ரிஷப ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020
ரிஷப ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள். 75/100.
நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம் ,தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.
29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இக்காலகட்டங்களில் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
ரிஷப ராசிக்கு முழு ராஜ யோகாதிபதியான சனிபகவான் இதுநாள் வரை அட்டம சனியாக எட்டிலிருந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.
9ம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் ஆட்சி ஆகும் சனி, அங்கு உத்திராடம் ,திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.
அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக 11-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 6ம்இடத்தையும் பார்ப்பார்.
அஷ்டமசனி ஆம், என்னுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது அஷ்டமசனி காலகட்டம்தான்.
எல்லோரையும் போல நானும் ஒரு சாதாரண மனிதனாகவே இருந்து வந்தேன்.
சனி என்பவர் யார்? அவரின் பலம் என்ன? என்பதை புரிய வைத்த காலம் அஷ்டம சனி காலகட்டமே.
அஷ்டமச்சனி காலகட்டங்களில் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜோதிடரிடம் ஓடும் நிலை ஏற்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் அதிகப்படியானவர்கள் ரிஷப ராசியினரே.
வயதுக்கு ஏற்றபடி அஷ்டமசனி அதன் பலனை தவறாமல் கொடுத்திருக்கும்.
ரிஷப ராசியினர் அட்டமச் சனி காலகட்டங்களில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்து விட்டனர்.
கடந்த தீபாவளி அன்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
5000 வெடி, சரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மறுபடியும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதே இடத்தில் அதே வெடி இருந்தது. என்னடா 5000 வெடி வெடிக்கலையா எனக்கேட்டேன்.
இல்லடா இது இப்ப வெடிக்கிறதுக்கு வாங்கல.
சனிமாறும் அன்றைக்கு வெடிக்கிறதுக்கு வாங்கி இருக்கேன் என சொன்னவுடன் சிரிப்பு வந்துவிட்டது.
நண்பன் ரிஷபராசி. அட்டமச் சனி கடுமையாக ஆட்டிப்படைத்தது. வெடி போட்டு கொண்டாடக் கூடிய அளவிற்கு இருக்கிறதென்றால் அஷ்டமசனி எப்படி இருந்திருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள்.
மீன லக்னம். சுக்கிர திசை நடப்பு அட்டமச் சனி இணைவு வேறு. சொல்லனா துயரத்தில் நண்பர் வாடி வாதங்யிருந்தார்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடுமையான காலகட்டம் அட்டம சனி என்றால் அது மிகையாகாது.
இனி நீங்கள் எந்த தொழிலில் இருந்தாலும் அந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
குறைந்த முதலீட்டில் சொந்த தொழில் தாராளமாக ஆரம்பிக்கலாம்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
மாணவர்கள் படிப்பில் இருந்த அரியர்ஸ் கிளியர் ஆகும்.
நம் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் நபர்கள் யார் என்று காட்டிக்கொடுத்து இருக்கும்.
போதை தெளிந்த ஆசாமி போல் வாழ்க்கையில் புத்துணர்ச்சியுடன் உங்கள் பயணத்தை தொடருங்கள் கண்டிப்பாக வெற்றியே.
இளம் பருவத்தினருக்கு எதிர்பாலினம் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும்.
சிலருக்கு காதல் என்ற பெயரில் கண்ணீர் வடிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கும்.
கள்ளக்காதலால் கசமுசா ஏற்பட்டு காவல்துறையினரால் கட்டு போட சிலருக்கு நேர்ந்திருக்கலாம்.
கடன்கள் அடையக்கூடிய காலகட்டம் என்பதால் முயற்சிசெய்தால் முழுக் கடனையும் அடைக்க முடியும்.
உடல் நிலை சீராகும்.
கணவன் மனைவிக்கிடையே காதல் பெருகும்.
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ரிஷப ராசிக்கு சனி தர்மகர்மாதிபதி என்பதால் 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரும் போது நல்ல பலன்களை அதிகமாக கொடுப்பார்.
சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சொத்துக்கள் கைகூடும் காலம் இது.
குருபகவான் தற்போது எட்டாம் இடத்தில் இருப்பதால் 2020 வருடம் முழுவதும் பணம் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் மந்த நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமுடனிருப்பது நல்லது. அட்டம சனி விலகுவதே பெரிய ஆறுதல்.
சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.
சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.
இந்த காலகட்டங்களில் தந்தை மகன் உறவு பாதிக்கக்கூடும்.
01. 01. 2021 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.
சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து, சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன் – மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
சனியின் வக்ர காலங்கள்:
11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் தொழிலில் எச்சரிக்கை தேவை.
பழைய பிரச்சினைகள், கடன் தொல்லைகள் தலை தூக்கலாம். கவனமுடனிருப்பது விரயத்தை தவிர்க்கும்.
சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :
7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை
இந்த காலகட்டத்தில் வேலையில் சற்று நிம்மதி ஏற்பட்டாலும் தொழில் முடக்கம், சுணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டு விலகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று இளைப்பாறும் நேரம் இது. பணிச்சுமை குறையும்.
இதயமே நெருங்கும் அளவிற்கு இன்னல்களில் இருந்த நீங்கள், இனிமையான, இதமான வாழ்க்கை வாழப் போகிறீர்கள். இனி எல்லாம் ஜெயமே.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
இதைப்படிக்கும் மேஷ ராசி அன்பர்கள் உங்கள் கடந்த கால அனுபவங்களை கமெண்ட்டுகளாக பதிவிடுங்கள்.
இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.
ஓம் நமசிவாய
Comments are closed.