சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 ரிஷப ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 to 2023 Rishbha Rasi by Astro Viswanathan

ரிஷபம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

ரிஷப ராசி நிலராசி … எனவே பூமியைப் போன்ற பொறுமையை உடையவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்., உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் ஏதாவது ஒரு கலையில் உங்களுக்கு ஈடுபாடு வரும். உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் ஆவதால் நீங்கள் எந்த காரியத்தையும் மனத் துணிவோடு நிறைவேற்றி விடுவீர்கள்.. மன உறுதியும் தாய் பாசமும் உடைய உங்களுக்கு இதுவரை சனிபகவான் எட்டாம் இடத்தில் அஷ்டமச் சனியாக சஞ்சாரம் செய்து வந்தார்.. இதுவரை எண்ணற்ற அல்லல் தொல்லைகளை நீங்கள் அனுபவித்து வந்தீர்கள்..

எட்டாமிடம் கண்டம் என்றறே சொல்லப்பட்டது ..அந்த கண்டம் என்று சொல்லப்படக்கூடிய நான்கு, எட்டில் அதாவது
“கண்டங்கள் நான்கில் எட்டில்
கருதியே சனி சேய் நிற்க,
தெண்டங்கள் மிக உண்டாகும்
திரவியங்கள் நாசமாகும்
கொண்டதோர் குடும்பம் வேராகும்
குறித்திடும் செட்டு நஷ்டம்;
பண்டுல நாடுவிட்டு, நகரம் விட்டு
பரதேசம் போவான் என்று சொல்லு”

அதாவது ராசிக்கு எட்டாம் இடத்தில்அஷ்டமசனி யாக சனி சஞ்சாரம் செய்து வந்த கடந்த இரண்டே கால் வருடங்களாக உங்களுக்கு நிறைய தெண்டச்செலவுகள் ஏற்பட்டு இருக்கும்.
ஆஸ்பத்திரி செலவுகள்,வீண் விரையங்கள் கண்டிப்பாக ஏற்பட்டு இருக்கும் .. கண்டிப்பாகவிரும்பாத இடத்திற்கு இடம் மாற்றம் ஏற்பட்டு , அதன் மூலமாக நீங்கள் கஷ்டத்தை அடைந்து இருப்பீர்கள்… உங்களுக்கு வருமானத்திற்கு மேல செலவை கொடுத்து , பற்றாக்குறையை கொடுத்து , கடனை ஏற்படுத்தி ,உங்களை அல்லாட வைத்திருப்பார் சனீஸ்வர பகவான்..

அஷ்டமசனி காலத்தில் கடுமையான மன அழுத்தங்களை தரவேண்டும் என்று விதி இருப்பதால் சிலருக்கு நெருங்கிய நண்பரின், உயிர் நண்பனின் பிரிவு, தாய், தந்தை பிரிவு, மனைவி, அல்லது காதலி பிரிவு என்று அவரவருக்கு தக்கபடி ஏதாவது ஒரு பிரிவை ஏற்படுத்தி உங்களுக்கு கடுமையான மன அழுத்தங்களை உண்டு பண்ணியிருப்பார்.

இதை நான் அனுபவபூர்வமாக அனுபவித்துத்தான் எழுதுகிறேன்..அஷ்டம சனியில் தந்தை இழப்பு, தாயார் பகை, தாயாருக்கு மருத்துவச் செலவுகள், எனக்கு என் பையனுக்கு மருத்துவ செலவுகள் , மனைவிக்கு மருத்துவ செலவுகள் என்று என்னை டெய்லி மும் பிரச்சினை யோடுதான் வாழ வைத்தது இந்த அஷ்டமசனி. நான் ரிஷப ராசி.. ரோகிணி நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது…
நான் இதையெல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்பார்த்து தான் காத்திருந்தேன்.

ஆனாலும் ரிஷப ராசிக்கு சனி தர்ம கர்மாதிபதி என்பதால் பெரிய அளவில் கெடுபலன்கள் ஏதும் இல்லை என்றே சொல்லுவேன்.. உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு சனி நண்பர் என்ற வகையில் உங்களை உங்களுக்கு எந்த பாதிப்பும் தராமல் உங்களை சுற்றி உள்ள உறவுகளை பாதித்து அதன் மூலமாக உங்களுக்கு மன அழுத்தங்களை சனி தந்தார்..

உங்களுக்கு யோகாதிபதியான சனியே உங்களை இந்த அஷ்டமசனி யில் இந்த பாடுபடுத்தியிருக்கும்போது மேச,கடக, சிம்ம, விருச்சிக ராசிக்காரர்களை சனி அஷ்டமசனியில் என்ன பாடு படுத்தி யிருப்பார் என்று நினைத்து பார்க்கும் போது, “அடிச்ச கைப்பிள்ளைக்கே இத்தனை காயமுனா; அடிவாங்குனவங்களாம் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்று நீ நினைக்கிற: என்ற வடிவேலு காமெடி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது..

மேச, கடக, சிம்ம,விருச்சிக, ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி அஷ்டமசனியில் விபத்து, அறுவைசிகிச்சை ,ஜெயில் , ஏமாற்றம், அவமானம் ,அசிங்கம் ,கேவலம், ஊரை விட்டு ஓட்டுதல் போன்ற கொடுமையான பலன்களை ஜாதகனுக்கே ஏற்படுத்தி இருப்பார்..ஏன்னா சூரிய சந்திர, செவ்வாய் இவர்களை சனி ஜென்ம பகையாக நினைப்பார்.. சூரிய ,சந்திர செவ்வாய் மேல் உள்ள பகையை இந்த மேச, கடக, சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் மேல் காட்டவே செய்கிறார். இந்த ராசிக்காரர்களை சனி வச்சு செய்வார்… ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ள மற்றவர்களை சனி பாதித்து அதன் மூலம் உங்கள் மனதை காயப்படுத்துவார். உள்காயம்..வெளியே தெரியாது.

இப்படிப்பட்ட தொல்லைகளை அளித்து வந்த சனி விலகுவதே உங்களுக்கு பெரிய யோகம்..சாரி நமக்கு பெரிய யோகம் என்றே சொல்லுவேன்.. இதுவரை எட்டில் அஷ்டமசனி யாக இருந்த சனி விலகி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கு செல்ல இருக்கிறார். பாக்கியாதிபதி பாக்கியத்தில் ஆட்சி பெறுவது, இரண்டாம் இடத்துக்கு குரு பார்வை இருப்பது போன்றவற்றால் நல்ல பொருளாதார முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்..

இதுவரை சனி எட்டில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்த்து தொழிலைக் கெடுத்து தொழிலே இல்லாமல் செய்திருப்பார் இந்த சனீஸ்வர பகவான்.. தொழிலுக்கு தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தி தொழிலை கெடுத்து இருந்து இருப்பார் இந்த சனீஸ்வர பகவான்… வேலை இல்லாமல் பணத்துக்கு கஷ்டப்பட்டு இருந்திருப்பீர்கள். தொழிலில் சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி தொழில் முன்னேற்றத்தை தடுத்திருப்பார் இந்த சனீஸ்வர பகவான்..வேலைக்கு செல்ல விடாமல் வேறு மாதிரியான பிரச்சனைகளை தந்திருப்பார்.. சிலருக்கு மேலதிகாரியுடன் ஒத்துப் போகாமல் செய்து, உடன் பணிபுரிபவர்களுக்கு ஒத்து போகாமல் செய்து அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்பட்டு வேலையே விட்டு விட்டு இருப்பார்கள்..

