சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2022 | Sani Peyarchi 2020 Vrischika Rasi

விருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020

நிகழும் மங்களகரமான தமிழ் விகாரி வருடம், தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடம் ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி காலை 9.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு திருக்கணிதப்படி பெயர்ச்சி ஆகிறார்.

29 .4 .2022. காலை 7.53 மணி வரை மகரராசியில் தங்கியிருந்து தன்னுடைய பணிகளை கவனிக்க இருக்கிறார்.

இக்காலகட்டங்களில் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான நல்ல, தீய பலன்களை கொடுப்பார் என, வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

விருச்சிக ராசிக்கு சனிபகவான் தற்போது 2ம் இடத்தில் இருந்து 3ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

3ம் இடத்தில் தன் சொந்த வீட்டில், ஆட்சி ஆகும் சனி, அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்வார்.

அது போல் சனி தன்னுடைய 3 பார்வையாக -5ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் 10ம்ஆம் பார்வையால் 11ம்இடத்தையும் பார்ப்பார்.

ஒளி பிறந்துவிட்டது. நான் தப்பிக்க வழி பிறந்து விட்டது என்பதை ஒவ்வொரு விருச்சிக ராசிக்காரர்களும் உணரும் நேரம் இது.

உங்க வீட்டு அடியா? எங்க வீட்டு அடியா? துவைச்சு துவம்சம் பண்ணிருச்சு கடந்த 71/2 வருஷமா.

ஊறவச்ச அடிச்சதுக்கு மட்டுமில்லாம, உலககைல குத்த வேற செஞ்சேல. கெளம்பு முதல்ல.

இனி கண்ணீர் கானல் நீராகும்.தொட்டது துளிர்விடும். பட்ட மரமும் படரும்.

ஏழரை சனி உங்களை பட்டை தீட்டிய வைரமாக மாற்றியிருக்கும் என்றால் மிகையில்லை.

ஏழரை சனி, இனி அவரவர் வயதுக்கு ஏற்றபடி நன்மைகளைக் கொடுக்கும்.

தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். அது வேலையாக இருந்தாலும் சரி. சுய தொழிலாக இருந்தாலும் சரி.

லாபம் பெருகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறும் . சொந்த தொழில் தொடங்க ஆரம்பிப்பவர்கள் உங்கள் சுய ஜாதகத்தை அனுசரித்து அதற்கேற்றபடி அமைத்துக் கொள்வது நல்லது. வெளிநாடு செல்ல முயல்பவர் தாராளமாக முயற்சிக்கலாம்.

போட்டித் தேர்வு எழுதி தோற்றவர்கள், தேர்ச்சி பெற்று நிச்சயமாக நல்ல பதவியில் அமர்வார்.

குருபகவானும் சாதகமான நிலையில் இருப்பதால் பணம் 2021 முழுவதும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும்.

மாணவர்கள் சிலர் மாநில அளவில் ரேங்க் பெறும் நிலை ஏற்படும்.

நல்ல மதிப்பெண்ணுடன் தேறியவர்களுக்கு உடனடியாக கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணி உயர்வு ,ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கப்பெறும்.

பருவ வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும்.

ஒரே வருடத்தில் குவா குவா சத்தமும் கேட்கும்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.

கடன்கள் அடையும். வாராக் கடன்கள் வசூலாகும்.

கடுமையான மன உளைச்சலால் அவதிப்பட்டவர்களுக்கு மருந்தாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

உடல் நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.

வயதானவர்களை வருத்தி வந்த உடல்நிலை சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கி, கோர்ட் வாசலில் இருந்து இறங்கி, குடும்பத்தில் விளக்கேற்றும் நேரமாக அமையும்.

சனி மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் நுழையும்.

சூரியனின் நட்சத்திரத்தில் 22. 1. 2021 வரை இருக்கும்.

இந்த காலகட்டங்களில் தந்தை, மகன் உறவு பாதிக்கக்கூடும். 23. 1. 21 முதல் சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் பயணிப்பதால் எல்லா விஷயங்களிலும் ஓரளவு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் சுணக்கம் ஏற்படும். டென்சன் உண்டு. 18. 2 .2022 வரை திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பார்.

சந்திரனின் நட்சத்திரத்தை கடந்து,சனி பெயர்ச்சி ஆகும்வரை செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது கணவன்-மனைவி கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.

சனியின் வக்ர காலங்கள்:

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் எல்லாம் சுபமாக அமையும்.

குறிப்பாக தொழில் மற்றும் உடல் நலத்தில் கவனம் தேவை

சனிப்பெயர்ச்சி ஆகும் நேரத்திலேயே சனிபகவான் அஸ்தமனத்தில் இருப்பதால் (சூரியனுக்கு முன், பின் 15 டிகிரி) சனியின் அஸ்தமனம் முடியும் நாளான 30.1.20 அன்று கிட்டத்தட்ட ஆறு நாட்கள் கழித்து மேற்சொன்ன பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

சனியின் அஸ்தமன காலகட்டங்கள் :

7.1. 2021 முதல் 10. 2 .2021 வரை.
19.1.2022 முதல் 21.2.2022 வரை

சனி அஸ்தமனமாகும் காலகட்டங்களில் புதிய கடன்கள் வாங்க வேண்டாம்.

கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அதே நேரத்தில் உங்கள் சுய ஜாதக அமைப்பே முழுமையாக பேசும் என்பதால் உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசீலனை செய்து அதற்கேற்றபடி முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:

உங்கள் குலதெய்வத்தை மாதமொருமுறை வழிபட்டு வரவும். வீட்டில் தினசரி வழிபாடுகளை எப்பொழுதும் போல் மேற்கொள்வது நல்லது.

பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால் பலரும் பயனடைய பதிவை ஷேர் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய

Blog at WordPress.com.

%d bloggers like this: