மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020
மேஷ ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள். 70/100.
நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
கால புருஷனின் முதல் ராசியான மேஷ ராசிக்கு ,கால புருஷனுக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சனி அமர இருப்பதால் தொழில்துறையில் பெரிய அளவு மாற்றங்கள் உண்டாகும்.
பத்தாம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக 12-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 7ம்இடத்தையும் பார்ப்பார்.
உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள்.
ஜீவனத்திற்கு அடிப்படையே தொழில்தான்.
இங்கு கொடுக்கப்படும் பலன்கள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில், சனி எந்த இடத்தில் இருந்த போது, என்ன மாதிரியான பலன்களை எனக்கு செய்தார் என்பதை அனுபவத்தின் வாயிலாகவும், ஜாதகம் பார்க்கும் போது ஜாதகர் உணர்ந்ததையும் சேர்த்தே நேர்மையான பதிவாக கொடுக்கிறேன்.
என்னுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி வந்தபோது, ஒரு மருந்து கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட 10 மாவட்டங்களுக்கு மேனேஜராக பணியாற்றியதால் , காலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையான வேலை.பஸ்ஸிலேயே பயணம். அலுப்பு. உடல் சோர்வு.
வேலை மட்டுமல்லாது டார்கெட் பிரஷர்.
வெளியூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீடு. மார்க்கெட்டிங்கில் இருந்தால் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது.
குதிரைக்கு கண்களை கட்டியது போல், ஒரு நேர்கொண்ட பார்வை மட்டுமே.
நித்தமும் நிம்மதி இல்லாத வாழ்க்கை.
மாத கடைசியான 25ஆம் தேதி வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. கண்களில் ரத்தக் கண்ணீர் வரும். உச்சகட்ட டார்கெட் பிரஷர்.
( மார்க்கெட்டிங்கில் உள்ள அனைவரும் இதை நன்கறிவர்.)
மேற்சொன்ன அமைப்பு முழுவதும், பத்தாமிடத்தில் சனி எனக்கு இருந்தபோது நடந்தது.
மற்றொரு ஜாதகத்தில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த airtelல் பணிபுரிந்த ஒருவர், Jio வரவினால் ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இது கடந்த சனிப்பெயர்ச்சியில் வந்த மீன ராசி நேயர் ஒருவரின் நிலை.
பொதுவாக பத்தாம் இடத்திற்கு சனி வரும்போது உடல் உழைப்பை அதிகப்படுத்தி, ஓய்வறியாமல் உழைக்க வைப்பார்.
சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் குறையும். கண்ணெதிரே, கைக்கு எட்டிய ஆர்டர்கள் கைவிட்டு போகும்.
பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அனுசரித்து செல்வது நல்லது.
எந்த தொழில் செய்தாலும் O T பார்க்க நேரிடும்.
புதிய தொழிலை அளவோடு முதலீடு செய்து துவங்குவது நல்லது. ஓனர் என்ற இறுமாப்போடு, உழைக்காமல் இருந்தால் உண்டக்கட்டி கூட கிடைக்காது.
சனி இயற்கையில் பாவி. தொழில்காரகன். உடலுழைப்பை கடுமையாக கொடுப்பதில் வல்லவன்.
சொந்த தொழில் செய்பவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பணி செய்கிறீர்களோ அதற்கேற்ற பலனை சனிபகவான் நிச்சயம் கொடுப்பார்.
சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 12ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால், எவ்வளவு லாபம் வந்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு செலவாகி விடும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.
4-ஆம் இடமான சுக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
10ம் பார்வையால் ராசிக்கு ஏழாம் இடத்தை பார்ப்பதால், கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும், கூட்டுத் தொழில் செய்பவர்கள் இடத்தில், எச்சரிக்கையும் தேவை.
கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் கொடுக்காமல் தொழில் செய்ய முடியாது என்பதால் அளவோடு குறைந்த அளவில், மிக நம்பிக்கையானவர்களுக்கு மட்டும் கடன் கொடுப்பது நல்லது.
பெண்கள் வீட்டு வேலைகளை சரியாக செய்வது நல்லது.
சனி பகவான் சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் கிரகம் என்பதால் துவைப்பது, சமைப்பது, வீட்டை சுத்தமாக வைப்பது, என பெண்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்தால் கணவன் – மனைவிக்குள் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.
மாணவர்கள் பள்ளியில் பயிலும் பாடங்களை சேர்த்து வைக்காமல் அன்றன்றைய பாடங்களை அன்றே செய்வது நல்லது.
புதிதாக கல்லூரியில் படித்து முடித்தவர்கள் ,கிடைத்த வேலையை தற்போது ஏற்றுக் கொள்வது நலம். பதவி உயர்வை எதிர் பார்க்க முடியாது.
அனுபவம் இல்லாமல் புது வேலையை தொடங்குவது தற்போது சரியில்லை என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் ,தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதுபோல் அனுபவமற்ற தொழில்களில் இறங்கி, ஆழம் பார்க்க வேண்டாம்.
மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ஆயிரம் இரண்டாயிரம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக ,வேலை இடமாற்றம் தற்போது வேண்டாம்.
உங்கள் சுய ஜாதகத்தில் சரியில்லாத தசாபுக்திகள் நடந்தால் , கவுண்டமணி கடலில் இறங்கி கப்பலை தள்ளிய கதையாகிவிடும். கவனம்.
இருப்பதை விட்டு, பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
சிலருக்கு சுய ஜாதகத்தில் தசா புக்திகள் சரியில்லாமல் இருந்தால் பணி மாற்றமோ, பணியிடை நீக்கமோ, அல்லது பணி நீக்கமோ ஏற்படலாம்.
வெளிநாடு செல்வோர் நல்ல அனுபவம் வாய்ந்த ஏஜென்டுகளை அணுகி பணத்தை கொடுப்பது நல்லது.
பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால் பணம் கொடுக்க வேண்டாம்.
மீறி் கொடுத்தால் பிடிக்காத வேலையை வேண்டாவெறுப்பாக செய்யும் நிலை ஏற்பட்டு, விரைவில் வேலையை விட்டு தானே வெளியேறும் நிலை ஏற்படும்.
வயதானவர்கள் தங்கள் உடல்நிலையை கவனிப்பதோடு, தேவையான வேலைகளைத் தானே ஓரளவு செய்துகொள்வது நல்லது அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டாம்.
மேலும் 2020 வருடம், கடைசி வரை குரு 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
அடுத்த குரு பெயர்ச்சியின் போது, குருவோடு சனி இணைந்து நீசபங்கம் மற்றும் சுபத்துவம் அடைவதால் அடுத்த வருடத்திற்கு மேல் தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் கண்டிப்பாக படிப்படியாக குறையும்.
செவ்வாயின் மூர்க்க குணத்தை கொண்ட கொண்ட மேஷ ராசிக்காரர்கள், எந்த சூழ்நிலையிலும் வேலையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
இல்லையென்றால் வேலையில் விரக்தியின் விளிம்பிற்கே செல்லும் நிலை ஏற்படும்.
வேலையில் ஓபி அடிப்பவர்கள், வேலையில் தில்லுமுல்லு செய்பவர்கள், வரி கட்டாதவர்கள், கலப்படம் செய்யும் கயவர்கள் கையும் களவுமாக பிடிபட்டு களி தின்னும் நிலைமை ஏற்படும்.
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் வேலைப்பார்க்கும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
உங்கள் சுய ஜாதக அமைப்பு சரியில்லை என்றால் வேலை பறிபோகும் நிலையும் ஏற்படும்.
- 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும்.டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது தொழில் புரட்சி வெடிக்கலாம். கொடி பிடித்து கோஷம் போடும் நிலை ஏற்படும். கவனம்.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் தொழிலில் ஓரளவு நிலைமை சீர்படும்.
கடன் ஏற்பட்டிருந்தால் கடன்கள் அடையக்கூடிய காலகட்டம்.
தொழிலில் ஓரளவு நல்ல லாபம் உண்டு.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள்:
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
இந்த காலகட்டத்தில் வேலையில் சற்று நிம்மதி ஏற்பட்டாலும் தொழில் முடக்கம், சுணக்கம் ஏற்படும். கடுமையான அலைச்சல், மன உளைச்சல் குறையும். அதே நேரத்தில் வியாபாரமும் மந்தமாகும்.
சுணக்கம் ஏற்படும். கடுமையான அலைச்சல், மன உளைச்சல் குறையும். அதே நேரத்தில் வியாபாரமும் மந்தமாகும்.
அதே நேரத்தில் வியாபாரமும் மந்தமாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று இளைப்பாறும் நேரம் இது.பணிச்சுமை குறையும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
இதைப்படிக்கும் மேஷ ராசி அன்பர்கள் உங்கள் கடந்த கால அனுபவங்களை கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்.
ஓம் நமசிவாய
Comments are closed.