சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 – 2023
சனிப்பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள முழு கட்டுரையையும் 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு சனிப்பெயர்ச்சி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? நம்முடைய சுய ஜாதக அமைப்பு, தற்போது எந்த அமைப்பில் உள்ளது. கோட்சாரம் என்றால் என்ன? அது நமக்கு எவ்வாறு நல்ல, கெட்ட விஷயங்களை கொடுக்க இருக்கிறது என்பதை முழுமையாக அறிய இயலும்.
பல அரிய தகவல்களை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதால் அடுத்த இரண்டரை வருடத்திற்கு இந்த கட்டுரையை பொக்கிஷம் போல் பாதுகாப்பது நல்லது.
நிகழும் 2020ஆம் ஆண்டு விகாரி வருடம் ஆங்கில தேதி ஜனவரி 24.1 .2020. தமிழ் தேதி தை மாதம் 10ம் தேதி காலை 9. 57 மணிக்கு, கிரகங்களில் மிக வலிமையான கிரகமாக கருதப்படும் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
அதேநேரம் வாக்கியப்படி 2020 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருக்கிறது.
கிட்டத்தட்ட வாக்கியத்திற்கும், திருக் கணிதத்திற்கும் 11 மாதம் இடைவெளி உள்ளது.
திருக்கணிதம், வாக்கியம் இந்த இரண்டு பஞ்சாங்கத்திற்கும், காலங் காலமாக தொடரும் சர்ச்சை, இங்கு இன்னும் தொடர்வதால் இந்த 11 மாத இடைவெளி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது.
என்னுடைய அனுபவத்தின்படி 98% திருக்கணிதம் சரியாக வருகிறது மீதமுள்ள 2% வாக்கியபடியும் சரியாகவே வருகிறது.
பொதுவாக தென் மாவட்டத்தில் உள்ள குறிப்பாக மதுரையை தாண்டி விருதுநகர், திருநெல்வேலி நாகர்கோயில், தஞ்சாவூர் பகுதிகளில் வாக்கிய பஞ்சாங்கமே அதிக அளவு பார்க்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் அது சரியாகவும் வருகிறது. நானே பார்த்துள்ளேன்.
இந்தமுறை வாக்கியத்திற்கும்,திருக்கணிதத்திற்கும் 11மாத இடைவெளி என்பதால், வருட கிரகமான குரு பகவானும், ராகு கேது பகவானும் இடம் மாறி இருப்பார்கள்.
மற்ற கிரகங்களின் இணைவு, சேர்க்கை, பார்வையும் மாறுபடும்.
ஆனால் ஒன்று நிச்சயம். இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு திருமணம் சார்ந்த விஷயங்களில், ஜாதகம் பார்க்கும்போது கண்டிப்பாக குடுமிபிடி சண்டை உள்ளது.
எது எப்படியோ நடைமுறைக்கு எந்த பஞ்சாங்க பலன் சரியாக வருகிறதோ, அதை சரியாக கணித்து, அந்த பலனை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்றபடி பலனை தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக நான் பிறந்தபோது, என் பெற்றோர் சொன்ன நேரத்தில் ஜாதகம் கணிக்கும்போது வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் லக்ன வித்தியாசம் வருகிறது.
வாக்கியப்படி ஒரு லக்னமும், திருக்கணிதப்படி ஒரு லக்னமும் வருகிறது.
என்னுடைய வாழ்க்கையில் நான் படித்தது என்ன? திருமணம் எப்போது? குழந்தைப்பேறு எப்போது? என்பதை நான் ஆராய்ந்து சரியான லக்னத்தை பிரித்து எடுக்கவே எனக்கு கிட்டத்தட்ட 27 வயது ஆகிவிட்டது.
(சாதாரண மனிதனின் நிலைமை கேள்விகுறிதான். குழப்பம்தான்)
அதனால்தான் சொல்கிறேன் இந்த பதினோரு மாத இடைவெளி என்பது உங்களுடைய வாழ்வில் எது சரியாகப் பொருந்தி வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளவும்.
பெரும்பாலும் நூற்றுக்கு 98 சதவீதம் திருக்கணிதம் சரியாக வெளிவரும். 2% வாக்கியப்படியும் சரியாகத்தான் வருகிறது.
சரி. இது ஒரு பக்கம் சர்ச்சையாக இருக்கட்டும்.
கிரகங்களில் அதிகமான தாக்கத்தை, உலக உயிர்களிடத்தில் ஏற்பத்துவர் சனி என்றால் மிகையாகாது.
சனி நீதிமான்.
சனியின் தாக்கத்திலிருந்து இறைவனே கூட தப்பிக்க முடியவில்லை என புராணங்கள் சொல்கின்றன.