அவர்களுக்கெல்லாம் இந்த சனிப்பெயர்ச்சி ஒரு பொற்காலம் என்றே அழைக்கலாம்.. பத்தாம் இடத்து ஆதிபத்தியம் பெறும் சனி ஒன்பதில் ஆட்சி பெறுவதால் நல்ல வேலை கிடைத்து விடும்.. குருபகவான் வலுத்து இரண்டை பார்ப்பதால் தொழில் மூலம் நல்ல பணவரவுகளும் கிடைத்துவிடும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு குறிப்பாக தந்தையின் தொழிலை செய்து வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல முன்னேற்றம் இருந்தே தீரும்..

நான்காம் இடத்துக்கு குருபார்வை இருப்பதாலும் , பன்னிரண்டாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதாலும்,அஷ்டமசனி விலகிவிட்டதாலும் சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும்.. அதற்கு தசாபுத்தி யும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணா நல்ல அழகான சொந்த வீடு உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

பன்னிரண்டாம் பாவத்தை, நான்காம் பாவத்தை, குடும்பத்தை குரு பார்ப்பதால் திருமணமாகாத ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் நடந்துவிடும் அஷ்டமச் சனி நடந்து கொண்டிருந்ததால் இதுவரை திருமணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. இனி எடுத்த காரியம் கைகூடும்.. காரிய வெற்றி உண்டாகும்..

இதுவரை இரண்டு மற்றும்,எட்டாம் இடங்களில் சஞ்சாரம் செய்து வந்த ராகு, கேதுக்கள் , 23. 9. 2020 இல் ராகு கேதுக்கள் பெயர்ச்சியாகி ஒன்று ஏழில் சஞ்சாரம் செய்வார்கள்.. அந்தக் காலகட்டத்தில் கணவன் மனைவி அந்நியோன்யம் குறைவுபடும்.. அப்போது மட்டும் குடும்பத்தில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து ,அனுசரித்து செல்ல, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

பொதுவாக சனீஸ்வர பகவான் பார்க்கும் இடங்களை கெடுப்பார் என்று ஒரு விதி இருந்தாலும் அது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது. நமது ராசியான ரிஷப ராசிக்கு சனி ராஜ யோகாதிபதியாக வருவார்.. அதனால் சனீஸ்வரர் பார்க்கும் இடங்களான 3, 11, 6 ம்மிடங்கள் வலுப்பெறும்.

சனி ஒன்பதாம் இடத்தில் இருந்து மூன்றை பார்ப்பதன் மூலம் காரிய வெற்றி உண்டாகும் ..தைரியத்துக்கு குறைவிருக்காது.. சனியால் பல சகாயங்கள் உண்டாகும்.. சகோதர வழி உதவிகள் உண்டாகும்..

சனி தனது மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு லாபம் அதிகமாக வந்து, பணம் உங்கள் பையை நிரப்பும்… லாப மேன்மைகள் உண்டாகும்.. பயிர்த் தொழிலில் லாபம் உண்டாகும். குறைந்த முயற்சியில் அதிக லாபம் உண்டாகும் போர்வெல் போட்டால் தண்ணீர் கிடைக்கும்..

சனி 6ம் இடத்தை பார்ப்பதால் சிலருக்கு சுபக்கடன் கிடைக்கும். அதாவது வீட்டுக் கடன் ,தொழில் கடன், பயிர் கடன், வாகன கடன் போன்ற கடன்கள் கிடைத்து அதன் மூலமாக முன்னேற்றம் இருக்கும்..

ஆக மொத்தத்தில் இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளும் நல்ல காலமாக இருக்கப்போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.. உங்களுக்கு கடுமையான அஷ்டமச்சனி முடிந்தது ஒரு பெரிய வரப்பிரசாதம், ஒரு திருப்புமுனையாக இருக்கும் (turning point) என்று சொல்லி ,கடந்த இரண்டரை ஆண்டுகளில் இருந்த கஷ்டம் இனி எப்போதும் இருக்காது என்று சொல்லி, தசாபுத்திகள் நன்றாக இருந்தால் நான் சொன்ன பலன்கள் இன்னும் கூடுதலாக
நடைபெறும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: