நவ கிரகங்களில் மிக சுறுசுறுப்பான கிரகம் சந்திரன் . முதலாளியான சூரியனுக்கு, மிக பிடித்தமான வேலைக்காரன் யாருன்னா? இந்த சந்திரன் தான்… ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக் கூடிய சந்திரன், ஒரு ராசி மண்டலத்தை இருபத்தி ஏழே நாளில் சுற்றி வந்து விடுவார்.
முதலாளியான சூரியனுக்கு பிடிக்காத வேலைக்காரன் யாருன்னா? அவர் வேறு யாரு? சனி பகவான்தான். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் ..ஒரு ராசி மண்டலத்தை, பன்னிரண்டு ராசிகளை சுற்றி வர 30 வருடங்கள் தேவைப்படுகிறது சனீஸ்வர பகவானுக்கு.. ரொம்ப சோம்பேறியான மந்தன், முடவன் என்று சொல்லப்படக்கூடிய வேலைக்காரனை எந்த முதலாளிக்கு தான் பிடிக்கும்???
அப்பேர்பட்ட சுறுசுறுப்பான சந்திரனின் ராசியில் பிறந்த நீங்கள் ரொம்ப சுறுசுறுப்பானவர்கள்…. பாசக்கார பய புள்ளைகள்… உங்கள் ராசிநாதனான சந்திரன் மனதை ஆளக்கூடிய கிரகம் …உங்கள் ராசிநாதனான சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரட்டை நிலைகள் உள்ளது ..இவர் வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாவராகவும் இருப்பார் ..
சந்திரனின் வளர்பிறையில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை மன உறுதியுடன் முடித்துவிடுவார்கள். ஒரு காரியத்தை முடித்து போட்டு தான் வேற வேலை(ஜோலி) பார்ப்பார்கள்.. இவர்களை, இந்த ராசிக்காரர்களை நம்பலாம். இவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்கலாம்.
உங்கள் ராசியில் சந்திரன் ஆட்சி பலம் பெறுவதால் நீங்கள் தாய் பாசம் மிக்கவர்கள் மன உறுதி மிக்கவர்கள் சுறுசுறுப்பு உள்ளவர்கள். பொது சேவையில் ஈடுபாடு உள்ளவர்கள்.. எல்லோரிடமும் பாசமாகவும் பரிவுடனும் பழகக் கூடியவர்கள்.. தாய் உள்ளம் கொண்டவர்கள் கடக ராசியினர்..
உங்களுக்கு கடந்த இரண்டரை வருடங்களாக நேரம் ரொம்ப நன்றாக இருந்தது.. கடந்த இரண்டரை வருடங்களாக குரு பலம் இருந்தது.. சனி பலம் இருந்தது.. ராகு கேது பலம் இருந்தது ..கடந்த காலங்களில் நான் சிசேரியன் குழந்தைகளுக்கு பெரும்பாலானவர்களுக்கு கடகலக்னம் வைத்து கொடுத்தேன் ..அந்த அளவுக்கு நேரம் ரொம்ப நன்றாக இருந்தது
இது வரையிலும் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் 24.. 1 ..2020 முதல் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வர இருக்கிறார் நவம்பர் மாதம் முதல் குரு பகவானும் உங்களுக்கு சாதகமற்ற ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
ஏழாமிடத்திற்கு வரும் சனிபகவான் அங்கு அவர் சொந்த வீட்டுக்கு வரவிருக்கிறார் ஆட்சி பலம் பெறுகிறார் உங்கள் ராசிநாதன் என்று சொல்லப்படக்கூடிய சந்திரனுக்கு சனி பகை கிரகம். ஏழாம் இடத்திற்கு ஆட்சி பெறும் சனி பகவான் அந்த இடத்தில் கண்டகச் சனி என்று பெயர் பெறுகிறார்..
பொதுவாக கடக ராசிக்காரர்களுக்கு சனி ஏழாம் இடத்திற்கும், அட்டம ஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய எட்டாம் இடத்துக்கும் பொறுப்பு வகிப்பதால் இவர்களுக்கு நல்ல மனைவி அமைவதில் தடை உள்ளது.. கடக ராசிக்காரர்களுக்கு மனைவி வகையில ஏதாவது ஒரு குறை இருக்கவே செய்கிறது …கடகராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக வருவதாலும், உங்கள் ராசிநாதனான சந்திரனுக்கு, களத்திர காரகன் சுக்கிரன் , பகைவராக இருப்பதால் மனைவி வகையில் இவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை.
உங்கள் ராசிக்கு 7 க்கு வரும் சனி பகவான் அங்கு ஆட்சி பலம் பெறுவதால் சனி மூத்த பெண்கள், வேறு ஜாதிக்கார பெண்கள் மூலமாக உங்களுக்கு பிரச்சினை தருவார்.. அவர்கள் மூலமாக பண விரயங்களும் அலைக்கழிப்புகளும் தொல்லைகளும் உங்களுக்கு இருக்கும்.
