குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021 - கும்ப ராசி

கும்ப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

கடந்த காலத்தில் மூன்று வருட காலமாக ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் கும்ப ராசிக்கு மிக அற்புதமாக இருந்து வந்தது..கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் சுப காரியங்கள் நடந்து வீட்டில் உறவினர் வருகையால் வீடு களை கட்டியிருந்தது.

சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2020

கும்ப ராசிக்காரர்கள் பலர் கடந்த மூன்று வருடங்களில் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து சொந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள். பலர் புது கார் வாங்கி விட்டார்கள். உபரி பணம் மிச்சமாகி இடம் வாங்கறது, பூமி வாங்குவது போன்ற நல்ல பலன்களை கடந்த மூன்று வருடங்களாக கும்ப ராசிக்காரர்கள் அடைந்து வந்ததை நான் இங்கிருந்து பார்த்து வந்தேன்.

இதுவரை ஆண்டு கிரகமான சனி பகவான் 11-ஆம் இடத்தில் அமர்ந்து தோப்புத்துறவுகளை உண்டு பண்ணினார். நீரோடும் பூமி, வயல் வாய்க்கால்களை வாங்குவதற்கு பதினொன்றாம் இடத்தில் சுபத்தன்மை அடைந்த சனிபகவான் அருள் புரிந்தார். கடந்த காலத்தில் பதினொன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவானும், சனி பகவானும் பல சகாயங்களை காரிய வெற்றிகளையும், தாராளமான பண வரவுகளையும் அளித்து வந்தார்கள்.

இவ்வாறு வாழ்க்கை நல்ல முறையில் போய் கொண்டிருந்தபோது கதையில் திருப்புமுனை ஏற்பட்டு வில்லன் ஏழரைச்சனி உங்கள் வாழ்க்கையில் உள்ளே நுழைகிறார். எப்போது?? கடந்த 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் 11-ஆம் இடத்தில் இருந்து மாறி 12ஆம் இடமான விரய ஸ்தானத்துக்கு மாறி ஏழரைச் சனியாக , விரையச்சனியாக மாறினாலும் கும்ப ராசிக்கு குரு பகவான் 11-ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று மூலத்திரிகோண வலுப்பெற்று, வலுவாக இருந்ததால் ஏழரைச் சனியால் வரக்கூடிய அத்துணை தொல்லைகளையும் குருபகவான் விலக்கிவிட்டபடியால் கும்ப ராசியினருக்கு ஏழரைச்சனி போலவே தெரியவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

ஆனால் வரக்கூடிய 2020 நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல்ஒன்றேகால் மணி சுமாருக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்துக்கு மாறுகிறார்.ஏற்கனவே சனிபகவானும் அங்கே ஏழரைச் சனியில் விரயச் சனியாக ஜனவரி மாதம் 24ம் தேதி முதல் சஞ்சாரம் செய்து வருகிறார்.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2020

இதனிடையே கும்ப ராசிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நல்ல பலன்களை அளித்து வந்த ராகு, கேது க்களும் முறையே ராசிக்கு நான்கு, மற்றும் ராசிக்கு பத்தாம் இடத்துக்கும் கடந்த 2020 செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஷிப்ட் ஆகி விட்டனர். இது ராகு மற்றும் கேது பகவானுக்கு உகந்த இடங்கள் இல்லை.

இவ்வாறாக ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் சரி இல்லாத காரணத்தினாலும் ஏழரைச் சனி கும்ப ராசிக்கு தொடங்கிவிட்டபடியாலும், குணப்படுத்தக்கூடிய குருபகவானும்,, கோடி தோஷங்களை போக்கக்கூடிய குருபகவானும் விரய ஸ்தானத்தில் நீசம் பெற்று விட்ட காரணத்தினாலும் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்த்தோமானால் கும்ப ராசிக்கு பெரிய அளவில் நல்ல பலன்களை சொல்வதற்கு இல்லை. எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை சொல்ல முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை யாகும்.

எதிர்காலத்தில் வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தால் 2000 ரூபாய் செலவாகும். பற்றாக்குறையாக ஆயிரம் ரூபாய் வருவதால் கடன் வாங்க வேண்டி வரும்.

சனி பகவானும் குரு பகவானும் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ராகு கேது முறையே 4 பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். சாதாரண ஒரு வேலைக்கு கூட பத்து முறை அலைய வேண்டிவரும். எந்த ஒரு காரியமும் ஈசியாக நடக்காது. கடும் அலைச்சலின் பேரில்தான் நடந்து முடியும்.