அந்த அளவு சனி நேர்மை தவறாத நீதிமான்.
அப்படியிருக்க சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி அவரிடம் இருந்து தப்பிக்க முடியும்.
எந்த ஒரு மனிதனின் பூர்வ ஜென்ம நன்மை, தீமைக்கேற்ற கர்ம வினைகளை அவரது தசா காலங்களிலும், ஏழரைச் சனி அட்டமச் சனி காலகட்டங்களிலும் துளியளவு கூட பிசிறின்றி சரியாக கொடுத்துவிடுவார்.
கொடுக்க வேண்டிய நேரத்தில் அள்ளியும் கொடுப்பார்.
சனி கொடுக்க யார் தடுப்பார்?
இதிலும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் கல்வியறிவு பெற்றவன், கல்லாதவன், ஏழை, பணக்காரன், குழந்தை வயதானவர், நல்லவன், கடவுள் கடவுளைத் தொழுபவன், நாத்தீகன், கெட்டவன், அறிவாளி, அறிவிலி என யாருக்கும் எந்த விதத்திலும், கொஞ்சம் கூட கருணை இல்லாமல் நல்லதையோ கெட்டதையயோ முழுமையாக வழங்கும் நீதிமான் சாட்சாத் சனிபகவானே.
அதனால்தான் கால ராசி சக்கரத்தில், நேர்மையை துல்லியமாக அளவிடும் துலாராசியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார்.
சனிபகவான் தோன்றிய புராண வரலாறு.
உலகிற்கு ஒளி கொடுக்கும் நவகிரக அரசனான சூரியனுக்கு, மனைவி சுவர்ச்சலாதேவி.
சூரியனின் கடுமையான வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் அளவிற்கு சக்தி வேண்டுமென்பதால் சூரியனுக்கே தெரியாமல் தன் நிழலை சாயாதேவி என்ற ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி சிவனை நோக்கி தவம் செய்ய சென்றுவிட்டாள் சுவர்ச்சலா தேவி.
நிழல் போன்று இருந்த சாயாதேவியுடன் இல்லறம் நடத்தி சனிபகவானை பெற்றனர் சூரியபகவான், சாயாதேவி தம்பதியினர்.
ஆனால் நிழலில் இருந்து தோன்றிய குழந்தை என்பதால் சனி பகவான் கருமை நிறத்துடன் காணப்பட்டார்.
தான் ஒளி பொருந்திய அமைப்பில் இருப்பதற்கு மாறுபட்டு, இருளான அமைப்பில் சனி இருப்பதால் சனியை சூரியனுக்கு பிடிக்கவில்லை.
காலப்போக்கில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருவரும் பிரிந்து ஒருவருக்கொருவர் எதிரிகளாகினர்.
அதே நேரத்தில் தந்தை சூரியனின் அளவு, தனக்கு பலம் இல்லை என்பதை உணர்ந்த சனி பகவான், சிவனை நோக்கி கடும் தவம் இயற்றினார்.
தவத்தின் பயனாக சிவபெருமான் நேரில் தோன்றி, நவகிரக அந்தஸ்து கொடுத்து, சூரியனின் புதல்வர் என்பதால் நீதியையும், ஆயுளையும் சரியாக கொடுக்க ஆசி வழங்கி நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டத்தையும் சனி பகவானுக்கு கொடுத்தார்.
இப்படியாக சனிபகவானின் அவதாரம் நிகழ்ந்தது.
தனக்கு கிரக அந்தஸ்து கொடுத்த சிவபெருமானின் ஜென்ம சனி காலகட்டத்தில் அவரையே மண்டையோட்டில் இரந்துண்டு (பிச்சை எடுத்து) வாழ வைத்தார் சனி பகவான் என்பது செவிவழிக் கூறும் செய்தி. அதனாலேயே அவர் நீதிமான்.
சனியின் காரகத்துவம் மற்றும் குணாதிசியம்.
எந்த ஒரு ஜாதகத்திலும் சனிபகவான் நேரடியாக வலுப்பெற கூடாது.
அதாவது ஒரு ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி, உச்சம், திக்பலம் போன்றவற்றை நேரடியாக அடையக்கூடாது.
புரியும்படி சொன்னால் ஒரு சுபகிரகம் வலுவாக இருந்தால், அது அதன் காரகத்துவத்தை மிகைபடுத்தி செய்யும். (லக்ன ஆதிபத்யத்தை பொருத்து)
சனி என்பவர் யார்? இயற்கையில் பாவி.
சனி வலுவாக இருக்கும் பொழுது சனியின் வேண்டாத குணங்களான மனிதனுக்கு தேவைப்படாத, உடல் உழைப்பு, துக்கம், கவலை, அழுக்கு, அவமானப்படுவது, நோய், வறுமை, கடன், குடி, கீழ்நிலைப் பெண்களின் சகவாசம், விபத்து போன்ற எதிர்மறை பலன்களை அவரது தசாபுத்திகளில் கொடுப்பார்.