ஏழில் சனி ஆட்சி பலம் பெற்று வலுவாக உங்கள் ராசியை பார்ப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். தன்னம்பிக்கை லெவல் ரொம்ப கீழே போயிரும்.. உங்கள் ராசியை சனி பலமாக பார்ப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் ராசியை சனி வலுவாக பார்ப்பதால் நீங்களே ஒரு வருட காலத்திற்கு யார் பேச்சையும் கேட்காத பிடிவாதக்காரராக இருப்பீர்கள்..
குருபகவான் 6 இல் இருப்பதாலும் சனி ஏழில் இருந்து உங்கள் ராசியை வலுவாக பார்ப்பதாலும் பணவரவுகளில் தடை இருக்கும்.. பற்றாக்குறை இருக்கும்.. அதனால்கடன் வாங்க வேண்டிய தேவைகள் ஏற்படும்.
சனி ஏழாம் இடத்தில் வலுவாக இருப்பதால் மனைவி வகையில் தொல்லைகளை அளிப்பார்.. மனைவி ஸ்தானத்தைக் கெடுத்து கணவன் மனைவி ஒற்றுமைக்குறைவை அன்னியோன்னிய குறைவை ஏற்படுத்துவார்.. சனி இருக்கும் இடத்தைக் கெடுப்பார் என்பது பொதுவிதி.
சனி 7ல் இருப்பதால் கூட்டாளிகள் மனைவி சொந்தபந்தம் இவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டி வேண்டி வரும். சனி ஏழில் இருந்து உங்கள் ராசியை பலமாக பார்ப்பதால் எந்த ஒரு காரியமும் ஈசியாக நடக்காது.. பலமுறை அலைந்து திரிந்து, கஷ்டப்பட்டு ஒருமுறைக்கு பத்து முறை நடந்து, பின் அந்த காரியம் பெரும் அலைக்கழிப்பின் பேரில்தான் நடக்கும்.
பெரிய கேப்பிட்டல் போட்டு புதிய தொழில் முயற்சிகளை இந்த கடக ராசிக்காரர்கள் செய்யக் கூடாது… தொழிலை விரிவு படுத்த கூடாது.. ஏன் என்றால் எதிர்காலத்தில் இவர்களுக்கு அஷ்டமச்சனி வரும் என்பதால் பெரிய மூலதனம் போட்டால் மூலதனம் திரும்பாது.. எனவே இருக்கும் வேலையை, இருக்கும் தொழிலை நல்ல முறையில், சிறப்பாக கவனமுடன் செய்து வந்தாலே நலம் விளையும்.
கிடைக்கும் வேலையில் திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.. எக்காரணம் கொண்டும் வேலையை விட்டுவிட வேண்டாம்.. அப்புறம் வேலை தேடுவதே உங்களுக்கு வேலையாக போய்விடும்.. தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம்..ஆழக் கால் வைத்து இருக்கும் தொழிலை நன்றாக செய்து வாருங்கள்
மாணவர்கள் நன்கு கவனமுடன் படிக்க வேண்டும்… ஒருமுறைக்கு இருமுறை பலமுறை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்… அப்போதுதான் மனதில் பதியும் …பள்ளியில் கல்லூரியில் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை அன்றே அன்றே முடித்துவிட வேண்டும். நாளைக்கு படிக்கலாம் நாளைக்கு எழுதலாம் என்று தள்ளிப் போடக் கூடாது.
வயதானவர்களுக்கு சனி ராசியைப் பார்ப்பதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீட்டிலுள்ள பெண்மணிகளுக்கு வேலைப் பளு அதிகரிக்கும் ..ஆபீசிலும் வேலை செய்து, வீட்டிலும் வேலை செய்து கடும் வேலை பளுவினால் துன்பப்படுவார்கள். அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்..
சனி வலுவாக ராசியை பார்த்து தனது மூன்றாம் பார்வையால் ஒன்பதாம் இடமான தகப்பன், பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோப்பில் (பாக்கெட்டில்) இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.. வீண் விரையம் ஆகும் என்பது பொருள்..
சனி 9-ஆம் இடமான தகப்பன்ஸ்தானத்தை பார்ப்பதால், தகப்பனாருக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் தகப்பனாருக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் தேவை.
