை பார்த்து கெடுத்தார். கேதுவின் சேர்க்கையால் இனிமேல் இந்த தீய பலன்கள் மாறி நன்மைகள் மட்டுமே உண்டாகும்.
அப்பா சொத்து, அப்பாவின் அப்பா சொத்து, பாட்டன் சொத்து இவைகளில் இருந்த அல்லல் தொல்லைகள் விலகி ,பாகப்பிரிவினை ஏற்பட்டு சொத்து உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். புத்திர பாக்கியம், திருமணம் போன்ற விஷயங்களில் இருந்த தேக்க நிலைகள் மாறி நன்மைகள் உண்டாகும்..
மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு லாபங்களை ,தாராள தனவரவுகளை தரக்கூடிய பெயர்ச்சியாக இருக்கபோகின்றது..