மேற்கூறியதை எந்த ஒரு மனிதனும் விரும்பமாட்டான். உண்மைதானே!
லக்னாதிபதியாகவே இருந்தாலும் சூட்சம வலு எனப்படும் சுபகிரக தொடர்பு பெற வேண்டும்.அல்லது
3, 6, 8 ,12 ல் மறைந்து சுப தொடர்பு, சேர்க்கை, பார்வை ஏற்பட வேண்டும்.
ஆட்சி, உச்சம் பெற்றால் வக்ரம் பெற வேண்டும். மறைந்து நீசம் பெற்றால், சுபகிரக தொடர்பில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு நல்ல பலனைக் கொடுக்கும்.
பொது சுபர் எனப்படும் குரு, சுக்கிரன் புதன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் லக்ன சுபர்களின் தொடர்பு பெறுவது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த அமைப்பில் இருந்தால் மட்டுமே சனி யோகம் செய்யும்.
லக்ன சுபராக இருந்து, அவர் பார்த்தால் மிக நல்லது.
7ல் திக் பலம் பெற்றால் சுப கிரக தொடர்போ, இணைவோ, பார்வையோ கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஒரே வரியில் சொல்வதென்றால் பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் சுப தொடர்பு ஏற்படும்போது நல்ல பலன்களை கொடுக்கும்.
இதற்கு எதிர்மறையாக சனிபகவான் ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், திக் பலம் பெற்று பாவிகள் எனப்படும் செவ்வாய், ராகு, சூரியன் போன்ற கிரகங்களுடன் இணைந்தோ, பார்வை பெற்றோ சுப தொடர்பில்லாமல் வலுவாக இருக்கும் பொழுது தனது தசா புக்தி காலகட்டங்களில் கடுமையான கெடுபலனை கொடுப்பார்.
உதாரணமாக லக்னம் சிம்மம். லக்னாதிபதி சூரியன் 3ல் நீசம். சிம்ம லக்கினத்திற்கு ஆறில், தனித்து ஆட்சி பெறும் சனி பகவான், சுப கிரக தொடர்பில்லாமல், மிதுனத்திலிருந்து நீச செவ்வாய் பார்க்க இந்த அமைப்பில் சனி திசை நடத்தினால், தாங்க முடியாத கடன், நோய் ஏற்பட்டு, வீடு மனை, வண்டி, வாகனம் அனைத்தையும் விற்று தெருவில் தள்ளிவிடும்.
இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
கோட்சாரம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலம் வரை, குறிப்பிட்ட கிரகங்கள் ஒரு ராசியில் இருப்பதற்குப் பெயர் கோச்சாரம் எனப்படும்.
இதில் சனியின் தாக்கத்தை அதிகளவு உணரமுடியும்.
குறிப்பாக ஏழரைச் சனி ,அட்டமச் சனி நடக்கும் போது நல்ல திசா புத்திகள் உங்கள் சுயஜாதகத்தில் சென்று கொண்டிருந்தாலும் 40% பலனை முடக்கிவிடும்.
உங்கள் சுய ஜாதகம் யோகமாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனியும் அட்டமச் சனியும் பெரிய அளவில் கெடுதல் செய்யாது. பயப்பட வேண்டாம்.
உங்கள் சுய ஜாதகம், முதலில் பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தில் நடக்கும் தசா புத்தியை முதலில் கணக்கில் கொள்ளுங்கள்
மனித வாழ்வில் சனியின் தாக்கத்தை உணரக்கூடிய காலகட்டங்கள்::
சனி என்ற வார்த்தையை கேட்டவுடன் சப்த நாடிகளும் ஒரு நொடி கலங்குவதை அதை அனுபவித்து வந்தவர்கள் மட்டும் உணரமுடியும்.
குறிப்பாக ஏழரைச் சனி, அட்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள், நடந்தவர்களிடம் கேட்டால், கதை கதையாக சொல்லுவர்.
என் தனிப்பட்ட வாழ்க்கையில், சனியால் நான் அனுபவித்து உணர்ந்த பலன்களை வைத்தே மிகவும் நேர்மையான முறையில் இந்த பதிவை இடுகிறேன்.
ஒருசிலருக்கு படிக்கும்போது சில இடங்களில் பயப்படுவது போல் தோன்றினாலும், எதிர்மறையாக தோன்றினாலும் அவர்கள் படிப்பதை நிறுத்தி விட்டு தாராளமாக பதிவை கடந்து செல்லலாம்.
மருந்து கசக்கிறது என நினைத்தால் நோய் எப்படி குணமாகும்?
இது உங்கள் நலனுக்காகவே பதிவிடப்பபடுகிறது.
நோய் முற்றி விட்டால் யாரும் காப்பாற்ற முடியாது. அதுபோல் வருமுன் காப்பதற்காகவே இப்பதிவு.
இனி சனிப்பெயர்ச்சியின் பொதுப் பலன்களில் உலக, இந்திய மற்றும் தமிழ்நாட்டு அளவில் நடக்கும் மாற்றங்களை காண்போம்.
காலபுருஷ ராசி சக்கரத்தின்படி பத்தாம் இடமான மகரத்தில் தன் சொந்த வீட்டில் சனிபகவான் 24.1.20 காலை 9.57 க்கு பெயர்ச்சியாகி ஆட்சி ஆகிறார்.
ஒரு ஜாதகத்தில் பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். சனி தொழில் காரகன் என்பதால் உலகளாவிய அளவில் தொழில் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
சனியின் காரக தொழில்களான இரும்பு, நிலக்கரி, சுரங்கம் பழைய உபயோகமற்ற பொருட்கள், குப்பை கழிவுகள், கனரக இந்திர தொழில்கள், எண்ணெய் மற்றும் பெட்ரோல், தார் கருப்பு நிற உற்பத்தி பொருட்கள், இறைச்சி கடை இவைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
பொருளாதார மந்தநிலை ஏற்படும்.
பெட்ரோல் விலை குறையும். கனரக வாகனங்களின் உற்பத்தி குறைந்து அதற்கு பதிலாக பேட்டரியில் தயாராகும் கார் உற்பத்தி அதிகரிக்கும்.
சனிக்கு 3, 7, 10ம் பார்வை உண்டு.
சனி தன் மூன்றாம் பார்வையால் 12ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் சேமிப்பு இருக்காது.
நாலாம் இடமான சுக ஸ்தானத்தை ஏழாம் பார்வையால் பார்ப்பதால் சோறு கண்ட இடம் சொர்க்கம் என இருந்த சோம்பேறிகள் உழைக்க நேரிடும்.
உடலால் உழைத்து பிழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் ஏழாம் இடத்தை பார்ப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
ஏழாமிடம் களத்திர ஸ்தானம் என்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து செல்லும்.
மகர ராசியில் சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடம், சந்திரனின் நட்சத்திரமான திருவோணம், செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் இந்த 3 மூன்று நட்சத்திரமும் உள்ளது.
இந்த மூன்று நட்சத்திரத்திற்கு அதிபதியும் சனிக்கு எதிரி என்பதால் வேலை பார்ப்பவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
குறிப்பாக செவ்வாய் நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது தொழில் புரட்சி வெடிக்கலாம்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவை செய்யச் சொல்லி சில இடங்களில் போராட்டமும் வன்முறையும் வெடிக்கும்.
சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருங்கள்.
காவல்துறையால் கைதாகி, கம்பி எண்ணி, களி நிலைமையும் வரும்.
சனி நீதிமான் என்பதால் தொழில் துறையில் மோசடி மற்றும் கலப்படம் செய்பவர்கள் கையும் களவுமாக பிடிபட்டார்.
வரி கட்டாமல், வரி ஏய்ப்பு செய்பவர்கள், வக்கீலுக்கு வாய்தாவிற்காக பணம் கொடுக்க நேரிடும்.
சனி பகவானிடம் உங்கள் சவால் எடுபடாது.
தனக்கு மேலுள்ள அதிகாரிகளால் சிலநேரம் வேலையில் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் எல்லாவற்றையும் அனுசரித்து செல்வது நல்லது.
கொடி பிடித்து, கோஷம் போட்டால் கொட்டிக்க சோறு கிடைக்காது. கவனம்.
வேலை பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகும்.
அவரவர் பார்க்கும் வேலைக்கு ஏற்ப இது அமையும்.
கணினித்துறையில் இருப்பது போன்று திடீரென மொத்தமாக வேலையை இழக்கும் அபாயமும் உண்டு.
சொந்தத் தொழில் செய்பவர்கள் கடுமையாக உழைக்க நேரிடும்.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டை பொருத்தவரை புதிய தொழில் முதலீடுகள் உருவாகும்.
இவையெல்லாம் சனியுடன் குரு இணைவதற்கு முன்பு நிகழும்.
தனிப்பட்ட ஒவ்வொரு ராசிக்கும் மிக துல்லியமான, மிக விரிவான சனி பெயர்ச்சி பலன்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. படிப்பதோடு மட்டுமில்லாமல் பாதுகாத்தும் கொள்ளுங்கள்.
பலரும் பயனடைய, படித்துவிட்டு பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய .
Comments are closed.