மீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

4,284

உங்கள் ராசிநாதன் குருபகவான்..குருபகவானின் குணத்தை கொண்ட மீனராசியினர் நேர்மையானவர்கள்.

இதன் சின்னம் இரட்டை மீன்களை கொண்டது என்பதால் கழுவுற மீன்களில் நழுவுற மீன்கள் இவர்கள்.. நல்ல நெறிகளை கொண்ட இவர்கள் தன்னடக்கம் கொண்டவர்கள்.. மீனம் நீர் ராசி என்பதால் சிலருக்கு தண்ணீரில் நீந்துவது ரொம்ப பிடிக்கும்.. குளிர்ச்சியான ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ், இளநீர் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்..

ஆன்மீக எண்ணம் , நல்ல நெறி, நல்ல நடத்தை, அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய எண்ணம் ,ரட்சித்தல், பெருந்தன்மை போன்ற நல்ல குணங்களை கொண்ட மீன ராசியினருக்கு தற்போது நடந்த சனிப்பெயர்ச்சி என்ன மாற்றங்களை தரப்போகின்றது என்று பார்ப்போமானால்

பொதுவாக சனிபகவான் ராசிக்கு மூன்று ,ஆறு, பதினொன்றாம் இடங்களில் வரும் போது மட்டுமே அவரால் நன்மைகள் அனேகம் இருக்கும்.வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா

“ஆறு,பன்னொன்பான் மூன்றில்
அந்தகன் நிற்குமா யின்:
கூறு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்;
குறைவில்லா செல்வம் உண்டாகும்;
ஏறு பல்லக்கும் உண்டாகும்.;
இடம் பொருளே வலுவுண்டாகும்;
காறுபாலஷ்ட லட்சுமி யோகம் உண்டாகும் தானே”;

சனி பகவானின் பெயர்ச்சியால் நல்ல தனவரவுகள் இருக்கும்.. பொன் பொருள் சேர்க்கை எல்லாம் உண்டாகும்.. அதாவது நகை,நட்டு எல்லாம் எடுக்க முடியும்.. கார்,பைக் போன்ற வாகனங்கள் வாங்க முடியும்… இடம் வாங்கறது, வீடு கண்டது மாதிரியான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்..

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் தொழிலில், வியாபாரத்தில் நிறைய பிரச்சினை களை தந்துவந்தார்…
தற்போது உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரக்கூடிய சனிபகவானால் தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் ,முட்டுக்கட்டைகள் எல்லாம் விலகி தொழில், வியாபாரம் செழிக்க இருக்கிறது..லாப மேன்மைகள் வர இருக்கின்றது.

பணவரவுகளுக்கு தடையில்லை.. பணம் நிறைய வந்து பையை நிரப்பும்.. தண்டச் செலவுகள் குறைந்து உபரி பணம் மிச்சமாகி பணத்தை சேமிக்க முடியும்.
பதினொன்றாம் இடம் என்பது நோய் எதிர்ப்புச் சக்தியைக் தரக்கூடிய பாவகம் என்பதால் இதுவரை ஏதாவது நோய் இருந்தாலும் அந்த நோய் குணமாகும்..

முதல் வாழ்க்கை சிக்கலாகி, முறையாக பிரிந்து இரண்டாம்
வாழ்க்கைக்கு முயற்சி செய்யக்கூடிய மீனராசி நண்பர்களுக்கு இரண்டாம் வாழ்க்கை நன்றாக அமையும்.. ஏனென்றால் பதினொன்றாம் பாவகம் அதிபலம் பெறுவதால் மீனராசியை சார்ந்த நண்பர்கள் சிலருக்கு இருதார அமைப்பு இந்த காலகட்டத்தில் இருக்கிறது. (சுய ஜாதகத்தில் ஏழாம் இடம் கெட்டு ஏழாமிடத்தை காட்டிலும் பதினொன்றாம் மிக அதிகமாக வலுத்திருந்திருக்கும் ஜாதகருக்கு இந்த காலகட்டத்தில் இரண்டாவது திருமணம் நடக்கும்)

அதாவது கோட்சாரம் என்பது ,தசைநாதன், புக்தி நாதன் சுட்டி காட்டும் ஒரு சம்பவம், ஒரு செயல் எப்போது நடக்கும் என்பதை துல்லியமாக சுட்டிக்காட்ட நாம் கோட்சாரத்தை கண்டிப்பாக பயன்படுத்தியே ஆகவேண்டும்..இப்ப உதாரணமாக ஒருவருக்கு ஐந்தாமிடம், ஐந்தாமிடத்தோடு சம்பந்தப்பட்ட தசை, அல்லது புக்தி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.. அப்போது கோட்சாரத்தில் ராசிக்கு ஐந்தாமிடத்தையும், லக்னத்துக்கு ஐந்தாமிடத்தையும் குருபகவான் பார்த்தால் ,கண்டிப்பாக அந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதியாகிவிடும்.