அதுமட்டுமில்லாமல் சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் நான்காம் இடமான தாய் ஸ்தானத்தையும் பார்த்துவிடுவார் என்பதால் ஒரே சமயத்தில் தாய் மற்றும் தகப்பன் ஸ்தானத்தையும் பார்த்து, உங்களையும் பார்த்து விடுவதால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தராது. சனியின் மூன்றாம் பார்வை ஒன்பதாமிடத்திலும் , சனியின் ஏழாம் பார்வை உங்கள் ராசியின் மீதும், சனியின் 10ம் பார்வை தாய் ஸ்தானமான, சுகஸ்தானமான, நான்காம் இடத்தில் விழுவதாலும்
உங்களுக்கே சுக குறைவுகளையும், தாய், தந்தை பகை, தாய் தந்தை பிரிவு, தாய் தந்தைக்கு மருத்துவ செலவுகள் போன்ற சாதகமற்ற, அனுகூலமற்ற பலன்களை கடக ராசிக்காரர்கள் சந்திப்பார்கள்.. எல்லா ராசிகளுக்கும் நல்ல பலன்களை எழுத முடியாது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஜாதகம் எப்போதுமே சாதகமாக சொல்ல முடியாது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்..
இந்த நிலைமை எல்லாம் உங்களுக்கு 20. 11. 2020 வரைக்கும்தான் .அதற்கு மேல் ஒரு உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு குருபகவான் வந்து விடுவார் ..அப்போது அவர் சனியுடன் சேர்ந்து சனியை நல்லவராக்கி, சனியை சுபத்தன்மைபடுத்தி , தானும் நீசபங்கராஜயோகத்தால் பலம் பெறுவார்.. கோடி தோசங்களை போக்கும் குருபகவான், குணப்படுத்தக்கூடிய குருபகவான் உங்கள் ராசியை பார்த்து விடுவதால் உங்களுக்கு வரக்கூடிய அத்தனை பிரச்சினைகளையும் ,சனியால் வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளையும், குருபகவான் 20 .11 2020 க்கு மேல் விலக்கி விடுவார்..
இரண்டரை வருடங்களுக்கும் இதே பலன் தானா?? என்று கேட்டால் இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்… சனியுடன் எப்போதெல்லாம் குரு இணைகிறாரரோ? புதன் ,சுக்கிரன் சனியுடன் கோச்சாரத்தில் இணையக் கூடிய காலத்திலும், புதன் சுக்கிரன் சனியை பார்க்கக்கூடிய காலத்திலும், வளர்பிறை சந்திரன் எப்போதெல்லாம் சனியுடன் இணைகிறாரோ? அவரை பார்க்கிறாரோ? அப்போதெல்லாம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்..
உங்கள் லக்னத்துக்கு யோகத்தை தரக்கூடிய 1 ,5, 9, 10 ஆம் அதிபதிகளின் தசை, அல்லது புத்திகள் நடக்கும்போது மேற்சொன்ன சாதகமற்ற பலன்கள் நடக்காது.. நல்ல பலன்களும் நடக்கக் கூடும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடக ராசிக்காரர்கள் பெரிசா கஷ்டப்படவே இல்லை.. தசாபுத்தி மோசமாக இருந்த காலகட்டத்தில் கூட குரு பலம், சனி பலம்,ராகு கேது பலத்தால் அனைத்தையும் சமாளித்து கொண்டார்கள்.. இப்போது கடக ராசிக்காரர்கள் ஜாதகம் பார்க்க தொடங்கி உள்ளனர்…
ராசிபலன்கள் என்பது ஒரு பொதுப் பலன்கள் தான்… ஒரு முப்பது சதவீதம் மட்டுமே பொருந்தி வரும் .. தசாபுத்தி நன்றாக இருந்தால் கோட்சார பலன்கள் என்று சொல்லப்படக்கூடிய ராசிபலன்கள் பெரிய அளவில் பாதிக்காது..தசாபுக்தியும் மோசமாக இருந்து கோட்சார மும் மோசமாக இருந்தால் சாதகமற்ற பலன்கள் மிக அதிகமாக நடக்கும். கோட்சாரமும், ,தசாபுத்தி மும் நன்றாக இருந்தால் நல்ல சாதகமான பலன்கள் அதிகமாக நடக்கும்..
பரிகாரமாக தாயுள்ளம் கொண்ட காஞ்சி காமாட்சி ,மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி போன்ற மூலஸ்தானம் அம்பாளாக உள்ள கோவிலுக்கு சென்று வெள்ளை கலரில் மாலை அணிவித்து, மல்லிகை பூ மாலை, வெண்தாமரைப் பூ மாலை அணிவித்து ,வெண்பட்டு உடுத்தி, வெள்ளை கலர் ஸ்வீட்ஸ் அவருக்கு படைத்து, கல்கண்டு பொங்கல் வைத்து ,நிவேதனமாக படைத்து, 2 நெய் விளக்கு போட்டு வழிபட்டு வருவது பரிகாரம் ஆகும்.
பௌர்ணமி கிரிவலம் சென்று வர பரிகாரம் ஆகும்.. ஆறுமாதம், ஒரு வருடத்திற்கு ஒருமுறை திருப்பதி அல்லது திங்களூருக்கு உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய அன்று சென்று வருவது பரிகாரமாகும்..