சொந்த தொழில் செய்ய வைத்து, செய்யும் தொழிலில் லாபம் குறைந்து நஷ்டம் ஏற்பட்டு ஏழரைச் சனியில் நடுப்பகுதியான ஜென்ம சனியில் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். தொழிலில் போட்டியாளர்கள் அதிகமாகி

லாபம் பெருமளவில் குறையும். நிறைய நம்பிக்கைத் துரோகங்களை இந்த ஏழரைச் சனி கும்ப ராசிக்காரர்களுக்கு கட்டாயம் தரும் என்பதால் யாரையும் இந்த காலத்தில் நம்ப வேண்டாம்.

சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி அதன் மூலமாக ஏழரைச்சனி என்றால் என்ன என்று உங்களுக்கு சனிபகவான் புரிய வைப்பார். பண விஷயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ரொம்பவும் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

எந்த மாதிரி என்றால் 2018 ல் கேரளாவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தார்.

அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தார்.

அப்போது அவருக்கு ஜென்மச்சனி. அவருடைய மூல நட்சத்திரத்தில் சனிபகவான் சென்றுகொண்டிருந்தார். அவர் ஒரு இடத்தை விற்று 20 லட்சம் கையில் ரொக்கமாக வைத்திருந்தார். அதை அவருடைய நண்பரான மில் ஓனருக்கு கடனாகக் கொடுத்து இருந்தார். இவருடைய கெட்ட நேரம் அந்த மில் ஓனருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு அந்தமில் ஓனரே ,கேரளா லாட்டரி சீட்டு விற்கும் அளவிற்கு நடுத்தெருவுக்கு வந்துவிட்டார். இவருடைய பணம் வரும் என்ற நம்பிக்கையே அந்த ஜாதகருக்கு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. கடுமையான மன அழுத்தத்திற்கு அந்த ஜாதகர் உள்ளாக வேண்டியிருந்தது. இவரும் அந்த மில் ஓனரும் மிகச்சிறந்த நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏழரைச்சனியில் சொத்தை விற்பனை செய்ய கூடாது. கைக்கு வரும் காசு எப்படி போகுது என்றே தெரியாது.பஞ்சாய் பறந்து விடும்.

உங்கள் இடமோ, வீடோ,தோட்டமோ குறைந்த விலைக்கு போகும். நீங்கள் கொடுத்த பிறகு , விற்ற பிறகு அந்த இடத்தின் மார்க்கெட் ரேட் உச்சத்தை தொடும்.உங்களுக்கு இவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லையே என்ற மனக்கவலை வந்து சேரும்.

இந்த ஏழரை சனி காலத்தில் யாருக்கும் பிணை போடக்கூடாது ஜாமீன் போடக்கூடாது. கடன் வாங்கி கடன் கொடுக்கக்கூடாது. நீங்கள் வட்டி கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலையும், நீங்கள் கடன்காரனாக வேண்டியும் ஏற்படும். உயிர் நண்பனுக்கு உதவி செய்ய போய் நீங்கள் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி 2020

இந்த குருபகவான் பெயர்ச்சியால் பன்னிரண்டாம் இடம் , பன்னிரண்டாம் அதிபதி சுபத்தன்மை அடைவதாலும், குருபகவான் நான்காம் இடத்தை, ஆறாம் இடத்தை பார்வையிடுவதால் கடன் பட்டு வீடு, இடம் வாங்கமுடியும்.வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல காலமும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு சாதகமற்ற பலன்களும் உண்டாகும்.வீடு ஒரு 25 லட்சத்தில் முடிக்கலாம் என்று நினைத்து ஆரம்பித்து 50 லட்சத்தில் வந்து முடியும். பிரம்மாண்டமாக வீடு கட்டி முடித்தாலும் அதனால் வரும் கிறக்கம் ஒரு ஐந்து வருடத்திற்கு நீடிக்கும்.

இந்த காலகட்டத்தில் பேராசை படாமல், எதிலும் அகலக் கால் வைக்காமல், இருப்பதை கொண்டு திருப்தி பட்டுக்கொண்டு நேர்மையாக இருந்தாலே ஏழரைச் சனி உங்களை ஒன்றும் செய்யாது.

இந்த ஏழரைச்சனியில் அரசு அதிகாரி ஒருவர் பேராசைப்பட்டு, முறைகேடுகளில் ஈடுபட்டு சிறை, ஜெயில், கம்பி எண்ணி, அவமானம் அசிங்கம், கேவலம் போன்ற அமைப்புகள் ஏற்பட்டு ஏழரைச்சனி முடிந்த பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். எனவே எப்போதும் நேர்மையாக, விதிகளுக்கு உட்பட்டு சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வந்தால் ஏழரைச்சனி பெரிய அளவில் பாதிக்காது.

பொதுவாக ஏழரை சனி நடக்கும் போது நல்ல தசா புத்திகள் நடந்தால், குறிப்பாக லக்னாதிபதி தசை ,பஞ்சமாதிபதி தசை, பாக்கியாதிபதி தசை போன்ற லக்ன யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது ஏழரைச் சனியில் வீடு கட்டறது, ஓடி ஓடி சொத்து வாங்கறது, பதவி உயர்வு, சம்பள உயர்வு ,வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிப்பது போன்ற நல்ல பலன்களும் ஏழரைச் சனியில் நடப்பது உண்டு. ஏழரை சனி பெரிய அளவில் பாதிக்குமா அல்லது மிகப்பெரிய யோகத்தை தருமா என்பது அவர் அவர்களின் சுய ஜாதகத்தைப் பொறுத்தது.

சுய ஜாதகத்தில் சனி பகவான் 3 ,6, 10, 11 போன்ற உப ஜெய ஸ்தானங்களில் இருந்தாலும், கேந்திரங்களில் இருந்து குரு முதலான சுபர்களின் பார்வையில் இருந்தாலும், லக்ன சுபர்களின் பார்வையில் இருந்தாலும் ,சுய ஜாதகத்தில் சனி பகவான் அதிக சுபத்தன்மை அடைந்து காணப்பட்டாலும், ஏழரைச் சனி பெருமளவில் கும்ப ராசிக்காரர்களுக்கு கெடுதல்களை தராது. மாறாக நன்மைகள் நிறைய இருக்கும்.

இந்த ஏழரைச்சனியில் அளவுக்கு மீறி, தகுதிக்கு மீறி ,கடன் வாங்காமல் இருப்பது ரொம்ப நல்லது. ஜென்ம சனி வரும்போது கடன்காரன் எல்லாம் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு , அசிங்க அசிங்கமா பேசிவிட்டு போவதால் ரொம்பவே அவமானம் ஏற்படும். கடுமையான மன அழுத்தம் ஏற்படும்.தூங்க முடியாது.

இளவயது, பருவ வயது, டீன் ஏஜ் ஆண் பெண் இருபாலரும் காதலிக்காமல் இருப்பது ரொம்பவே நல்லது. இல்லாவிட்டால் ஏழரைச் சனியில் ஜென்ம சனி வரும்போது அந்த காதல் பிரேக் அப் ஆகி பைத்தியம் பிடிக்க வைக்கும். இந்த நேரத்தில் அறிமுகமாகும் நபரால் ஜென்ம சனி வரும்போது தொல்லைகள் ஏற்படும்.எனவே புதியதாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடம் எச்சரிக்கை யாக இருப்பது ரொம்ப ரொம்ப அவசியம்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் படிப்பை தவிர்த்து விளையாட்டு, செல்போன் ,டிவி, பப்ஜி கேம், ஐபிஎல் கிரிக்கெட் என்று படிப்பை தவிர்த்து மனது வேறு வகையில் செல்லும் என்பதால் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். கும்ப ராசி மாணவர்களுக்கு தற்போது நடக்கும் தேர்வுகளில் எதிர்பார்த்ததை விட 10 ,15 மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும்.

இந்த ராசியைச் சேர்ந்த குறிப்பாக சதயம் நட்சத்திரத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகமாக குறும்பு சேட்டை செய்யும். சமாளிக்கவே முடியாது. அந்த குழந்தைகளை பார்த்து கொள்ள நான்கு பேர் வேண்டும்.

ஏன் சதயம் நட்சத்திரம் அமைந்திருந்த குழந்தைகளைச் சொன்னேன் என்றால் அவர்களுக்கு இளம்பருவத்தில் ராகு தசையும் ,ஏழரைச் சனியும் சேர்ந்து நடக்கும் என்பதால் தான்.

இந்த ராசி அரசியல்வாதிகள் ஒரு 5 வருட காலத்திற்கு அரசியலை விட்டு கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. தங்களது திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது என்பதோடு மட்டுமில்லாமல் தேர்தல்களிலும் தோல்வி ஏற்படும். பதவி இறக்கம் ஏற்படும்.