தற்போது உங்கள் ராசிநாதன் குருபகவான் பத்தில் ஆட்சி பலம் பெற்றிருப்பது உங்களுக்கு ஒரு பலத்தை கொடுத்து விடுகிறது.உங்களுக்கு ஒரு சுயபலத்தை ,தன்பலத்தை தந்து விடுகிறது.. நீங்கள் தன்னம்பிக்கை யுடன் இருப்பீர்கள்.. உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, கிடைத்து உத்வேகத்துடன் காரியங்களை ஆற்றுவீர்கள். காரிய வெற்றி கிடைத்து விடும்.சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

குருபகவான் பத்தில் பலமாக இருந்து நான்கை பார்ப்பதால் சிலர் கார் மாதிரியான வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. குரு பகவான் பத்தில் இருந்து ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால் நல்ல தனவரவுகள்
இருக்கும்.. குடும்ப ஒற்றுமை அதிர்ஷ்டங்களுக்கு குறைவிருக்காது.. வாக்கு பலம் கூடும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி கொள்ள முடியும்.. குருபகவான் ஒன்பதாம் பார்வையாக ஆறை பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும்.

அடுத்த வருடமும் குருபகவான் அதாவது 20.11.2020 க்கு மேல் குருபகவான் பதினொன்றாம் இடத்தில் நீசபங்க ராஜயோகம் பெற்று லாபாதிபதியுடன் இணைந்து சஞ்சாரம் செய்வதாலும், ராகு கேதுக்கள் 23.9.2020 அன்று முதல் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஒன்பதாம் இடங்களில் சஞ்சாரம் செய்வது போன்றவை உங்களுக்கு சாதகமான பல நல்ல அம்சங்களாகும்..
நிகழ்காலம் மட்டும் அல்ல.எதிர்காலமும் மிக நன்றாகவே உள்ளது.

இதுவரை ராகு ,கேதுக்கள் நான்கு மற்றும் பத்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு அலைக்கழிப்புகளை தந்தனர். இந்த வருட இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஆகி இனி அலைக்கழிப்புகளும் இருக்காது.. ராகு பகவான் மூன்றில் அமர்ந்து அவரும் அவர் பங்குக்கு பல சகாயககளை செய்கிறார்.

எதிர்காலத்தில் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு மீனராசியினர் தசாபுத்தி சரியில்லாத அமைப்பாக இருந்தாலும் கோட்சார பலத்தின் காரணமாக சமாளித்து கொள்வார்கள்.. புதிய தொழில் முயற்சிகள் செய்யலாம்.. ஆபரணங்கள் வாங்கலாம்.வீட்டில் கல்யாணம், காதுகுத்து ,வளைகாப்பு சீமந்தம் ,திரட்டி போன்ற சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும்… குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதுவரை நோய் தொந்தரவுகளால் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு ராசிநாதன் பலத்தால் நோய் நீங்கும்..
மாணவர்கள் நன்கு படித்து நல்ல தேர்ச்சி பெறுவர். மாணவர்களுக்கு படித்து முடித்தபின் “கேம்பஸ் இன்டர்வியூ” இல் நல்ல வேலை கிடைத்து விடும். கணவன் மனைவி உறவு மிக நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் குடும்ப தலைவிக்கு வேலைப்பளு குறையும். நேரம் நன்றாக இருப்பதால் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யலாம்.இப்போது உங்களுக்கு நடக்கும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றங்களை தரக்காத்து கொண்டு உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இருக்கும். பதவி கிடைக்கும்.. சிலருக்கு மந்திரிபதவியே கிடைக்கும்.
விவசாயிகளுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டு அதிக மகசூல் கிடைத்து நல்ல லாபம் பெறுவர். சுய ஜாதகத்தில் நான்காம் இடம், அதிபதி, சுக்கிரன் தசை புக்தி நடைபெறும் சிலருக்கு ” சொந்தவீடு “என்னும் பாக்கியம் உறுதியாக கிடைத்துவிடும்.. கடன் இருந்தாலும் ஆண்டுகிரகங்களின் அற்புதமான சஞ்சாரத்தால் கடனை நீங்கள் அடைத்து மிச்சக்கை ஆகிவிடுவீர்கள். இந்த ராசியை சேர்ந்த சிலருக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும்..
ஏனென்றால் எதிர்காலத்தில் குருவும் சனியும் மகரராசியில் இருந்து சஞ்சாரம் செய்கிறார்கள்

பொதுவாக இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு மீனராசியினர் மிக மிக நன்றாக இருப்பீர்கள்.. உங்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும்.. மீனராசிக்காரர்கள் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு ஜோதிடம் பார்க்க தேவையே வராது

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More