இந்த ராசி விவசாயிகளுக்கு விவசாயத்தில் லாபம் குறைந்து முட்டுவலி செலவு அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும். தண்ணீர் வசதி குறைந்து காணப்படும். விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும். ஆண்டின் இறுதியில் வரவு செலவு கணக்கு பார்த்தால் அலைச்சல்தான் மிச்சமாகும்.

இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல குடும்ப ஒற்றுமை ஏற்படும். கொஞ்ச காலத்திற்கு பொறுமையாக இருப்பது ரொம்ப ரொம்ப அவசியம். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். அவர்கள் தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வீட்டிலும் வேலை பார்த்து கடுமையாக உழைத்தும் வீட்டில் அவர்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்காது. இவ்வளவு செய்தும் நமக்கு ஒரு நல்ல பெயர் இல்லையே என்று மன அழுத்தம் அவர்களுக்கு ஏற்படும். தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் இந்த ஏழரைச்சனியில் தலை தூக்கும். பெண்கள் அலுவலகத்தில் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல முடியாது.

உங்கள் ராசிக்கு ராகு கேதுக்களின் சஞ்சாரமும் அவ்வளவு சரியில்லாத காரணத்தால் ஆண் பெண் இருவருக்கும் வேலைப்பளு அதிகமாக அதிகரிக்கும். பிடிக்காத வேலையாக இருக்கும். பிடிக்காத மேலதிகாரி வந்து உங்களை டார்ச்சர் செய்வார். கூடுதல் பணிச்சுமை, டார்கெட் பிரச்சனையால் நீங்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரும். சிலர் இதனால் வேலையை விட்டுவிட்டு கையில் காசில்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக போராட வேண்டி வரும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டு விடாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. வேலையை விட்டு விட்டால் இன்னொரு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்.

ஆக மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்கள் எதிலும் எச்சரிக்கையாக ,நிதானமாக, நேர்மையாக ,பேராசை படாமல், அகலக்கால் வைக்காமல், யாரையும் நம்பாமல், சட்டம், விதிகளுக்கு உட்பட்டு நேர்மையாக இருந்தால் அடுத்து வரக்கூடிய காலங்களையும் நீங்கள் எளிதில் சமாளித்து மீண்டு விடலாம்.

இந்த ராசிக்காரர்கள் பரிகாரமாக சனிக்கிழமை சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும், இரண்டு நெய் விளக்கும் போட்டு வர பரிகாரமாகும். கால பைரவருக்கு சிவப்பு கலரில் மாலை அணிவித்து இரண்டு நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும்.

(சிவப்பு கலர் மாலை என்பது செவ்வரளி மாலை, செந்தாமரை பூ மாலை, சிவப்பு கலர் ரோஜா பூ மாலை ஆகும்.) அவர் அவர்களின் வயதுக்கேற்ப மிளகை எடுத்துக் கொண்டு ,உங்களுக்கு வயது 30 என்றால் 30 மிளகை எடுத்து ஒரு சிவப்பு துணியில் சிறு மூட்டையாக கட்டி, மண் அகல் விளக்கில் நெய்யில் நனைத்து நனைத்து மிளகு விளக்கு பைரவருக்கு சனிக்கிழமை சனிக்கிழமை போட்டு வர ஏழரைச்சனியால் வரக்கூடிய அத்துணை தொல்லைகளையும் விலக்கிக் கொள்ள முடியும்.

கும்ப ராசிக்காரர்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது? எதையெல்லாம் செய்யலாம் என்று எச்சரிக்கை செய்து இருப்பதால் கும்ப ராசிக்காரர்கள் இந்த ஏழரை சனி யை , விரைய குருவை எளிதாக சமாளித்து மீண்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உள்ளது. அதுமட்டுமல்ல உங்கள் ராசிநாதன் சனி என்பதால் உங்கள் ராசிக்கு அவர் பெரிய கெடுதல்கள் எதுவும் செய்துவிட போவதில்லை.விருச்சிக, மேச, கடக, சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி தந்த தொல்லைகளை, கஷ்டங்களை உங்களுக்கு தரமாட்டார். ஏனென்றால் அவர் உங்கள் ராசிநாதன். ராசிநாதன் சனி என்பதால் சில வாழ்க்கை பாடங்களை போதிக்கும் ஆசிரியராக இருந்து சனிபகவான் உங்களை நல்வழிப்படுத்துவார்.அதுமட்டுமின்றி உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் ஏழரைச்சனி மில் சுபவிரையங்கள் மட்டுமே இருக்கும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: